சிவசங்கர் பாபா மீது கூடுதலாக 3 போக்சோ வழக்குகள்

இதுவரை மொத்தம் 8 போக்சோ, ஒரு பெண் வன்கொடுமை வழக்கு பதிவு
சிவசங்கர் பாபா மீது கூடுதலாக 3 போக்சோ வழக்குகள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான சிவசங்கர் பாபா மீது, சிபிசிஐடி போலீஸார் மேலும் 3 போக்சோ வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் அமைந்திருக்கும் சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில், அந்தப் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் மீது சிபிசிஐடி போலீசார் 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்தனர்.

இதையடுத்து அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த புகார்களின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்குகளும், ஒரு பெண் வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதில் இதுவரை 2 வழக்குகளுக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் மேலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அளித்துள்ள புகாரின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகளை சிபிசிஐடி போலீஸார் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் சிவசங்கர் பாபா மீது இதுவரை 8 போக்சோ வழக்குகள், ஒரு பெண் வன்கொடுமை வழக்கு என மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.