கோவை வனக்கோட்டத்தில் 185 வகையான வண்ணத்துப் பூச்சிகள்!

வனத் துறையினர் - தன்னார்வலர்கள் நடத்திய ஆய்வில் தகவல்
கோவை வனக்கோட்டத்தில் 185 வகையான வண்ணத்துப் பூச்சிகள்!

கோவை வனக்கோட்டத்தில் எடுக்கப்பட்ட பறவைகள் மற்றும் பூச்சிகள் கணக்கெடுப்பில், மொத்தம் 238 வகையான பறவைகளும் 185 வகையான வண்ணத்துப் பூச்சிகளும் இருப்பது தெரியவந்துள்ளது.

Chandra

கோவை வனக்கோட்டத்தில் உள்ள மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் ஆகிய 7 வனச்சரகங்களில் உள்ள பல்வேறு வகையான பறவைகள், பட்டாம்பூச்சிகள் குறித்த கணக்கெடுப்பு 2 நாட்கள் நடைபெற்றன. மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமாரின் அறிவுறுத்தலின்படி, இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு (டிஎன்பிஎஸ்), கோயம்புத்தூர் நேச்சர் சொசைட்டி (சிஎன்எஸ்), டபிள்யு.டபிள்யு.எஃப் இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து, டிசம்பர் 25, 26 தேதிகளில் இந்தப் பணியை மேற்கொண்டன.

உதவி வனப்பாதுகாவலர்கள் சி.தினேஷ்குமார், எம்.செந்தில்குமார், வனச் சரகர்கள் மேற்பார்வையில் 68 தன்னார்வலர்கள், 42 வனப்பணியாளர்கள் அடங்கிய 14 குழுக்கள் இந்த கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டன. இதில், மொத்தம் 238 வகையான பறவைகள், 185 வகையான வண்ணத்துப் பூச்சிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கோவை மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார், “இவ்வாறு தொடர் கணக்கெடுப்புகளை நடத்தி எந்தெந்த இடங்களில், எந்த வகையான பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்வது வன மேலாண்மை திட்டமிடலுக்கு அவசியம். அதனால்தான் இந்தக் கணக்கெடுப்பை முக்கியத்துவம் கொடுத்து நடத்தி இருக்கிறோம்” என்றார்.

கணக்கெடுப்புப் பணியில் தங்களையும் இணைத்துக்கொண்ட சிஎன்எஸ் தலைவர் பி.ஆர்.செல்வராஜ், டிஎன்பிஎஸ் தலைவர் அ.பாவேந்தன், டபிள்யு.டபிள்யு.எஃப் ஒருங்கிணைப்பாளர் பூமிநாதன் ஆகியோர் நம்மிடம் பேசுகையில், “கணக்கெடுப்பில் தென்பட்ட பறவைகளில் 34 வகையான பறவைகள் குளிர்காலத்தில் இங்கு இடம்பெயர்ந்து வந்தவை. மூன்றாம் ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த கணக்கெடுப்பிலும், இதற்கு முந்தைய கணக்கெடுப்புகளிலும் பறவைகள், வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கை இந்தப் பகுதியில் ஆரோக்கியமான அளவில் உள்ளது.

VIJAYAKUMAR.R

தென்பட்ட பறவைகளில் பட்டைத்தலை வாத்து, குடுமிப் பருந்து, தீக் காக்கை, மலபார் குக்குறுவான், சாம்பல் தலை சின்னான், சாம்பல் தலை பூச்சிப் பிடிப்பான், மலை தகைவிலான் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. வண்ணத்துப் பூச்சிகளில் நீலகிரி டைகர், கலர் சார்ஜன்ட், சென்டார் ஓக்புளூ, மலபார் ஃபிளாஷ், பேன்டட் ராயல், புளுபார்டர்ட் பிளேன், டானி ராஜா உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. இவை இல்லாமல், கோவை வனக்கோட்டத்தில் முதல்முறையாக ‘காமன் டின்செல்’ வகை வண்ணத்துப் பூச்சி போளுவாம்பட்டி வனச்சரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in