‘அட்ரினல் அடிமைகள்’: அதிவேக வாசனால் நோகும் பெற்றோர்

‘அட்ரினல் அடிமைகள்’: அதிவேக வாசனால் நோகும் பெற்றோர்

மணிக்கு 250 கி.மீ வேக பயணம் என்பது ஒரு புல்லட் ரயிலின் சராசரி வேகத்துக்கு ஒப்பானது. இப்படியான அதிவேகத்தில் பைக்கில் பறப்பதை வீடியோ ஆதரத்துடன் யூடியூபில் பதிவேற்றி பிரபலமானவர் கோவையை சேர்ந்த டிடிஎஃப்.வாசன் என்ற இளைஞர். இவரை கண்மூடித்தனமாய் பின்பற்றும் ஆயிரக்கணக்கிலான இளைஞர்களால் தமிழகத்தின் நிகழ்கால கவலைகள் கணிசமாய் கூடியிருக்கின்றன.

சாலைகளை ஆக்கிரமிக்கும் சூப்பர் பைக்குகள்

தமிழகத்தின் பெரும்பாலான நகர சாலைகளில் 40 கி.மீ வேக பைக் பயணங்களே சாகசத்துக்கு ஒப்பானவை. இதுவே தேசிய நெடுஞ்சாலைகள் என்றால் அதிகபட்சம் 70 - 80 கி.மீ வேகத்துக்கு உகந்தது. இவற்றை மிஞ்சினால் வாகனத்தின் கட்டுப்பாடு கைமீறும் அபாயம் நேரலாம். சாலை விதிகளை பொருட்படுத்தாத சக வாகன ஓட்டிகள், பாதுகாப்பற்ற பாதசாரிகள், குறுக்கே பாயக் காத்திருக்கும் கால்நடைகள் என அதிவேக பைக் பயணிகளுக்கு வழியெங்கும் எமகிங்கரர்கள் காத்திருப்பார்கள். இந்த சாலைகளில் ஆரோகணிக்க, மிகச் சுலபமாய் 250, 350 கி.மீ வேகம் காட்டும் பைக்குகள் கடைகளில் குவிந்திருக்கின்றன. இவற்றை வாங்கித் தருமாறு பள்ளி - கல்லூரி வயது இளைஞர்கள் வீடுதோறும் ஒற்றைக்காலில் நிற்கிறார்கள்.

மாநகரப் பேருந்தில் பணிக்குச் சென்று திரும்பும் தகப்பன், கடன்பட்டாவது மகன் ஆசைப்படும் ரூ.1.5 லட்சம் பெறும் பைக்கை வாங்கித் தருகிறார். கண்காணிப்பு அற்ற நள்ளிரவு சாலைகளில் இந்த பைக்குகளில் அணிவகுக்கும் இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தாகும் ரேஸில் பாய்கிறார்கள். நெரிசல் மிகுந்த சாலைகளில் கவனம் ஈர்ப்பதற்காக சர்க்கஸ் சாகசங்களில் துணிகிறார்கள். இவர்களில் கரணம் தப்பினால் மரணமடைவோர் மட்டுமன்றி, சாலையில் செல்லும் அப்பாவிகளின் உயிருக்கும் அச்சுறுத்தலாகிறார்கள். இளசுகள் மத்தியிலான இந்த பைக் மோகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது டிடிஎஃப் வாசனை முன்னிறுத்தும் கூட்டம்.

புல்லட்டில் தொடங்கிய கனவு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஒரு சாமானிய போலீஸ்காரர் மகனாக பிறந்தவர் வாசன். அப்பாவின் புல்லட்டும் அதன் உறுமலும் கேட்டு வளர்ந்த சிறுவனுக்கு இயல்பிலேயே பைக் மீது பித்தானதில் ஆச்சரியமில்லை. ஆனால், அப்பாவின் அகால மரணத்தால் புல்லட்டும் அதன் மீதான வாசனின் ஆசையும் மூலையில் முடங்குகின்றன. புல்லட் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டதால், சொந்த சேமிப்பின் பெயரில் வீட்டை உண்டியல்களால் நிரப்புகிறார் வாசன். மகன் ஆசையின் தீவிரம் உணர்ந்து அரைமனதாய் அனுமதிக்கிறார் வாசன் அம்மா.

புது பைக்கில் ஊர் சுற்றி உற்சாகம் பெறும் வாசனுக்கு, அதனை உலகத்துக்குச் சொல்லும் உத்வேகம் பிறக்கிறது. ஜியோ தயவில் காளானாய் யூடியூபர்கள் முளைத்த காலத்தில் தானும் ஒரு சேனல் ஆரம்பிக்கிறார். அதில் தனது பைக் பயண பிரஸ்தாபங்களை வீடியோவாக்கி வலையேற்றுகிறார். யாரும் கண்டுகொள்ளாது போகவே அந்த முயற்சி அறுபடுகிறது. இடையில், இறந்த தந்தையின் போலீஸ் பணி கருணை அடிப்படையில் மகனுக்கு வருகிறது. உற்றார் உறவினர்கள் எடுத்துச் சொல்லியும் மசியாத வாசன், பைக் மோகத்தில் அரசுப் பணியை புறக்கணிக்கிறார். வாசன் மீதான நம்பிக்கையில் அவர் குடும்பம் விட்டுப்பிடிக்கிறது.

உருவானது டிடிஎஃப் படை

அந்தளவுக்கு தன்மையான இளைஞராக அறியப்படுகிறார் வாசன். அவரை பின் தொடரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் அபிமானத்துக்கும் அதுவே காரணமானது. கொங்கு மண்ணுக்கே உரிய மரியாதையான பேச்சு, கனிவு குறையாத அணுகுமுறை, முன்பின் அறியாதோருக்கும் உதவும் மனப்பான்மை ஆகியவை சக வயதினரிடமிருந்து வாசனை வித்தியாசப்படுத்துகின்றன. பெருநகரங்களில் அட்டகாசம் செய்யும் பீட்டர் இளைஞர்களின் மத்தியில் இந்த கிராமத்து பைக்கர் அலாதியான வரவேற்பு பெற ஆரம்பித்தார். அந்த வகையில் அடுத்து வாசன் ஆரம்பித்த ’ட்வின் த்ராட்லெர்ஸ்’ (Twin Throttlers) என்ற சானல் பிரபலமாகிறது. பைக் ரேஸ், சாகசங்கள் மட்டுமன்றி, வாசன் மேற்கொள்ளும் நீண்ட பயணங்களும் அவை தொடர்பான வீடியோக்களும் ட்ரெண்டிங்கில் முன்னேறின.

பிறந்தநாளை முன்னிட்டு வாசனின் கோவை சந்திப்பு...
பிறந்தநாளை முன்னிட்டு வாசனின் கோவை சந்திப்பு...

அதே போன்ற அதிவேக பைக், எல்லைகள் கடந்த பைக் பயணம், நித்தம் புதிதாய் காத்திருக்கும் அனுபவங்கள் என்று சக வயது இளைஞர்களின் ஈர்ப்பு மையமாக வாசன் மாறிப் போனதில் ஆச்சரியம் இல்லை. தங்களது ஆதர்சமாகவும், அடுத்தக்கட்ட நகர்வாகவும் வாசனை முன்னிறுத்திய விடலைகளால் டிடிஎஃப் விரிவடைந்தது. நேபாளம் வரை பைக் சாகசப் பயணம் திட்டமிட்ட வாசனுக்கு சென்னை அம்பத்தூரில் அளிக்கப்பட்ட வரவேற்பு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு நிகரானது. தானாய் சேர்ந்த கூட்டம் என்பதற்கு இந்த டிடிஎஃப் படை அர்த்தம் சேர்த்தது.

கடந்த வாரம் கோவை அருகே தனது பிறந்த நாளை முன்னிட்டு சக பைக் பிரியர்களை சந்திக்க திட்டமிட்டார் வாசன். சில நூறு இளைஞர்களை எதிர்பார்த்துச் சென்றவர், ஆயிரக் கணக்கில் திரண்டவர்களைப் பார்த்து மிரண்டார். அம்பத்தூர் மற்றும் கோவை சந்திப்புகளில் காவல் துறை களமிறங்கி வாசன் அன் கோவினரை எச்சரிக்க வேண்டியதாயிற்று. 14-24 வயதினர் மத்தியில் சத்தமின்றி வளர்ந்த டிடிஎஃப் மோகம் குறித்து தாமதமாகவே அறிந்த பெற்றோர்கள் துணுக்குற்றார்கள்.

கவலைக்குரிய அட்ரினல் அடிமைகள்

காவல் துறை மற்றும் பெற்றோர் கவலைகளில் பொருள் நிறைந்திருக்கிறது. வாசன் தனது வீடியோக்களில் நிகழ்த்தும் சாகசங்களில் மையலுறும் விடலைகளும் விஷப்பரிட்சையில் இறங்குகிறார்கள். ஹெல்மெட் உள்ளிட்ட கவசங்களுடன் தனியார் இடத்தில் பாதுகாப்பாக சாகசம் நடத்துவதாக வாசன் தெரிவிக்கிறார். சிகரெட் மற்றும் மதுவில் இடம்பெறும் விழிப்புணர்வு வாசகங்கள் போல, ’தன்னை பின்பற்ற வேண்டாம்’ என சதா வாசன் எச்சரிக்கிறார். ஆனால், அந்த பேச்சுக்கு மாறாக அவரது செயல்பாடு நீடிக்கிறது. சுயலாபத்துக்காக இளைஞர்களை தவறாக வழி நடத்துவதாக வாசன் மீதான குற்றச்சாட்டுகள் நீள்கின்றன.

படித்து, பணியில் சேர்ந்து சொந்தமாய் பைக் வாங்கி பயணிக்கும் இளைஞர்களின் பொறுப்புணர்வை பெற்றோரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்து வம்படியாய் பைக் பெறும் விடலைகளிடம் எதிர்பார்க்க முடியாது. சாகச நோக்கிலான பைத்தியக்கார நடவடிக்கைகளால் உடலில் பாயும் அட்ரினல் சுரப்புக்கு அடிமையானவர்களால் அதிலிருந்து மீள்வது கடினம். வாசனை பின்பற்றி யூடியூபில் ஏராளமான பைக் சாகச சேனல்கள் அதிகரித்திருப்பதே இதற்குச் சாட்சி.

மணிக்கு 240+ கி.மீ வேகத்தில் வாசன் பைக்கில் பறந்த வீடியோ இணையவெளியில் வைரலானதும், வாசனுக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்தன. ட்விட்டர் வாயிலாக தமிழக காவல் துறைக்கு புகார்கள் பறந்தன. ‘உத்திரபிரதேசத்தின் யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவே சாலையில், தனது பைக்கின் திறனை பரிசோதிப்பதற்காக சகல பாதுகாப்புடன் மேற்கொண்ட முயற்சி’ என்று வாசன் தரப்பு விளக்கமளித்ததும், ’அது எங்கள் எல்லையல்ல’ என போலீஸ் விசாரணை தொடங்கிய வேகத்தில் ரத்தானது. அதிகரித்த எதிர்ப்புகள் காரணமாக 247 கி.மீ வேக வீடியோவை வாசனும் நீக்கியுள்ளார்.

வாசனின் இந்த பொறுப்புணர்வு கூடுவதும், அது அவரை பின்பற்றுவோருக்கு கடத்தப்படுவதும் முக்கியம். பெற்றோரும், காவல்துறையும் சொல்லிக் கேட்காத இளைஞர்கள் வாசன் வேண்டுகோளை பின்பற்றி ஹெல்மெட் அணிவது இந்த வரவேற்கத்தக்க மாற்றங்களில் அடங்கும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in