சிறகை விரி உலகை அறி-54: ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்

தண்ணீர் கோபுரம்
தண்ணீர் கோபுரம்

சாக்லெட் சாப்பிட்ட நினைவுகள் இனிமையானவை. வாயைச் சுற்றி கருங்கோலமிட்டு சுவைப்பதும், சத்தம் எழாமல் மேலுறையைப் பிரிக்கப் போராடுவதும், கன்னம் அசையாமல் நாவில் கரைப்பதும் கற்கண்டு பொழுதுகள். ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என அழைக்கப்படும் சுவிட்சர்லாந்து, கடிகாரம் மற்றும் சுவைமிக்க சாக்லெட்டுகளுக்கும் புகழ்பெற்றது.

நண்பரின் பேண்ட்ஸ்

ஆல்ப்ஸ் மலைத் தொடரின் அழகில் மலைத்து நிற்கும் சுவிட்சர்லாந்துக்குப் புறப்படத் தயாரானேன். காலையில் துவைத்த ஆடைகளின் மடிப்பு நீக்கத் தேய்த்தேன். திடீரென, ஒரு வாசம். எடை குறைவான மெல்லிய பேன்ட் பொசுங்கிவிட்டது. “குளிர் நாடு என்பதால், ஜீன்ஸ் அணிவதுதான் எங்கள் வழக்கம். இஸ்திரி பெட்டியில் சூட்டின் அளவைக் குறைக்க மறந்துவிட்டாயா? கவலைப்படாதே” என்று சொன்ன நண்பர், “என்னுடைய பேன்டில் தேவையானதை எடுத்துக்கொள்” என்றார். எடுத்தேன். குளிரில் என் உதடுகள் வெடித்து, முகமெல்லாம் சொறசொறப்பாக இருந்ததால், முகத்தில் தடவ களிம்பு கொடுத்தார்.

நண்பர் சார்ந்துள்ள துறவற சபையின் மாநில தலைவர், “திருப்பயணமும் சுற்றுலாவும் சிறப்பாக அமையட்டும்” என்று வாழ்த்தி சில நூறு யூரோக்கள் கொடுத்தார். தொடர்வண்டி நிலையத்துக்கு வந்த நண்பர்கள் பயணச் சீட்டு வாங்கச் சென்றார்கள். “வேண்டாம், Eurail சலுகை அட்டை உள்ளது” என்று சொல்லிவிட்டு தொடர்வண்டியினுள் அமர்ந்தேன். அலையும் இலைகள் நிலவுடன் கண்ணாமூச்சி ஆடுவதை ஜன்னல் கண்ணாடியில் ரசித்தபடி, மியூனிக் சென்றேன்.

லூசெர்ன் தொடர்வண்டி நிலைய நுழைவாயில்...
லூசெர்ன் தொடர்வண்டி நிலைய நுழைவாயில்...

சலுகை அட்டையும் முன்பதிவும்

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரத்துக்குச் செல்லும் தொடர்வண்டியில் ஏறினேன். ஊரில் இருக்கும்போதே முன்பதிவு செய்திருந்தேன். ஏனென்றால், ‘Eurail சலுகை அட்டையே போதுமானதுதான் என்றாலும், சிறு தொகை செலுத்தி இருக்கையை உறுதி செய்யுங்கள்’ என Eurail இணைய பக்கம் அறிவுறுத்தியது. Tripadvisor இணைய பக்கத்தில் விளக்கம் தேடியபோது, ‘நாம் செல்லும் நாளில், விரும்பும் நேரத்தில் தொடர்வண்டியில் இருக்கை காலி இல்லையென்றாலோ அல்லது வேறு நிறுத்தத்தில் யாராவது ஒருவர் நாம் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு பணம் செலுத்தியிருந்தாலோ நாம் இடத்தை விட்டு எழ வேண்டியிருக்கும். முன்பதிவு செய்து இருக்கையை உறுதி செய்வது நல்லது’ என்றிருந்தது. உண்மைதான், மியூனிக்கில் புறப்பட்டபோது, தொடர்வண்டியில் நிறைய இடம் இருந்தது. வானம் சாம்பல் பூசும் காலையில் பயணிகளால் பெட்டிகள் நிறைந்தன.

சுத்தமான கழிப்பறை

லூசெர்ன் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கினேன். கழிவறைக்குச் சென்றேன். இரண்டு யூரோ என்று எழுதியிருந்தது. செலுத்தினேன். தானியங்கி கம்பி திறந்தது. உள்ளே சென்றேன். சிறுநீர் கழிக்க மட்டுமே வழி இருந்ததால் வெளியே வந்தேன். அதே கூடத்தில், மற்றொரு தானியங்கி கம்பி இருந்தது. அங்கு நின்ற பெண் பணியாளரிடம் விசாரித்தேன். “கழிவறைகள் இந்தப் பக்கம் இருக்கின்றன. 3 யூரோ செலுத்த வேண்டும்” என்றார். மறுபடியும் 3 யூரோ செலுத்தினால்தானே கம்பி திறக்கும் என குழம்பிய வேளையில், அவரே கம்பியைத் திறந்து அனுமதித்தார். காலைக்கடன் முடித்து, முகச்சவரம் செய்துவிட்டு உற்சாகமானேன்.

காலை உணவுக்குச் சென்றேன். கடையில் யூரோ கொடுத்தபோது சுவிஸ் பணம் பிராங் (Franc) கேட்டார்கள். என்னிடம் இல்லை. யூரோவை வாங்கிக்கொண்டு, சுவிஸ் பணத்தில் சில்லறை கொடுத்தார்கள்.

அதிகாலை, சத்தமில்லாத சாலை

தொடர்வண்டி நிலையத்தை விட்டு வெளியே வந்தேன். பயண நாட்களில், அதிகாலை எப்போதும் எனக்கு ஆதுர சாலையே! மிகவும் ரசிப்பேன். சில்லென்று பூத்த சிறு மலர்களும், சிறு இடைவெளியில் முட்டி எழும் வண்டுகளும், அதைத் தள்ளிவிடும் மென்காற்றும் என் ரசனையைத் துயில் எழுப்பின. தலை நிமிர்த்தி வானத்தைப் பார்த்தேன், கண்களை மூடி மூச்சை உள்ளிழுத்தேன். சுற்றிலும் உலகைப் பார்த்து, முகம் மலர தசை நார்களை இலகுவாக்கி புன்னகைத்து, இத்தனிப் பயணத்துக்காக என்னையே நான் பாராட்டிக்கொண்டேன்.

தண்ணீர் கோபுரம்

நடக்கும்போதே, ரெஸ் ஆறும் (Reuss river), அதன் நடுவில் நிற்கும் கோபுரமும், அதைத் தொட்டுச் செல்லும் மரப்பாலமும் தெரிந்தன. ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றின் நடுவே, கி.பி.14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோபுரம், ‘தண்ணீரில் நிற்கும் கோபுரம்’ (Wasserturm) என்று அழைக்கப்படுகிறது. 39 மீட்டர் சுற்றளவு, 11 மீட்டர் விட்டம், 20 மீட்டர் உயரமுள்ள இக்கோபுரத்தில், கூடுதலாக எண்கோண அளவுள்ள பிரமிட் வடிவ கூரை 15 மீட்டர் உயரம் இருக்கிறது. மொத்த உயரம் 35 மீட்டர்.

4 தளங்கள் உள்ளன. மேல்த்தளங்கள் கருவூலமாகப் பயன்பட்டுள்ளன. கீழ்த்தள நிலவறை 5.5 மீட்டர் ஆழம் உடையது. கதவு, ஜன்னல், படிக்கட்டு ஏதுமில்லை. வெளிச்சமே இல்லாத இப்பகுதி, 18-ம் நூற்றாண்டுவரை சிறைச்சாலையாக இருந்துள்ளது. கயிற்றின் வழியாக கைதியைக் கீழே இறக்கிவிட்டு ஓட்டையை மூடிவிடுவார்கள். உணவு கொடுப்பதாக இருந்தால் ஓட்டை வழியாகக் கொடுப்பார்கள். எச்சூழலிலும் கைதிகளால் தப்பிக்க இயலாது.

பூக்கள் சூடிய கோயில் பாலம்
பூக்கள் சூடிய கோயில் பாலம்

கோயில் பாலம்

மரப் பாலத்தைப் பார்ப்பதற்காக, அருகிலிருந்த மற்றொரு பாலத்தில் நடந்து மறுபக்கம் சென்றேன். செயின்ட் பீட்டர் ஆலயம் அருகில் இருப்பதால் மரப்பாலமானது, ‘கோயில் பாலம்’ (Chapel Bridge) என்று அழைக்கப்படுகிறது. லூசெர்னின் பழைய நகரத்தையும் புதிய நகரத்தையும் இணைக்கவும், லூசெர்ன் ஏரி வழியாக வரும் எதிரிகளின் தாக்குதலில் இருந்து காக்கவும் கட்டப்பட்ட இப்பாலம் வாகனங்களுக்கானது அல்ல. இருகரையிலிருந்தும் மக்கள் நடந்து செல்லலாம். கூரை, தூண் அனைத்தும் மரத்தால் கட்டப்பட்ட இப்பாலத்தைப் பற்றிய முதல் குறிப்பு 1367-ல் காணக் கிடைக்கிறது. இருகரையையும் இணைக்கும் நேர்கோட்டுப் பாலமாக அல்லாமல், வளைந்து செல்லும் இப்பாலம், தொடக்கத்தில் 279 மீட்டர் இருந்தது. மூன்று முறை நீளம் குறைக்கப்பட்டு தற்போது, 205 மீட்டர் இருக்கிறது. ஐரோப்பாவில் இருக்கும், கூரை வேயப்பட்ட மிகப் பழமையான பாலம் இது.

கோயில் பாலம்
கோயில் பாலம்

தீயினால் சுட்ட பாலம்

வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பாலத்தில், 1993 ஆகஸ்ட் 18 அதிகாலை தீ பற்றியது. பெரும்பாலான பகுதிகள் சாம்பலாகின. எரிந்த பாலத்தைப் பார்க்க பலரும் வரத்தொடங்கியதால், உடனடியாகக் கூடிய லூசெர்ன் நிர்வாகத்தினர் பாலத்தைப் புனரமைக்க முடிவெடுத்தார்கள். பல்வேறு பாதுகாப்புக் காரணிகளோடு, எட்டே மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிட்டார்கள்.

முக்கோண வடிவத்தில் ஓவியம்
முக்கோண வடிவத்தில் ஓவியம்

வரலாறு சொல்லும் ஓவியங்கள்

பாலத்தில் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். கட்டணம் ஏதுமில்லை. படியேறி பாலத்தில் கால் வைத்தேன். ஒவ்வொரு கை மரத்தின் நடுவிலும் நிறுவப்பட்டிருந்த, முக்கோண வடிவ பலகையில் வரையப்பட்டிருந்த ஓவியங்களை வியந்து பார்த்தேன். (வீடு என்று சைகையால் சொல்லும்போது, இரண்டு கைகளின் விரல்களையும் ஒட்டிவைத்து காட்டுவோம்தானே! இரண்டு உள்ளங்கைகளுக்குட்பட்ட இடைவெளியில் முக்கோண வடிவம் இருக்கிறதல்லவா, அதில் ஒரு படத்தை இணைத்திருப்பதுபோல கற்பனை செய்துகொள்ளுங்கள்) கரையின் இருபக்கத்திலிருந்தும் வரும் பாதசாரிகள் பார்க்கும்படி, இரண்டு பக்கமுமே வைத்திருக்கிறார்கள்.

இந்தப் படங்கள், லூசெர்ன் நகரத்தின் வரலாறு, லூசெர்னின் பாதுகாவலரான, புனித லியோஜரின் (Leodeger) வாழ்வு, பணி மற்றும் கொலை பற்றி சொல்கிறது. மேலும், ஐரோப்பாவில் ஏற்பட்ட புராடெஸ்டான்ட் ‘கிளர்ச்சிக்கு’ எதிராகவும் கத்தோலிக்க கிறிஸ்தவ நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாகவும் வரையப்பட்ட ஓவியங்களும் இருந்தன. இங்கிருந்த, 111 ஓவியங்களில் 86 ஓவியங்கள் பாதி அல்லது மீண்டும் புதுப்பிக்க இயலாதபடி 1993-ம் ஆண்டு தீ விபத்தில் அழிந்துவிட்டன. நான் சென்றபோது, பழைய படங்களும், மீண்டும் வரையப்பட்ட படங்களும் இருந்தன. பாலத்தின் வெளியே, இருபக்கங்களும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததால் சோலைக்குள் சாலை என உணர்ந்தேன்.

நகரின் வனப்பு
நகரின் வனப்பு

கோட்டைச் சுவர்

அருகிலிருந்த கோட்டைச் சுவரில் ஏறினேன். மத்திய காலத்தின் எச்சங்களாக சுவிட்சர்லாந்தில் எஞ்சியிருக்கும் சில கோட்டைச் சுவர்களில் இதுவும் ஒன்று. 870 மீட்டர் நீளத்தில், சராசரியாக 1.5 மீட்டர் தடிமனும், 9 மீட்டர் உயரமும் கெண்ட இக்கோட்டைச் சுவரில், சீரான இடைவெளியில் 9 கோபுரங்கள் இருக்கின்றன. 4 கோபுரங்களில் மட்டும் உள்ளே சென்று பார்க்க அனுமதி உண்டு. அதுவும், ஏப்ரல் முதல் அக்டோபர் வரைதான். ஜுலை மாதம் சென்ற நான், கோட்டையின் மேல் நடந்தேன். நகரின் வனப்பை ரசித்தேன். கோபுரங்களின் உள்ளே குனிந்து, வளைந்து, நிமிர்ந்து படியேறி மேலே சென்று அழகில் திளைத்தேன். மணிக் கோபுரத்தின் மிகப்பெரிய கடிகாரத்தையும், அதில் தீட்டப்பட்ட சுவர் ஓவியத்தையும் பார்த்துக் களித்தேன்.

(பாதை விரியும்)

மணிக் கோபுரம்
மணிக் கோபுரம்

பெட்டிச் செய்தி:

பதில் தரும் Tripadvisor

பயணத்திற்கான திட்டமிடலின்போது எழும் கேள்விகளுக்குப் பதில் தரும் தளம் tripadvisor. பார்க்கப்போகும் இடம் பாதுகாப்பானதா? பயனுள்ளதா? எவ்வளவு நேரம் ஆகும்? போன்ற கேள்விகளைக் கூகுள் தளத்தில் கேட்டால் பெரும்பாலும் tripadvisor பக்கத்துக்கு நாம் அழைத்துச் செல்லப்படுவோம். நமக்கு எழும் அதே சந்தேகம், நம்மைப்போல பயணம் செய்த பலருக்கும் எழுந்திருக்கும். அவர்களின் கேள்விகளுக்கு யாராவது பதில் சொல்லியிருப்பார்கள். அப்பதில்களை நாம் வாசிக்கலாம். நாமும் கேள்விகளைப் பதிவு செய்யலாம். யாராவது பதில் சொல்லும்போது நம் மின்னஞ்சலுக்குத் தகவல் வரும். அதேபோல, நாம் பயணித்த இடங்களுக்குச் செல்ல இருக்கிறவர்களுக்கு ஏதாவது பதில் வேண்டுமென்றால் tripadvisor அக்கேள்வியை நமக்கு அனுப்பும். நாமும் பதில் சொல்லி மற்றவர்களுக்கு உதவலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in