தொடர் விடுமுறை... நீலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்... மலைப்பாதைகளில் கடும் வாகன நெரிசல்

உதகை தாவரவியல் பூங்காவில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்
உதகை தாவரவியல் பூங்காவில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளதால், சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் பரபரப்புடன் காணப்படுகிறது. ஏராளமான வாகனங்கள் சாலைகளில் பயணிப்பதால் கடும் போக்குவரத்து நெரிசலும் நிலவி வருகிறது.

சனி, ஞாயிறு, விஜயதசமி மற்றும் சரஸ்வதி பூஜை ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சர்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்திற்கு லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்திலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

தாவரவியல் பூங்காவில் குளுமையான சூழலை அனுபவிக்கும் மக்கள்
தாவரவியல் பூங்காவில் குளுமையான சூழலை அனுபவிக்கும் மக்கள்

உதகையில் பிரதானமாக தாவரவியல் பூங்கா, படகு இல்ல ஏரி ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். ஏரியில் மிதிபடகு, மோட்டார் படகு உள்ளிட்ட படகுகளில் பயணித்து சுற்றுலாப் பயணிகள் இயற்கையை ரசித்து வருகின்றனர். இதேபோல் தாவரவியல் பூங்காவில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவித்தவாறு சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் மலர் மாடம் மற்றும் கண்ணாடி மாளிகை ஆகியவற்றை பார்வையிட்டு வருகின்றனர்.

இதனிடையே நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளதால் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உதகையில் அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலை, மைசூர் சாலையில் வாகனங்கள் 4 கிலோமீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நிற்கின்றன.

உதகையில் கடும் வாகன நெரிசல்
உதகையில் கடும் வாகன நெரிசல்

மேலும் ஆயுத பூஜை காரணமாக பொருட்கள் வாங்க கிராமப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த வாகனங்கள் மூலம் உதகை நகருக்கு வருகை புரிந்ததால் நகருக்குள் உள்ள அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்று வருகின்றன. போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in