சிறகை விரி உலகை அறி-33:

சாக்ரடீஸின் தத்துவ பூமி
சாக்ரடீஸ் (இடதுபுறம்) மற்றும் பிளேட்டோ (வலதுபுறம்)
சாக்ரடீஸ் (இடதுபுறம்) மற்றும் பிளேட்டோ (வலதுபுறம்)

இலைகளைக் கூசச் செய்து வெட்கத்தில் நெளிய வைக்கும் காற்று, வயல்நீரில் அசைந்தாடி அலை அனுப்பும் நாற்று, திசையற்ற பொழுதில் வழி சொல்லும் கூற்று எல்லாம் அதிசயம். அதிசயங்களை ஆச்சரியத்தோடு பார்த்து, வினா தொடுப்பது தத்துவஞானிகளின் தனித்துவம்.

சாக்ரடீஸ் அடைக்கப்பட்ட சிறைக்கு முன்பாக!
சாக்ரடீஸ் அடைக்கப்பட்ட சிறைக்கு முன்பாக!

பழங்கால கிரேக்க தத்துவஞானிகளை, சாக்ரடீசுக்கு முந்தைய தத்துவக் குழு, சாக்ரடீஸ் கால தத்துவக் குழு, சாக்ரடீசுக்குப் பிந்தைய தத்துவக் குழு என மூன்று குழுக்களாகப் பிரிப்பதுண்டு. சாக்ரடீசுக்கு முந்தைய பள்ளியைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர் கணித மேதை பிதாகரஸ். சாக்ரடீஸ் காலத்தில், சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் மூவரும் புகழ்மிக்கவர்கள். சாக்ரடீசுக்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்தவர்கள், ஸ்டாயிக், எபிகியூரியன், ஸ்கெப்டிக், சினிக் உள்ளிட்ட சிந்தனைப் பள்ளிகளை உருவாக்கிய தத்துவஞானிகள்.

சாக்ரடீஸ்

கி.மு. 470-ல் பிறந்தவர் சாக்ரடீஸ். 2500 ஆண்டுகளுக்கு முன்பே கற்பித்தல் முறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தவர். கடினமான கேள்விகளை எழுப்பி, அதன் வழியாக மாணவர்களை சிந்திக்கத் தூண்டியவர். தன் வாழ்வை, தன் சிந்தனைகளை அதிகம் எழுதாத சாக்ரடீஸ் குறித்து அவரின் மாணவர் பிளேட்டோ வழியாகவே நிறைய அறிய முடிகிறது.

ஞானம், பண்பு, நற்குணத்துடன் வாழ்ந்தாலும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தார் சாக்ரடீஸ். “கிரேக்கத்தில் அதிகம் கற்றறிந்தவர் சாக்ரடீஸ்” என டெல்பி கோயிலில் அருள்வாக்கு சொல்லப்பட்டதாகவும் தகவல் உண்டு. சுய ஒழுக்கத்துடன் வாழ்ந்து, சிந்திக்கத் தூண்டிய சாக்ரடீஸ், சிந்திக்காத மக்களால் கொல்லப்பட்டார். சாக்ரடிஸின் கடைசிமூச்சு ஏதென்ஸ் காற்றோடுதான் கரைந்தது. அந்தக் காற்றை சுவாசிக்கும் பேரனுபவம் அவரின் மாணவர்களுக்கே கிடைத்தது. ஞான சுவாசம் நடைபெற்ற இடம் தேடி, கிளைகளுக்கிடையே விழுந்த ஒளித்துகள்களின் மீது நடந்தேன்.

சிரிக்க வைத்த கதை

சாக்ரடீஸ் காலத்தில் புகழ்பெற்ற நகைச்சுவை நாடக எழுத்தாளராகத் திகழ்ந்தவர் அரிஸ்டாஃபேன்ஸ் (Aristophanes). டயனைசஸ் தியேட்டரில் அரங்கேறிய இவரின் நாடகத்தை மக்கள் வெகுவாக ரசித்தார்கள். அன்றாட வாழ்க்கையில் நடக்கும் பலவற்றையும் இவர் நகைச்சுவை நோக்கில் மக்களுக்கு வழங்கினார்.

ஏதென்ஸ் வீதிகளில் சாக்ரடிஸ் மற்றும் அவரின் மாணவர் ஆல்சிபாயடீஸ் (Alcibiades) இருவரும் சேர்ந்து நடப்பதை, அரிஸ்டாஃபேன்ஸ் பலமுறை பார்த்திருக்கிறார். திறமையான கலைஞராகத் திகழ்ந்தாலும், அறிவுத்திறனும், ஆண்மைத்திறனும் மிகுந்த ஆல்சிபாயடீஸை, ஏனோ அரிஸ்டாஃபேன்சுக்குப் பிடிக்கவில்லை. ஆல்சிபாயடீஸின் குணம் சாக்ரடிஸின் புகழுக்கு இழுக்கு என அரிஸ்டாஃபேன்ஸ் நினைத்தார். ஆனால், அது உண்மையல்ல. தன் மாணவர்களிடமிருந்து நல்லவைகளைக் கொண்டுவருவதுதானே ஆசிரியரின் தேடல்.

போரில் கொல்லப்பட்ட ஏதென்ஸ் இராணுவ கட்டளைத் தளபதியின் மகனான ஆல்சிபாயடீஸை கேலிப்பொருளாக்கி ’மேகங்கள்’ (The Clouds) எனும் நகைச்சுவை நாடகம் எழுதினார் அரிஸ்டாஃபேன்ஸ். கதை நாயகன், எதற்கும் உபயோகம் இல்லாதவன், தன் ஆசிரியர் ஒன்று சொன்னால் வேறொன்று செய்வான், பிறரை ஏமாற்றுவான், கடவுளையும் ஏமாற்றுவான்.

நாடகத்தில், உண்மையான பெயரை பயன்படுத்தாவிட்டாலும், நடை, உடை பாவனை அனைத்தும் ஆல்சிபாயடீஸ் மற்றும் சாக்ரடிஸை பிரதிபலித்தது. மக்கள் வியந்து மகிழ்ந்தனர். நகைச்சுவையைக் கொண்டாடினர். சொல்லிச் சொல்லிச் சிரித்த மக்கள் மீண்டும் மீண்டும் சென்று பார்த்தனர். சாக்ரடீசும் சென்று பார்த்தார். மக்கள் கேட்டபோது, “என்னைப் பற்றிச் சொல்லியுள்ள எல்லாவித குற்றச்சாட்டுகளில் இருந்தும், நான் என்னைத் திருத்திக்கொள்ளத் தேவையான ஏதாவது குற்றச்சாட்டு இருக்கிறதா எனப் பார்க்க வந்தேன்” என பதில் சொன்னார். இந்த நாடகம் 20 ஆண்டுகளுக்கு ஏதென்ஸ் மக்களை மகிழ்வித்தது.

சாக்ரடீஸ் அடைக்கப்பட்ட சிறை
சாக்ரடீஸ் அடைக்கப்பட்ட சிறை

சிந்திக்கவிடாத நிலை

காலம் மாறியது. சிறந்த பேச்சாளராகவும் போர் வீரராகவும் ஆல்சிபாயடீஸ் உயர்ந்தார். அரச பரமபதத்தில், ஆல்சிபாயடீஸ் நாட்டுக்கு எதிராகத் திட்டம் தீட்டுவதாகவும், நாட்டின் அழிவுக்கு காரணமாக இருப்பதாகவும் மக்கள் குற்றம்சுமத்தத் தொடங்கினார்கள். அரிஸ்டாஃபேன்ஸ் தன் நாடகத்தில் குறிப்பிட்டது சரிதான். ஆல்சிபாயடீஸ் மோசக்காரன்தான், இளம் வயதிலிருந்தே இவன் மாறவில்லை எனப் பேசினார்கள். இதற்கு, இவரின் ஆசிரியர் சாக்ரடீஸ்தான் காரணம் என நம்பினார்கள். சாக்ரடீஸின் எதிரிகள் ஒன்றுசேர்ந்தனர். தவறான அறிவுரைகள் சொல்லி இளைஞர்களைச் சீரழிப்பதாகவும், கடவுள்களைப் பற்றி தவறாகப் பேசுவதாகவும் சாக்ரடீஸுக்கு எதிராக நீதி அவையில் புகார் தெரிவித்தனர்.

சாக்ரடீஸ் அடைக்கப்பட்ட சிறையின் உள்ளே!
சாக்ரடீஸ் அடைக்கப்பட்ட சிறையின் உள்ளே!

“அடுத்தவர்கள் புனிதமாகக் கருதும் எதையும் அவதூறாகப் பேசுவது சரியல்ல எனும் கொள்கை உடையவன் நான். எனவே நான் தவறுதலாக வழிநடத்தவில்லை. அவர்களால் இயன்ற அளவு நல்லவர்களாக, பண்புள்ளவர்களாக, உதவி செய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதையே நான் மாணவர்களுக்குக் கற்பித்தேன்” என்று சொன்ன சாக்ரடீஸ், பிறகு அமைதி காத்தார்.

தன்னைத் தற்காத்துக்கொள்ள வாதிடுமாறு மாணவர்கள் வேண்டியபோதும் மறுத்தார். இயேசு பிறப்பதற்கு ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பே, பழிவாங்குதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலத்திலேயே, “ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்”, “வெறுப்பவர்களுக்கு நல்லது செய்யுங்கள்” என்று அறிவுறுத்திய சாக்ரடீஸ், “நான் வாழ்ந்த முழு வாழ்க்கையும், போதனையும் மட்டுமே, இவர்களின் குற்றச்சாட்டுக்கான எதிர்வாதம், பதில்” என தம் மாணவர்களிடம் சொன்னார். எந்த வீதியில் அறிவு, நல்லொழுக்கம், உளவியல், அரசியல், கலை, மதம் சார்ந்து வினாக்கள் எழுப்பி மக்களை சிந்திக்க சாக்ரடீஸ் அழைத்தாரோ அதற்கு அருகிலேயே விசாரணை நடந்தது; தீர்ப்பளிக்கப்பட்டது.

சாக்ரடீஸ் விஷம் குடிக்கும் காட்சி (பிரான்ஸ் ஓவியர் Jacques Louis David வரைந்த காட்சி)
சாக்ரடீஸ் விஷம் குடிக்கும் காட்சி (பிரான்ஸ் ஓவியர் Jacques Louis David வரைந்த காட்சி)

தூய வாழ்வு

தீர்ப்பளிக்கப்பட்ட நாளின் சூரியன் மறைந்ததும், கொடும் விஷம் கொடுத்து குற்றவாளிகளைக் கொல்வதுதான் அக்கால வழக்கம். தீர்ப்புக்கும் தண்டனைக்கும் இடையே சில மணி நேரங்களே பொதுவாக இருக்கும். ஆனால், ஒரு விதிவிலக்கு உண்டு. வருடத்தின் ஒரு குறிப்பிட்ட மாதத்தில், அதாவது, ‘அப்பல்லோ திருக்கோயிலில் வருடாந்திர காணிக்கைச் செலுத்துவதற்காக ஏதென்ஸின் கப்பல்கள் டெலோஸ் (Delos) தீவுக்கு பயணம் போயிருக்கும் காலத்தில் இது போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்படக் கூடாது’. சாக்ரடீசுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட காலத்தில் ஏதென்ஸின் கப்பல்கள் திருப்பயணம் சென்றிருந்ததால் சாக்ரடீஸை சிறையில் அடைத்தார்கள்.

மாணவர்கள் சந்திக்க அனுமதி இருந்தது. மாணவர்கள் வந்தார்கள். அவர்களுடன் சாக்ரடீஸ் உரையாடினார். சாக்ரடீசைத் தப்பிக்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்தார்கள். சாக்ரடீஸ் மறுத்தார். “குற்றமற்றவராக இறக்கப் போகிறீர்களா?” என அழுதார் மாணவர் கிரிடோ (Crito). “குற்ற உணர்வோடு இறப்பதற்குப் பதில் குற்றமற்றவராக இறக்கலாமே” என்றார் சாக்ரடீஸ்.

கப்பல் திரும்பியது. கடைசி நாளும் வந்தது. பேசிக்கொண்டிருக்கும்போதே ஹெம்லாக் நஞ்சு கொண்டு வந்தார் காவலர். சாக்ரடீஸ் குடித்தார். உயிர் மெல்ல வெளியேறிக்கொண்டே இருந்தது. அப்போது கிரிடோவிடம், “மருத்துவத்தின் பாதுகாவலரான ஆஸ்கிலிபியஸ் கடவுளுக்கு நாம் ஒரு சேவல் பலி கொடுக்க வேண்டும். மறக்காமல் கொடுத்துவிடு” என்றார் சாக்ரடீஸ். தம் மாணவர்களுக்கு சாக்ரடீஸ் நிகழ்த்திய கடைசி உரையை மாணவர் பிளேட்டோ பிறகு எழுதி வைத்துள்ளார். அதன் கடைசியில், “நமக்குப் பரிச்சயமான எல்லாரையும்விட மரணத்தில் உன்னதமானவராகவும், வாழ்க்கையில் ஞானமுள்ளவராகவும், சிறந்தவராகவும் இருந்த மனிதர் இவ்வாறு இறந்தார்” என முடிக்கிறார் பிளேட்டோ.

பசும் மரங்களுக்கிடையே தனியே வெறுமையாய் இருந்த சிறையின் அறைகளையும் கம்பிகளையும் பார்த்து அஞ்சலி செலுத்தினேன். அங்கிருந்து பிளாக்கா சாலை நோக்கி நடந்தேன்.

பிளாக்கா சாலை
பிளாக்கா சாலை
பிளாக்கா சாலை
பிளாக்கா சாலை

பிளாக்கா சாலை

ஏதென்சின் மிகப் பழமையான குடியிருப்பு பிளாக்கா. நகரத்துக்குள் ஒரு கிராமம் போல, அக்ரோபோலிஸ் அருகில் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியான வீதிகளையும், வீடுகளையும், கட்டிடங்களையும் இப்போதும் காணலாம். குறுகிய, நேர்த்தியான அழகான சாலைகள்.

பிளாக்கா சாலையில் உள்ள கடை
பிளாக்கா சாலையில் உள்ள கடை

சாலையோர இசைக் கலைஞர்கள், தள்ளுவண்டியில் கைவினைப் பொருட்கள் விற்பவர்கள், நிழற்படக் கலைஞர்கள் என ஒவ்வொருவரும் சாலையை அழகுபடுத்தியுள்ளார்கள். நைட் கிளப்ஸ் இப்பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது. சாலைகள் பலவற்றில் மோட்டார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. நிறைய மரங்களும், வண்ணப்பூக்களும் அலங்கரித்துள்ள சாலைகளின் ஓரத்தில் உணவகங்களின் முகப்பில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.

பிளாக்கா சாலையில் உள்ள கடை
பிளாக்கா சாலையில் உள்ள கடை
பிளாக்கா சாலையில் உள்ள கடை
பிளாக்கா சாலையில் உள்ள கடை

கிரேக்கம் தொடர்பான பொருட்கள் வாங்குவதற்கு நிறைய கடைகள் இப்பகுதியில் உண்டு. கடவுள்கள், பெண் தெய்வங்கள், அரசர்கள், தலைவர்கள் மற்றும் தத்துவஞானிகளின் சிற்பங்கள் சிறிதும் பெரிதுமாக எண்ணற்ற கடைகளில் விற்கப்படுகிறது.

வரலாற்று இடங்களின் படங்கள், சிலைகள், வரலாற்று குறிப்புகள், புராணக் கதைகள், அச்சு வடிவிலும், குறுந்தகடு வடிவிலும் நிறைய கிடைக்கின்றன. நம்ம ஊர் வரலாற்றுத் தளங்களுக்குச் செல்லும்போது, வரலாறு சொல்லும் இதுபோன்ற பொருட்கள் கிடைப்பதற்குப் பதிலாக, ஃபேன்ஸி பொருட்கள் தானே அதிகம் இருக்கின்றன எனும் ஏக்கத்துடனேயே அடுத்த இடம் நோக்கி நடந்தேன்.

(பாதை நீளும்)

பெட்டி செய்தி:

தத்துவ தாத்தா

பிளாக்கா சாலையில், கடைக்கார தாத்தா ஒருவர் என் அருகில் வந்தார். “எந்த நாடு?” என கேட்டார். “இந்தியா” என்றேன். உரையாடலின்போது, “ கிறிஸ்தவம் பற்றி ஆதரித்து எழுதியதையும், எதிர்த்து எழுதியுள்ளதையும் வாசிக்க வேண்டும். அப்போதுதான் தெளிவு கிடைக்கும்” என்றார். தத்துவ நிலத்தின் வாரிசு என்பதைச் சொல்லாமல் சொன்னார். பிறகு, “இந்திய உணவுகள் மிகவும் சுவையாக இருக்குமல்லவா? நன்றாக சமைக்கவும், சாப்பிடவும் தெரிந்த மக்கள்தான் உண்மையிலேயே நாகரிகமடைந்தவர்கள்” என்று சொல்லிவிட்டு காதுக்கு அருகில் வந்து, “அமெரிக்கர்களுக்கு சமைக்கவும் தெரியாது, சாப்பிடவும் தெரியாது” என்று சொல்லிச் சிரித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in