சில ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் கிளாம்பாக்கத்தில் போராட்டம்... அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்.

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் இல்லை என்று வதந்தி பரப்புவதும்,  போராட்டம் நடத்துவதிலும்  உள்நோக்கம் இருப்பதாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்

சென்னை கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் தென் மாவட்டங்களுக்கான முனையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்பது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் இங்கிருந்து அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவும், சனிக்கிழமை இரவும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இல்லாமல் பயணிகள் தவித்தனர். இதனால் அங்கு சாலையில் அமர்ந்தும் பேருந்துகளை மறித்தும் பெண்கள் உள்ளிட்ட பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தனர்.

ஆம்னி பேருந்துகள்
ஆம்னி பேருந்துகள்

இந்த ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு,  "பல்வேறு தடைகள் உடைத்தெறியப்பட்டு கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது.  முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் செய்யும் இடம் விரைவில் பணிகள் முடிந்து ஏப்ரல் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்" என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், கிளாம்பாக்கத்தில் நடைபெறும்  போராட்டத்தில் உள்நோக்கம் இருப்பதாக குறிப்பிட்டார்

மேலும், "எப்போதும் இயக்கப்படும் பேருந்துகளில் அனைத்து பேருந்துகளும் தற்போதும் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 80 சதவீத பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும் 20 சதவீத பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன. பகல் மற்றும் மாலை நேரங்களில் அதிக பேருந்துகள் இயக்கப்படுவதும், நள்ளிரவு நேரங்களில் குறைவான பேருந்துகளும் இயக்கப்படுவது வழக்கம்.

ஆம்னி பேருந்துகள்
ஆம்னி பேருந்துகள்

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென நூறு, இருநூறு பேர் திரண்டு பேருந்துகள் இல்லை என போராட்டங்கள் நடத்துவதில் உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறோம். பேருந்துகள் இல்லை என வதந்தி பரப்புவது தேவையற்றது.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை  நாடி கோயம்பேட்டிலிருந்து புறப்பட தற்போது அனுமதி பெற்றுள்ளனர். அவர்களின் சில கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான பணிமனை தயாராகும் வரை கோயம்பேட்டில் உள்ள அவர்களது அலுவலகங்களில் இருந்து இயக்கிக் கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து கிளம்பும்போது பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், கோயம்பேடு பேருந்து நிலையம் இயங்கத் தொடங்கி விட்டதுபோல சிலர் தவறான செய்தியைப் பரப்புகிறார்கள். பெரும்பான்மையான பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்குகின்றன.

இந்த நிலையில் அரசுப் பேருந்துகள் குறைவாக இருக்கிறது என்ற செய்தியைப் பரப்பினால் மக்கள் மீண்டும் ஆம்னி பேருந்துகளுக்கு வருவார்கள் என்பதற்காக சில ஆம்னி பேருந்து உரிமையாளர்களால்  உள்நோக்கத்தோடு போராட்டம் நடைபெறுவதாக தெரிகிறது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in