காரணமே தெரியவில்லை... பெங்களூரு விமான நிலையத்தில் 15 மணி நேரம் தவித்த பயணிகள்!

ஸ்பைஸ் ஜெட் விமானம்
ஸ்பைஸ் ஜெட் விமானம்

பெங்களூருவிலிருந்து மும்பைக்கு செல்லவிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம், 190 பயணிகளை 15 மணி நேரம் காக்க வைத்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

விமான நிலைய ஊழியர்களிடம் பாதிக்கப்பட்ட பயணிகள் வாக்குவாதம்
விமான நிலைய ஊழியர்களிடம் பாதிக்கப்பட்ட பயணிகள் வாக்குவாதம்

பெங்களூருவிலிருந்து மும்பைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 190 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். இந்த விமானம் வழக்கமாக காலை 6 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, காலை 7.40 மணிக்கு மும்பையில் தரையிறங்கும். வழக்கம்போல், நேற்று இந்த விமானத்தில் பயணிக்க 190 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் காலை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் விமானம் புறப்படாததால் விமான ஊழியர்களிடம் இதுகுறித்து பயணிகள் கேட்டனர். அதற்கு 2 மணி நேரத்தில் விமானம் புறப்பட்டு விடும் என பதிலளிக்கப்பட்டது. பின்னர் காலை 8 மணிக்கு அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டனர். அதன் பிறகும் நீண்ட நேரம் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பயணி பிரமீலா ஷெட்டி என்பவர் கூறுகையில், 'நான் மும்பைக்கு திருமண நிகழ்ச்சிக்கு செல்ல விமானத்தில் முன்பதிவு செய்திருந்தேன். முதலில் விமானம் மதியம் 12.30 மணிக்கு புறப்படும் என்றார்கள். பின்னர் மாலை 3.30 மணிக்கு புறப்படும் என்றார்கள். தாமதத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்கவில்லை' என்றார்.

பல மணி நேரமாக விமானம் புறப்பட தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல பயணிகளுக்கு உணவு, குடிநீர் வழங்கப்படாததால் அவர்கள் மேலும் கடும் பாதிப்புக்குள்ளாகினர். பின்னர் ஒருவழியாக இரவு 9.10 மணிக்கு விமானம் மும்பைக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே தாமதத்துக்கான காரணம் என ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் தரப்பில் பின்னர் தெரிவிக்கப்பட்டது.

பெங்களூரு விமான நிலையத்தில் 15 மணி நேரமாக பயணிகள் காக்கவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in