சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்ல 3,070 ரூபாய் கட்டணம்... ஆம்னி பஸ் கட்டண விவரம் அறிவிப்பு!

ஆம்னி பேருந்துகள்
ஆம்னி பேருந்துகள்

பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு முடிவு கட்டும் வகையில் எதிர்வரும் தீபாவளி பண்டிகை காலத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம்  எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்து, அரசு ஒப்புதலுடன்  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட கட்டணத்திற்கு அதிகமாக வசூலிக்கப்படுவதாக எழுந்த  புகாரின் அடிப்படையில் ஆயுத பூஜை விடுமுறையின் போது  இயங்கிய தனியார் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்த தமிழக அரசின் போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிக கட்டணம் வசூலித்த 199 பேருந்துகளை பறிமுதல் செய்தனர். மேலும் கூடுதல் கட்டணம் வசூலித்த பல ஆம்னி பேருந்துகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில் இது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் தரப்பில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகள்  ஏற்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆம்னி  பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து  வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டண விவரங்களை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நிர்ணயம் செய்து அறிவித்துள்ளனர்.  அதன்படி சென்னையில் இருந்து  திருச்சி செல்ல  ரூ.1,610 முதல் ரூ.2,430 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல சென்னையில் இருந்து மதுரைக்கு  ரூ.1,930 முதல் ரூ.3,070 வரையிலும், கோவைக்கு ரூ.2,050 முதல் ரூ.3,310 வரையிலும், தூத்துக்குடிக்கு ரூ.2,320 முதல் ரூ.3,810 வரையிலும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்ல  ரூ.2,380 முதல் ரூ.3,920, வரையிலும், சேலம், தஞ்சை ஆகிய ஊர்களுக்கு  ரூ.1,650 முதல் ரூ.2,500 வரையிலும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணம் எதிர்வரும் தீபாவளி பண்டிகை வரை இறுதியானது என்பதால்  பொதுமக்கள் யாரும் இதற்கு மேல் அதிக கட்டணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in