தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு

உறுதிமொழியுடன் களமிறங்கினர் வீரர்கள்
ஜல்லிக்கட்டு உறுதிமொழி
ஜல்லிக்கட்டு உறுதிமொழி

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எனும் ‘ஏறு தழுவுதல்’ நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்குத் தொடங்கியது.

போட்டிகளை வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்கள். முன்னதாக ஜல்லிக்கட்டு குறித்த உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க, அதை மாடுபிடி வீரர்களும், மாடு உரிமையாளர்களும் திரும்பச் சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

“பாலமேடு கிராமத்தில் தமிழக பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை கொண்டாடிடவும், நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேணிக்காப்போம் என்றும், விளையாட்டில் ஈடுபடும் காளைகளுக்கு எவ்வித ஊறும் செய்ய மாட்டோம் என்றும், வீரர்களான நாங்கள் சிறந்த நெறிமுறைகளை பின்பற்றுவோம் என்றும், இவ்விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் எந்தத் தீங்கும் நேராமல் அரசு விதிமுறைக்கு உட்பட்டு விளையாடுவோம் என்றும் உறுதிமொழிகிறோம்” என்று அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.

கரோனா பெருந்தொற்று காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் 150 பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். பார்வையாளர்கள், மாடு பிடி வீரர்கள், மாடு உரிமையாளர்கள் என அனைவரும் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

மாடு பிடி வீரர்களும், காளைகளும் இந்த மூன்றில் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவும் ஆன்லைனில் நடந்தது. 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக மொத்தம் 4 ஆயிரத்து 544 காளைகளும், 2,001 மாடு பிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர்.

அதில் இன்று நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு, குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் மூலம் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பகுதி பகுதியாகக் களமிறக்கப்படுவார்கள்.

பாலமேட்டில் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், சிறந்த காளைக்கு, கன்றுக்குட்டியோடு காங்கேயம் பசுமாடும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தங்கக் காசுகள், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in