தீவிர உறுப்பினர் இல்லாதவர் மாவட்ட தலைவரா? அழகிரியிடம் கார்த்தி எதிர்ப்புப் படை புகார்!

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை மாவட்ட காங்கிரஸில் கார்த்தி சிதம்பரம் ஒரு அணியாகவும் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி ஒரு அணியாகவும் அதிரடி கிளப்பி வருகிறார்கள். இதற்கு முன்பு மாவட்டத் தலைவராக இருந்த சத்தியமூர்த்தி ப.சிதம்பரத்தின் சிபாரிசில் நியமிக்கப்பட்டவர். ஒருகட்டத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சத்தியமூர்த்திக்குமே முட்டிக்கொண்டது. இதனால் சத்தியமூர்த்தி சத்தமில்லாமல் ராமசாமி பக்கம் ஒதுங்கிவிட்டார்.

கே.ஆர்.ராமசாமி
கே.ஆர்.ராமசாமி

வட்டார தலைவர்கள் 17 பேரில் பெருவாரியானவர்கள் ராமசாமியின் கண்ணசைவில் இருப்பதால் கார்த்தி சிதம்பரத்தால் நினைத்ததைச் சாதிக்க முடியவில்லை. இந்த நிலையில், ப.சிதம்பரம் மூலமாக அழுத்தம் கொடுத்து அண்மையில் சத்தியமூர்த்தியை மாவட்ட தலைவர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு தனது விசுவாசியான சஞ்சய் காந்தி என்பவரை மாவட்ட தலைவராக்கினார் கார்த்தி.

சத்தியமூர்த்தி
சத்தியமூர்த்தி

மாவட்டத் தலைவரை மாற்றினாலும் வட்டாரத் தலைவர்கள் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதால் அடுத்தகட்டமாக வட்டார தலைவர்களை மாற்றும் கோதாவில் குதித்தது கார்த்தி கோஷ்டி.

தங்களுக்கு ஒத்துவராத வட்டாரத் தலைவர்களுக்குப் பதிலாக தங்களது விசுவாசிகளை வட்டார தலைவர் பதவிக்காக தேர்வு செய்திருக்கிறது கார்த்தி கோஷ்டி. ஆனால், வட்டார தலைவர்கள் நியமனத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் பெறவேண்டுமாம். மாநிலத் தலைவர் அழகிரி கார்த்திக்கு எதிராக நிற்பதால் அங்கேயும் சிக்கல் வெடித்திருக்கிறது.

இருப்பினும் வட்டார தலைவர் நியமனம் தொடர்பாக அழகிரியை சந்திக்க நேரம் கேட்டாராம் புதிய மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி. ஆனால், “என்னால் ஒப்புதல் தரமுடியாது. உங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி டெல்லியிலேயே போய் ஒப்புதல் வாங்கிக்கொள்ளுங்கள்” என கோபப்படாமல் கோத்துவிட்டாராம் அழகிரி.

இதனால் சஞ்சயும் அவரது விசுவாச வட்டமும் தற்போது டெல்லியில் முகாம் போட்டிருக்கிறதாம். இந்தச் சூழலில், கார்த்தி எதிர்ப்பு கோஷ்டி இன்னொரு அஸ்திரத்துடன் அழகிரியைச் சந்திக்க இன்று காலையில் சென்னை வந்து இறங்கி இருக்கிறது.

சஞ்சய் காந்தி
சஞ்சய் காந்தி

இம்முறை காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை நடந்தபோது அதை டிஜிட்டல் முறையில் (டிஜிட்டல் மெம்பர்ஷிப்) செயல்படுத்த உத்தரவிட்டிருந்தாராம் ராகுல். அப்போதே இதை எதிர்த்து குரல்கொடுத்த கார்த்தி சிதம்பரம், “இதெல்லாம் ஒத்துவராது” என்று சொல்லிவந்தார். கார்த்தி இப்படிச் சொன்னதால் அவரது விசுவாசிகள் பலரும் டிஜிட்டல் மெம்பர்ஷிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்துவிட்டார்கள். அப்படி இருந்தவர்களில் சஞ்சய் காந்தியும் ஒருவராம்.

இதைத் தோண்டித் துருவி எடுத்திருக்கும் கார்த்தி எதிர்ப்புப் படை, “கட்சியில் மெம்பரே ஆகாத ஒருவரை மாவட்டத் தலைவர் பதவிக்கு சிபாரிசு செய்திருக்கிறார் கார்த்தி. எனவே, அவரை உடனடியாக மாவட்ட தலைவர் பதவியிலிருந்து நீக்கவேண்டும்” என்று அழகிரியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்போகிறதாம். இதற்காகத்தான் வட்டார தலைவர்களை அழைத்துக் கொண்டு அதிரடிப் பயணமாக சென்னை வந்து இறங்கி இருக்கிறாராம் முன்னாள் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

தங்களுக்கு எதிராக இப்படியொரு சதி நடக்கிறது எனத் தெரிந்ததும், சஞ்சய் காந்தி டிஜிட்டல் மெம்பர்ஷிப் ஆனதற்கான ஆதாரத்தை வாட்ஸ் அப்பில் பரப்ப ஆரம்பித்திருக்கிறது கார்த்தி கோஷ்டி. இதுகுறித்தும் சர்ச்சையைக் கிளப்பும் கார்த்தியின் எதிர் கோஷ்டி, “25 நபர்களை உறுப்பினராகச் சேர்த்தவர்கள் தான் காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினராக முடியும். அப்படி தீவிர உறுப்பினர் ஆனவர்கள் தான் கட்சிப் பதவிகளுக்கு வரமுடியும். ஆனால், யாருக்கும் தெரியாமல் தன்னை மட்டுமே டிஜிட்டல் மெம்பராகச் சேர்த்துக்கொண்ட சஞ்சய் காந்தி தீவிர உறுப்பினராக முடியாது. அப்படிப்பட்டவரை எப்படி தலைவராக்கினார்கள்?” என்று கொக்கி போடுகிறது.

அத்துடன், “கார்த்தி சிதம்பரம் டிஜிட்டல் மெம்பர்ஷிப் ஆகி இருக்கிறாரா என்பதிலும் சந்தேகம் இருக்கிறது. எனவே, அதையும் மாநிலத் தலைமை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அழகிரியிடம் சொல்லப் போகிறார்களாம். இவர்களை இன்று மதியம் 3 மணிக்கு சந்திக்க நேரம் கொடுத்திருக்கிறாராம் அழகிரி. டிஜிட்டல் மெம்பர்ஷிப் பணிகள் ஒரு வருடத்துக்கு முன்பே முடிக்கப்பட்டுவிட்டன. ஒருவேளை, கார்த்தி சிதம்பரம் டிஜிட்டல் மெம்பர்ஷிப் ஆகவில்லை என்றால் அவர் எம்பி சீட் கேட்பதே சிக்கலாகிவிடும் என கொத்தாகக் கொளுத்திப் போடுகிறது எதிரணி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in