‘குக் வித் கோமாளி'யில் செஃப் தாமு கண் கலங்கியது ஏன்?

‘குக் வித் கோமாளி'யில் செஃப் தாமு கண் கலங்கியது ஏன்?

சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற குக்கிங் ரியாலிட்டி ஷோக்களில் 'குக் வித் கோமாளி' க்கு எப்போதுமே ஸ்பெஷல் இடம் உண்டு. ‘கொஞ்சம் குக்கிங்.. நிறைய ஃபன்’ என இந்த நிகழ்ச்சியின் வடிவம் ரசிகர்களிடையே அதிரி புதிரி ஹிட் அடித்தது.

புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சரத், சுனிதா என நிகழ்ச்சியின் கோமாளிகளுக்கு இணையாக தொகுப்பாளர் ரக்‌ஷன் மற்றும் செஃப் வெங்கடேஷ் பட், தாமு என மூவரும் இறங்கி நிகழ்ச்சியை இன்னும் கலகலப்பாக்கினார்கள். அதே போல ஒவ்வொரு சீசனிலும் இவர்கள் தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்களும் சுவாரஸ்யமானவர்களே. இரண்டு சீசன்களை முடிந்து தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இதில் பின்னணி பாடகர் அந்தோணிதாசன், வித்யுலேகா, ராகுல் தாத்தா, ரோஷினி, அம்மு அபிராமி, சந்தோஷ் என சின்னத்திரை முதல் பெரிய திரை பிரபலங்கள் பலர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். அந்தோணிதாசன், ராகுல் தாத்தா, மனோபாலா இதுவரை எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்த வாரமும் எலிமினேஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த வாரம் வெளியான புரோமோவில் மணிமேகலை, ரோஷினி, சுனிதா என அனைத்து கோமாளிகள் மற்றும் போட்டியாளர்கள் கண்கலங்கி அழுது கொண்டிருக்கிறார்கள். மேலும் செஃப் தாமு 'என்னை மன்னித்து விடுங்கள்' என கண்கலங்கி கொண்டே வருவது போன்ற காட்சிகள் புரோமோவில் இருப்பது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பார்வையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

சிலர் “ இந்த புரோமோ, ஏப்ரல்-1க்காக விளையாட்டாக நிகழ்ச்சியில் ஏதாவது செய்திருப்பார்கள். ஆனால், வழக்கம் போல ஜாலியாக தான் இருக்கும்” என கமெண்ட் செய்து வரும் நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன தான் நடந்தது? ஏன் இப்படி ஒரு புரோமோ?

நேற்று மற்றும் இன்றைய எபிசோட்டில் போட்டியாளர்கள் அணிகளாக பிரிந்து இரண்டு போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்குள் போட்டி நடந்தது. அதில் சந்தோஷ் மற்றும் ரோஷினிக்குமான போட்டி. இதில் சந்தோஷ் வெற்றி பெற, நூலிழையில் குறைந்த மதிப்பெண்களோடு ரோஷினி இந்த வாரம் நிகழ்ச்சியை விட்டு வெளியேற இருக்கிறார் என செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் அறிவித்தனர்.

இதைக் கேட்டு சந்தோஷ், மணிமேகலை, சுனிதா என அனைவரும் கண்கலங்க “ ஹே! இது நிகழ்ச்சி தான். அதுவும் நான்காவது எலிமினேஷன் தான்!! இதற்கு ஏன் அழ வேண்டும். ரோஷினி இன்னும் வலிமையாக இந்த நிகழ்ச்சிக்குள் திரும்ப வருவார். நல்ல குக் அவர்” என செஃப் வெங்கடேஷ் பட் ஆறுதல் கூறினாலும் அனைவரும் ரோஷினிக்காக கண்கலங்கினர்.

இதனைப் பார்த்து செஃப் தாமுவும் கண் கலங்கி கொண்டே, கீழே இறங்கி வந்து “என்னை மன்னித்து விடுங்கள்! இதை நான் சொல்லியே ஆக வேண்டும். இந்த வாரம் எலிமினேஷன் இல்லை!” என ட்விஸ்ட் வைக்க அனைவரும் ரோஷினியைச் சூழ்ந்து கொண்டு மகிழ்ச்சியை கொண்டாடினர்.

செஃப் தாமு இதனை அறிவித்ததுமே ஷிவாங்கி அவரிடம் வந்து, “ எனக்குத் தெரியும் இப்படிதான் நடக்கும்” என பேசிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தொகுப்பாளர் ரக்‌ஷன், “ நம்ம செஃப் இரண்டு பேரையும் சீரியலுக்கு அனுப்பலாம்! என்னமா நடிக்கிறாங்க. நானே உண்மைன்னு நம்பிட்டேன்!” என கலாய்த்து கொண்டிருந்தார். கடைசியில் புரோமோ பார்த்து விட்டு ரசிகர்கள் ஏப்ரல்-1க்காக என கணித்தது சரி தான் போல!

Related Stories

No stories found.