பிக் பாஸ் அடுத்த சீஸன் எப்போது? - புதிய தகவல்கள்

பிக் பாஸ் அடுத்த சீஸன் எப்போது? - புதிய தகவல்கள்

உலகப் புகழ்பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று, இதுவரை ஐந்து சீஸன்களை முடித்துள்ளது. இந்த ஐந்து சீஸன்களையும் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

ஐந்தாவது சீஸனில் கோவிட் தொற்றால் கமல்ஹாசன் பாதிக்கப்பட்டபோது அந்த ஒரு வாரம் மட்டும் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள், பாடகர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் என கலவையாகப் போட்டியாளர்களின் தேர்வு இருக்கும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைக்கும் புகழைப் பயன்படுத்தி அவர்கள் தங்களது துறையில் ஜொலிப்பார்கள். ஐந்து சீஸன்களுமே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில், ஓடிடி பார்வையாளர்களுக்கு என பிரத்யேகமாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது.

முதல் சில வாரங்கள் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவந்த நிலையில், 'விக்ரம்' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியைவிட்டு விலகுவதாக அவர் அறிவித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி, 'விக்ரம்' படைப்பு என இரண்டையும் சமாளிப்பது கடினமாக இருப்பதாகவும், ‘என்னால் மற்றவர்களின் வேலை பாதிக்கப்படக் கூடாது ஆறாவது சீசனில் நிச்சயம் சந்திப்போம்’ என்றும் அவர் விளக்கமளித்தார்.

கமல்ஹாசனுக்குப் பதிலாக நடிகர் சிலம்பரசன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில் நான்காவது சீஸனில் கலந்துகொண்ட பாலா, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஒவ்வொரு வருடமும் ஜூலை அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிடும். அந்த வகையில் இந்த வருடத்தில் ஆறாவது சீஸன் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

அது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வழக்கம் போலவே ஜூலை இறுதி வாரம் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான போட்டியாளர்கள் தேர்வு தற்போது தொடங்கியுள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம். பிக் பாஸ் நிகழ்ச்சி விட்டு விலகும் போது நடிகர் கமல்ஹாசன் ஆறாவது சீஸனைத் தொகுத்து வழங்குவதாகச் சொல்லியிருந்தார். அதனால் கமல்ஹாசன் இந்த சீஸனைத் தொகுத்து வழங்குவாரா அல்லது அவரது மற்ற பணிகள் காரணமாக வேறு யாரேனும் தொகுத்து வழங்க வருவார்களா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in