`என் மகள் சாவுக்கு ஹேமந்த்தான் காரணம்; ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை'- விஜே சித்ராவின் பெற்றோர் கண்ணீர்

`என் மகள் சாவுக்கு ஹேமந்த்தான் காரணம்; ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை'- விஜே சித்ராவின் பெற்றோர் கண்ணீர்

விஜே சித்ராவின் மரணம் குறித்து அவரது பெற்றோர் இப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விஜே சித்ரா சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு சில மாதங்களுக்கு முன்பே அவருக்கும் தொழிலதிபரான ஹேமந்த் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுக்குள் பிரச்சினை என்றும் ஹேமந்த் கொடுத்த அழுத்தம் காரணமாகவே சித்ரா தற்கொலை செய்து கொண்டார் எனவும் சித்ராவின் பெற்றோர் புகார் கொடுத்தனர். வழக்கின் விசாரணை இன்னும் போய் கொண்டிருக்கும் நிலையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் சித்ராவுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான துன்புறுத்தலும் மிரட்டலும் கொடுத்தது ஒரு காரணம் எனவும் தற்கொலை செய்து கொண்ட அன்று சித்ரா மன உளைச்சலில் இருந்ததாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஹேமந்த் இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

இதனை அடுத்து இப்போது சித்ராவின் பெற்றோர் ஊடகங்களில் பேசியுள்ளனர். இன்னமும் ஹேமந்த் தான் சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என சொல்பவர்கள் சித்ரா இறந்து இரண்டு வருடங்கள் ஆகியும் ஹேமந்த் மீது காவல்துறை இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் அவர்கள், 'ஹேமந்த்துக்கு சொந்தமாக வீடு இருக்கும் போது ஏன் அவர்கள் ரூம் எடுத்து தங்க வேண்டும்? இதை எங்களிடம் இருந்தும் மறைத்திருக்கிறார்கள். சித்ராவுக்கு அவசர அவசரமாக நடந்த இந்த நிச்சயத்திலோ அல்லது திருமணத்திலோ விருப்பமே இல்லை. அவளை மிரட்டி, கட்டாயப்படுத்தி தான் இதற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்கள். ஹேமந்த் குடும்பத்தில் என் மகளை தன் மகள் பார்த்து கொள்கிறேன் என அவரது பெற்றோர் கூறினார்கள். ஆனால், கடைசியில் சாகடித்து தான் அவளை கூட்டி வந்தார்கள்.

ரோடு, சின்ன கோயில்களில்கூட சிசிடிவி கேமரா உள்ளது. ஆனால், அவ்வளவு பெரிய ஹோட்டலில் இல்லை என்று சொல்வதை நம்ப முடியவில்லை. ஹேமந்த் ஒரு ஏமாற்றுக்காரன். பல பெண்களோடு தொடர்பு இருக்கவும் வாய்ப்புண்டு. போன ஆட்சி காலத்தில் தான் எங்கள் பிள்ளையின் கேஸை எடுக்கவில்லை. இவர்கள் ஆட்சிக்கு வந்தாலாவது கவனம் கொடுப்பார்கள் என்று எண்ணிதான் இவர்கள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அப்படி வேண்டி கொண்டேன். ஆனால், இவர்கள் ஆட்சியிலும் எத்தனை முறை வலியுறுத்தியும் சித்ராவின் கேஸ் அப்படியே தான் இருக்கிறது" என பேசி இருக்கின்றனர்.

மேலும் சித்ராவின் மருத்துவர்களிடம் இன்னும் சரியானபடிக்கு விசாரணை நடத்த வேண்டும் என சொல்பவர்கள் தங்கள் வீட்டில் உள்ள கடன் பற்றியும் அந்த வீடு சித்ரா நேர்மையாக சம்பாதித்து வாங்கியது எனவும் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in