‘என்னை ஒரு தியாகியாகக் காட்டிக்கொள்ள வேண்டுமா? - விஜயலட்சுமி விளாசல்

‘என்னை ஒரு தியாகியாகக் காட்டிக்கொள்ள வேண்டுமா? - விஜயலட்சுமி விளாசல்

இயக்குநர் அகத்தியனின் மகளும் நடிகையுமான விஜயலட்சுமி சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனம் ஆடி ரீல்ஸ் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

இதற்கு ஒரு பெண் அளித்த பின்னூட்டம் விஜயலட்சுமியைக் கொந்தளிக்க வைத்துவிட்டது. 'ஒரு குழந்தையின் அம்மாவாக இருந்துகொண்டு இந்த ஆட்டம் தேவையா?' என்ற ரீதியில் அந்தப் பெண் எழுதிய பின்னூட்டத்துக்குப் பதிலளித்திருக்கும் விஜயலட்சுமி, 'அம்மாவாக இருந்தால் மூலையில் உட்கார்ந்து அழ வேண்டுமா? அய்யோ, அவ்வளவுதான் என் வாழ்க்கை முடிந்துபோய்விட்டது என்று என் வாழ்க்கையைப் பிறருக்கு அர்ப்பணித்துவிட்டு என்னை ஒரு தியாகியாகக் காட்டிக்கொள்ள வேண்டுமா? நீ வேண்டுமானால் அதைச் செய். உனக்குத் தியாகச்செம்மல் என சிலை வைப்பார்கள். எனக்கென்று ஒரு வாழ்க்கை உள்ளது. நான் மட்டுமல்ல பல அம்மாக்களுக்கும் குழந்தை பெற்ற பிறகு அவர்களுக்கென ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என விருப்பப்படுகிறார்களோ அதைச் செய்வதற்கு எல்லா உரிமையும் அவர்களுக்கு உண்டு.

விருப்பப்பட்ட உடை அணியலாம், விருப்பம் இருந்தால் பிடித்த வேலையைச் செய்யலாம். உன்னை மாதிரி ஆட்களால்தான் நிறைய பெண்கள் மன அழுத்தத்தில் உள்ளார்கள். ஒருவரை ஜட்ஜ் செய்வதை நிறுத்து' என்று கூறியிருக்கிறார்.

மேலும், ‘நீங்க குடும்ப குத்துவிளக்கா அல்லது எங்களைப் போன்று இருக்க முடியவில்லை என்ற பொறாமையில் கமென்ட் செய்து இருக்கிறீர்களா எனத் தெரியல மேடம். என்னவாக இருந்தால் என்ன! உங்கள் அட்வைஸை நீங்களே பின்னி பூ வைத்துக்கொள்ளவும். பெண்களுக்குப் பெண்களே எதிரி என்பது சரியாகத்தான் இருக்கிறது' எனவும் அதில் விஜயலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.

விஜயலட்சுமியின் இந்த பதிலுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான விஜயலட்சுமி மேலும் சில படங்களில் நடித்தார். அதற்குப் பின்பு இயக்குநர் பெரோஸை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு நிலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. விஜயலட்சுமி சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சர்வைவர்' தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலையும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in