என்றைக்கும் என்னை மெட்டி ஒலி லீலாவாகத் தான் பார்க்கிறார்கள்!

‘பிரியமான தோழி’ வனஜா பேட்டி
வனஜா
வனஜா

வனஜா என்பதை விட ‘மெட்டி ஒலி’ லீலா என்றால் பலருக்கும் இன்னும் பரிச்சயம். 90’ஸ் கிட்ஸ் ஆரம்பித்து இப்போது மறு ஒளிபரப்பில் 2கே கிட்ஸுக்கும் பிடித்த சீரியலாகி இருக்கிறது ‘மெட்டி ஒலி’. இப்போது சன் டிவியில் ‘பிரியமான தோழி’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் வனஜாவிடம் ஷூட் இடைவேளையில் காமதேனு மின்னிதழுக்காக பேசினோம்.

’பிரியமான தோழி’ யில் சீதா கதாபாத்திரம் இதுவரை நீங்கள் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கிறதே..?

பிரியமான தோழியில்...
பிரியமான தோழியில்...

சீதா கதாபாத்திரம் பற்றி இயக்குநர் என்னிடம் ஏற்கெனவே சொல்லி இருந்தார். இந்த முற்றிலும் வேறானது. கணவனை இழந்த பெண் என்பதால் அவர்களின் உணர்வுகள் வேறானதாக இருக்கும். அது பற்றி எல்லாம் இயக்குநர் விளக்கும் போது எனக்கு பிடித்திருந்தது. அக்கா, அண்ணி என்றில்லாமல், “சீதாம்மா” என்று தான் பாசத்தோடு அனைவரும் கூப்பிடுவார்கள். ரொம்பவே நேர்மறையான கதாபாத்திரம் இது. ‘மெட்டி ஒலி’ லீலாவுக்குப் பிறகு எனது இந்தக் கதாபாத்திரமும் பலருக்கும் பிடித்திருக்கிறது என்பதில் சந்தோஷம்.

'சிங்கம்' படத்தில் உங்கள் கதாபாத்திரம் இப்போது வரை பேசப்படுகிறதே..?

முதலில், அந்த கதாபாத்திரம் வேண்டாம் என்று தான் மறுத்தேன். பிறகு, நடித்துப் பார்ப்போம் என்று தைரியமாக ஒத்துக் கொண்டேன். இப்போது வரை அது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று அவர்கள் மறக்காமல் இருப்பது மகிழ்ச்சியான ஒரு விஷயம். என் கல்யாணத்திற்குக்கூட நடிகர் சூர்யா, விவேக் என அந்த படத்தின் நட்சத்திரங்கள் வந்திருந்த தருணம் என்னால் மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று.

ஆனால், அதற்குப் பிறகு உங்களை படங்களில் அதிகமாகப் பார்க்க முடியவில்லையே?

முன்பு, சன் டிவியில் காலையில் ஆரம்பித்து இரவு வரை வரும் சீரியல்கள் அனைத்திலும் நான் இருப்பேன். சன் டிவி ஆர்ட்டிஸ்ட் என்று சொல்லிவிடும் அளவிற்கு அந்த சேனலின் சீரியல்களில் நேரம் கிடைக்காமல் நடித்துக் கொண்டிருந்தேன். பிறகு கல்யாணம், குடும்பம் என வந்ததும் அதற்கும் நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.


இப்போது குழந்தைகள் எல்லாம் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால், சீரியல்களில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறேன். திருமணத்திற்குப் பிறகு குழந்தைகள் பிறந்த பிறகு என ஒவ்வொரு முறையும் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு தான் சீரியல்களில் வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் சன் டிவி சீரியல்கள் அமைந்திருந்தது சந்தோஷம். சீரியல்கள் ஒரு பக்கம் என்றாலும் இன்னொரு பக்கம், படங்களிலும் அதிகம் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. விரைவில் அதுவும் நடக்கும் என நம்புகிறேன்.

'மெட்டி ஒலி' இத்தனை ஆண்டுகள் கழித்தும் ரசிகர்களிடையே மறக்க முடியாத ஒரு ஹிட் சீரியலாக இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மெட்டி ஒலி சீரியலில்...
மெட்டி ஒலி சீரியலில்...

நிச்சயம் அது நாங்களும் எதிர்பாராதது. கரோனா சமயத்தில் இந்த சீரியலை மறுஒளிபரப்பு செய்ய ஆரம்பித்தார்கள். இப்போதிருக்கும் சீரியல்களைப் பார்த்துப் பழகிய இளம் தலைமுறையினருக்கு ‘மெட்டி ஒலி’ கதை ஒரு புதுவிதமான அனுபவத்தைக் கொடுத்திருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாதது. அந்தக் கதை இயல்பாக இருந்தது என சீரியல் பார்த்த பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள். அதே போல, பழைய நினைவுகளை இந்த சீரியல் கொடுத்ததாகவும் சமூக வலைதள பக்கங்களில் எனக்கும் நிறையப் பேர் குறுஞ்செய்திகளில் சொன்னார்கள்.

எனக்கு மட்டுமல்ல... மெட்டி ஒலியில் நடித்த எல்லாருக்குமே அந்த சீரியல் வாழ்க்கை அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும். சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் இப்போது வரை நாங்கள் அக்கா, தங்கச்சியாகத் தான் பழகி வருகிறோம். நல்லது கெட்டது என அனைத்தையும் எங்களுக்குள் பகிர்ந்து கொள்வோம்.

எதிர்மறை, நேர்மறை கதாபாத்திரங்களில் நீங்கள் மாறி மாறி நடித்திருந்தாலும் எதில் நீங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என நினைக்கிறீர்கள்?

நிச்சயமாக நேர்மறை பாத்திரங்கள் தான். இதற்கு முன்பு நான் நடித்திருந்த ’ராஜா மகள்’ சீரியலில் பொசசிவான அம்மா கதாபாத்திரம். அதிலும் சிறிது எதிர்மறை தன்மை இருக்கும். ஆனால், சினிமா அப்படி கிடையாது. அதில் எதிர்மறை கதாபாத்திரம் முற்றிலும் வேறானதாக இருக்கும். சீரியலில் நான் எதிர்மறையாக நடித்ததற்கே நிறையப் பேர் என்னிடம் வந்து “ஏன்மா நீங்க இதிலெல்லாம் நடிக்கிறீங்க?” என்று கேட்டார்கள்.

இதுமட்டுமல்லாமல், “நீங்கள் எப்போதுமே எங்களுக்கு ’மெட்டி ஒலி’ லீலா தான். நீ எங்க வீட்டுப் பொண்ணு” என்றும் சொல்லி இருக்கிறார்கள். இருப்பினும் ’ராஜா மகள்’ சீரியலில் என்னுடைய கதாபாத்திரம் பிடித்தவர்களும் உண்டு. அந்த சீரியலை சீக்கிரம் முடித்து விட்டார்களே என்ற வருத்தம் பார்வையாளர்களை போலவே எனக்கும் உண்டு. ஏனெனில், ஒரு கதையில் நான் உள்ளே போகும் முன்பு கதை, என்னுடைய கதாபாத்திரம் அனைத்தையும் கவனிப்பேன். அந்த வகையில் ‘ராஜா மகள்’ சீக்கிரம் முடிந்து விட்டதில் வருத்தமே.

தொடர்ந்து எதிர்மறை பாத்திரங்கள் வந்தால் நடிப்பீர்களா?

நடிப்பேன். ஆனால், அதிகம் நடிப்பேனா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. ஏனெனில், அது எனக்கு செட் ஆகாது என எனக்கே தெரியும். செட் ஆகாது என்பதைத் தாண்டி மக்களும் அதில் என்னை பார்க்க விரும்பமாட்டார்கள். ஏனெனில் ‘மெட்டி ஒலி’ லீலா என்றே என்னை பலரும் பார்த்துப் பழகி விட்டார்கள். இப்போது சீதாம்மா கதாபாத்திரமும் அப்படி இருக்கும் போது இதிலிருந்து விலகி முழுக்க முழுக்க எதிர்மறை பாத்திரம் செய்வது எனக்கு அவ்வளவாய் செட் ஆகாது.

உங்கள் தங்கை உமா இறந்து ஒரு வருடம் ஆக போகிறதே..?

தங்கையுடன்...
தங்கையுடன்...

உமாவின் இழப்பு எங்களால் இப்போதும் நம்ப முடியாத ஒன்று. எங்கள் குடும்பத்தில் மிகவும் அமைதியான பெண் அவள். நான் கூட எல்லோரிடமும் படபடவென்று பேசி விடுவேன். ஆனால், உமா அப்படிக் கிடையாது. ‘மெட்டி ஒலி’ சீரியலில் லீலா கதாபாத்திரத்திற்கு நான் தேர்வான பிறகு விஜி கதாபாத்திரத்திற்கு என்னிடம் சொல்லி தான் உமாவை இயக்குநர் தேர்வு செய்தார். அதன் பிறகு அவளும் திருமணம் ஆகி சீரியலை விட்டு விலகினாள். மீண்டும் சீரியலில் நடிக்க வேண்டும் என்று அவளுக்கு விருப்பம் இருந்தது. அதற்காக அவள் காத்திருந்த போது தான் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அவள் இப்போதும் எங்களுடனேயே இருப்பது போலத்தான் நாங்கள் உணர்கிறோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in