விஷாலுடன் நடிக்க வந்த வாய்ப்பை நழுவவிட்டேன்!

‘சில்லுனு ஒரு காதல்’ சமீர் பேட்டி
சமீர்
சமீர்

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘சில்லுன்னு ஒரு காதல்’ சீரியலில் வரும் சமீர்- தர்ஷினி கெளடா ஜோடி ஹிட் கொடுத்திருக்கும் ஜோடி. இதில் சூர்யா கதாபாத்திரத்தில் சமீர் நடித்து வருகிறார். நடிப்பு துறைக்குள் நுழைந்தது, ஃபிட்னெஸ் சீக்ரெட், ஆரம்ப நாட்களில் எதிர்கொண்ட உடல் கேலிகள் என நிறைய விஷயங்களை காமதேனு இணையதளத்திற்காக பகிர்ந்து கொண்டார் சமீர்.

’சில்லுன்னு ஒரு காதல்’ சீரியல் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. ரசிகர்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது?

என்னுடைய அறிமுக சீரியல் இது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாமல் இந்தத் துறைக்குள் நுழைந்தேன். இந்த சீரியல் ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவம் எனக்கு கிடைத்திருக்கிறது. அதெல்லாமே எனக்கு நல்ல நினைவுகள் தான்.

இந்த கதாபாத்திரத்திற்காக முன்பு ‘சிங்கம்’ சூர்யா போல மீசை வைத்திருந்தேன். இப்போது, சிபிஐ கதாபாத்திரம் என்பதால் முற்றிலும் வேறாக தாடி எல்லாம் வைத்து ஆளே மாறிவிட்டேன். அப்படியும் வெளியே போனால், மக்கள் என்னை அடையாளம் கண்டு சீரியலுக்கும் எனக்கும் வரவேற்பு கொடுக்கிறார்கள். அந்த வகையில் மகிழ்ச்சிதான்.

இந்த சீரியலில் போலீஸ் கதாபாத்திரம் எனும் போது அதற்கான ஸ்பெஷல் தயாரிப்புகள் ஏதும் இருந்ததா அல்லது இயக்குநரின் நடிகராக இருக்கிறீர்களா?

முன்பே சொன்னது போல, இந்த துறைக்குள் வரும்போது எந்த ஐடியாவும் இல்லாமல் தான் வந்தேன். பிறகு உள்ளே வந்து தான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். கண்ணாடி முன்னாடி பயிற்சி எடுத்தது, இயக்குநரிடம் கற்றுக்கொண்டது என நிறைய இதன் பின்னால் உண்டு.

எப்படி இந்த நடிப்புத் துறையை தேர்ந்தெடுத்து உள்ளே வந்தீர்கள்?

கோயம்புத்தூர் என்னுடைய சொந்த ஊர். நடிக்க வர வேண்டும் என்று நான் எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. 2020-ல் லாக்டெளன் எல்லாம் முடிவுக்கு வர இருந்த சமயம். அப்போது என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மெசேஜ் வந்தது. ’புதிதாக தொடங்க இருக்கும் ஒரு சீரியலுக்கு உங்களை நடிக்க வைக்க இருக்கிறோம். ஆர்வம் இருக்கிறதா?’ என கேட்டார்கள். அப்போது எந்த ஐடியாவும் இல்லாமல் இருந்ததால், நான் எந்த பதிலும் கொடுக்கவில்லை.

ஆனால், கலர்ஸ் தமிழில் இருந்து மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். ஆடிஷன் போனது வேறு ஒரு சீரியலுக்கு ஆனால், இப்போது நடித்துக்கொண்டிருப்பது ‘சில்லுனு ஒரு காதல்’ சீரியலில். உள்ளே வந்ததும், நிறைய நடிகர்களை நான் சந்தித்துப் பேசியபோது, எனக்குப் பல நாஸ்டாலஜியாவான விஷயங்கள் வந்து போனது என்பது உண்மை.

நடிக்க வருவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

முதலில் ஐடி துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். பின்பு பிசினஸ் ஒன்றை தொடங்கினேன். அதை இப்போது ஊரில் அப்பா பார்த்து வருகிறார். மாடலிங் போன்ற விஷயங்களும் செய்து வந்தேன். அதற்கான வாய்ப்பும் எனக்கு எதேச்சையாகத் தான் வந்தது. உள்ளே நுழைந்ததும் அதில் ஆர்வம் அதிகமானது. பின்பு இந்தத் துறைக்கு ஏற்ப உணவு, உடை, என்னுடைய ஸ்கின் என எல்லாவற்றிலும் மாற்றம் கொண்டு வந்தேன்.

காலத்தின் மீது எப்போதுமே எனக்கு நம்பிக்கை உண்டு. நாமாக ஒன்று நினைத்தால் அது நடக்காது. ஆனால், வாய்ப்பு நம்மை தேடி வரும்போது அதைப் பயன்படுத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் அடுத்து என்பதே நாம் யாரும் எதிர்பாராதது தானே. அது என் வாழ்வில் நிறையவே நடந்தது.

குடும்பத்தார் சப்போர்ட் எந்த அளவுக்கு இருந்தது?

நான் வீட்டில் ஒரே பையன் என்பதால் முதலில், ஊரைவிட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காக மறுத்தார்கள். அவர்களுக்கும் சினிமா துறையைப் பற்றி பெரிதாக எந்த ஐடியாவும் இல்லை. பிறகு ஒரு கட்டத்திற்கு மேல், உனக்குப் பிடித்திருந்தால் செய் என சம்மதம் தெரிவித்து இப்போது வரை அந்த ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.

சீரியலில் நான் ஏதேனும் உடை, வசனம், மேக்கப் போன்றவற்றில் தவறு செய்திருந்தால்கூட உடனே என்னிடம் சொல்வார்கள். நான் இந்த சீரியலை புரமோட் செய்வதை விட என் அப்பா சமூக வலைதளங்களில் அதிகம் செய்து வருகிறார். அந்த அளவிற்கு இந்தத் துறையில் என்னுடன் என் குடும்பமும் ஒன்றிவிட்டது.

’சில்லுனு ஒரு காதல்’ சீரியல் யூனிட்டில் இருப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இங்கு நடிக்க வந்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. எல்லோரும் ஒரு குடும்பம் போல இருக்கிறோம். இந்த வீட்டிலும் எனக்கு அம்மா, அப்பா, அண்ணன், தங்கச்சி என அனைவரும் இருக்கிறார்கள். இப்போது தான் ஆரம்பித்தது போல இருக்கிறது ஆனால், அதற்குள் ஒரு வருடம் கடந்து விட்டது என்பது தான் அனைவருக்கும் ஆச்சரியமான விஷயம்.

உங்களைப் பற்றிய கிசுகிசு, பரபரப்பான செய்திகள் இதை எல்லாம் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?

ஆரம்ப நாட்களில் எனக்கும் கவலையாகத்தான் இருந்தது. அதிக உடல் கேலிகளை எல்லாம் எதிர்கொண்டேன். சூர்யா ஐபிஎஸ் கதாபாத்திரம் 30+ வயது இருக்கக்கூடிய ஒருவன் எனும்போது அதற்கேற்றாற் போல தான் என் உருவம் இருக்க வேண்டும் என்பதால் சற்று உடல் எடை கூடி இருந்தேன். இதற்கெல்லாம் கேலிகளை எதிர்கொண்டேன்.

இதெல்லாம் ஆரம்ப காலத்தில் தான் இருந்தது. இது போன்ற தேவையில்லாத கேலிகளை எதிர்கொள்ளும் போது, நான் அவர்கள் மனதில் ஆழமாக இருக்கிறேன் என்று அர்த்தம். நான் அப்படி எடுத்துக்கொள்வதால் இதெல்லாம் பெரிது படுத்துவதில்லை. என்னைப் பிடித்தவர்களும் இருக்கிறார்கள் என்பதால் அதுவே போதும்.

மாடல் என்பதால் ஃபிட்னெஸில் அதிக கவனம் செலுத்துவீர்கள். ஃபிட்னெஸ் டிப்ஸ் குறித்து சொல்லுங்கள்?

இந்த கதாபாத்திரத்திற்காக நான் 70 கிலோவில் இருந்து 82 கிலோவாக உடல் எடை கூடினேன். இடையில் இந்த சீரியல் ஷெட்யூல் காரணமாகவும் உடல் எடை கூடினேன். எதுவுமே எளிது கிடையாது. முறையான, ஆரோக்கியமான உணவு, சரியான தூக்கம் என்பது கண்டிப்பாக வேண்டும். வாரத்தில் மூன்று நான்கு நாட்கள் நிச்சயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

சினிமா வாய்ப்புகள் ஏதும் வந்ததா?

நிறைய வந்தது. ஆனால், சீரியல் டேட் பிரச்சினைகள் காரணமாக அதை ஒத்துக்கொள்ள முடியாமல் போனது. நடிகர் விஷாலுடன் ஒரு படம் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை மிஸ் பண்ணியதற்கும் டேட் பிரச்சினை தான் காரணம். சினிமாவில் எல்லாருமே எனக்கு இன்ஸ்பிரேஷன் தான். குறிப்பாக, தனுஷ், சூர்யா போன்றவர்களை எனக்குப் பிடிக்கும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in