நயன்தாராவை எனக்கு ஏன் பிடிக்கும் என்றால்...

- ‘மந்திரப்புன்னகை’ சுப்ரிதா பேட்டி
சுப்ரிதா
சுப்ரிதா

”பெங்களூரு பொண்ணு நான். மழைக்காலம் ஆரம்பிச்சதும் சென்னை ஒரு வாரமா பெங்களூரை நியாபகப்படுத்துது. ஷூட்டிங், குடும்பம் என பரபரப்பாக நேரம் போய்க் கொண்டிருக்கிறது” என சுப்ரிதா நம்மிடம் பேசியது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் ‘மந்திரப்புன்னகை’ சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து. ‘காமதேனு’ இணையதளத்திற்காக அவரிடம் பேசியதிலிருந்து கொஞ்சம் இங்கே...

மந்திரப்புன்னகை’ காயத்ரிக்கும் சுப்ரிதாவுக்கும் என்ன ஒற்றுமை இருக்கு?

’மந்திரப்புன்னகை’ சீரியல் நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், திடீரென வந்த வாய்ப்பு இது என்பதால் இந்த சீரியலுக்கும், இந்த கதாபாத்திரத்திற்கும் நான் தயாராகமலே இருந்தேன். 'மந்திரப்புன்னகை’ காயத்ரிக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமை என்ன என்பதை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். காயத்ரி எப்போதும் எதையும் விட்டுக்கொடுக்கமாட்டாள். ஒன்று வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதை அடையாமல் விட மாட்டாள். நானும் அப்படித்தான்.

நல்ல சம்பளத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த நீங்கள், அதை விட்டுவிட்டு நடிக்க வந்தீர்களாமே? நடிப்பில் ஆர்வம் வர என்ன காரணம்?

நடித்தே ஆக வேண்டும் என்பது என் திட்டத்திலேயே இல்லை. நான் படித்த இன்ஜினியரிங்கும்கூட அப்படித்தான். ஆனால், வழக்கம் போல எங்கள் வீட்டில் கட்டாயப்படுத்திப் படிக்க வைத்தார்கள். எந்த விஷயம் எடுத்தாலும் அதை எப்படியாவது சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படித்தான் நான் இன்ஜினியரிங் சிறப்பாக முடித்து கேம்பஸில் வேலைக்குத் தேர்வானேன். நிறையப் பேருக்கு நான் எழுத்து, இயக்கத்தில் ஆர்வமுடன் இருக்கிறேன் என்பது தெரியாது. கதைகள் எழுதுவதில் எனக்கு ஆர்வம் இருக்கிறது. 2018 சமயத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் கன்னடத்தில் ஒரு சேனலுக்கு திரைக்கதை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அங்கு ரைட்டிங் ஆடிஷனுக்காகப் போன போது என்னை நடிக்கக் கேட்டார்கள். பொதுவாக நான் புதிதாக வரும் வாய்ப்புகளை எப்போதுமே மறுக்க மாட்டேன். அப்போது நல்ல சம்பளத்தில் வேலையில் இருந்தாலும் ஏதோ ஒரு திருப்தி எனக்கு இல்லாமல் இருந்தது. நடிக்க வந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன்.

கன்னடம், தெலுங்கு, இப்போ தமிழ் என எல்லா மொழிகளிலும் நடிச்சுட்டு வரீங்க. என்ன மாதிரியான வித்தியாசம் இருக்கிறது?

எந்தவொரு நடிகருக்கும் மொழி என்பது முக்கியம் என நினைக்கிறேன். வசனங்களை யார் வேண்டுமானாலும் பேசி விடலாம். ஆனால், வார்த்தைகளின் அர்த்தத்தையும் உணர்ச்சியையும் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இன்னும் சிறப்பாக நீங்கள் நடிப்பதற்கு அது உதவும். எனக்குத் தாய்மொழியான கன்னடத்தைப் போலவே தமிழும் பிடித்திருக்கிறது.

தமிழ் படங்கள் பார்ப்பீர்களா? இங்கு பிடித்த நடிகர்கள் யார் யார்?

நிச்சயமாக! நடிகர் விஜய், சூர்யா, நயன்தாரா இவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இதில் விஜய் எனக்கு சைல்டுகுட் க்ரஷ் நயன்தாராவை ஏன் எனக்கு பிடிக்கும் என்றால், தனிப்பட்ட முறையிலும் சரி, படங்கள் ரீதியாகவும் சரி அவர் நிறைய ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்து இருக்கிறார். இருந்தாலும் அவர் இன்று வரை ‘லேடி சூப்பர் ஸ்டார்’. திரையில் எந்தக் கதாபாத்திரத்திலும் அவர் பொருந்திப் போவார்.

கன்னடத்தில் இருந்து வெளியான ‘கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’ படங்கள் எல்லாம் பான் இந்திய படங்களாக வெற்றிப் பெற்று இருக்கு. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கன்னட சினிமாவில் முன்பிருந்தே நல்ல படங்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இப்பொழுது இந்தப் படங்களின் வரவுக்கு பிறகு கன்னடப் படங்கள் குறித்த பிறரது பார்வை மாறி இருக்கிறது. ‘கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’ இந்த இரண்டு படங்களும் இந்தியாவின் எல்லா மூலைகளிலும் சென்று சேர்ந்திருக்கிறது. இது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

முன்பெல்லாம் பாலிவுட் படங்கள்தான் கிங். ஆனால், இப்பொழுது பாலிவுட் படங்கள் வெற்றிபெறுவது பெரிய போராட்டமாக உள்ளது. தமிழ், கன்னடம் என மற்ற மொழிப் படங்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்து வருகிறது. மக்களின் படம் பார்க்கும் ரசனையும் மாறி வருகிறது என்பதில் மகிழ்ச்சி.

பாலிவுட் படங்கள் சமீபத்தில் வெற்றிபெறாததற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

அவர்கள் போட்டியாளர்களை மிகச் சாதரணமாக எடைபோட்டு விட்டார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால், கன்னடப் படங்கள் தற்போது கொடி கட்டிப் பறக்கிறது. தமிழ்ப்படங்கள் பாலிவுட்டை மிஞ்சுகிறது. இது நம் வாழ்க்கைக்கான பாடமும் கூட. நீங்கள் கவனம் சிதறவிட்டு அங்குமிங்கும் சென்றால் உங்கள் இடத்தை இழக்க நேரிடும்.

புது வருடம் வரப் போகிறது. என்ன திட்டம்?

எனக்கு நண்பர்களுடன் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு புது வருஷமும் புது இடத்துக்கு பயணம் செய்வதை வழக்கமாக வைத்திருப்பேன். இந்த வருஷத்திற்கு இன்னும் எதுவும் ப்ளான் செய்யவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in