`குயின்’ வெப்சீரிஸின் அடுத்த பாகம் ரெடி: ரம்யாகிருஷ்ணனின் அடுத்த அதிரடி கெட்அப்

`குயின்’ வெப்சீரிஸின் அடுத்த பாகம் ரெடி: ரம்யாகிருஷ்ணனின் அடுத்த அதிரடி கெட்அப்

‘குயின்’ வெப்சீரிஸின் அடுத்த பாகத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருவதாக நடிகை ரம்யா கிருஷ்ணன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு வெளிவந்த வெப்சீரிஸ் ‘குயின்’. ‘கிடாரி’ படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் முருகேசன் மற்றும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இந்த சீரிஸை இயக்கி வெளியிட்டு இருந்தனர். கடந்த 2019-ம் ஆண்டு எம்.எக்ஸ் பிளேயரில் இந்த தொடரின் முதல் பாகம் வெளியாகி இருந்தது. ஷக்தி சேஷாத்திரி என்ற கதாபாத்திரம் சிறு வயதில் படிப்பில் ஆர்வமாக இருப்பது, பின்பு குடும்ப சூழல் காரணமாக சினிமாவுக்குள் நுழைவது, எம்.ஜி.ஆருடன் தொடங்கிய நெருங்கிய நட்பு ஆகிய பகுதிகளை கொண்ட 11 எபிசோட்களாக ஒளிபரப்பானது.

பின்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் இந்த முதல் சீசன்களின் மொத்த எபிசோடும் ஒளிபரப்பானது. சிறுவயது ஷக்தியாக அனிகா சுரேந்திரன், இளமை காலத்தில் அஞ்சனா, பின்பு ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் ஷக்தி கதாபாத்திரத்தின் வெவ்வேறு வயதான காலக்கட்டங்களில் நடித்திருப்பார்கள். முதல் சீசனுக்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசனுக்கான படப்பிடிப்பு 2020-ல் ஆரம்பிக்கும் என கெளதம் வாசுதேவ் மேனன் அறிவித்து இருந்தார். ஆனால், கரோனா பிரச்சினைகள் காரணமாக தள்ளிபோய் அது குறித்தான பணிகள் தொடங்காமலேயே இருந்தது.

ஆனால், இப்போது அடுத்த சீசனுக்கான படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. அரசியலுக்குள் ஷக்தி (ஜெயலலிதா) தீவிரமாக நுழைந்த காலக்கட்டத்தில் இருப்பது மாதிரியான அந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை ரம்யா கிருஷ்ணன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து பகிர்ந்து, ‘ஆமாம்! படப்பிடிப்பு தொடங்கி விட்டது’ என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும், தாங்கள் அடுத்த சீசனுக்கு ஆர்வமாக காத்திருப்பதாகவும் நல்ல செய்தி ரம்யா கிருஷ்ணன் கூறியிருப்பதாகவும் கமென்ட் செக்‌ஷனில் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in