அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்! - செஃப் வெங்கடேஷ் பட் நெகிழ்ச்சி

அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்! - செஃப் வெங்கடேஷ் பட் நெகிழ்ச்சி

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் தன்னுடைய ஆரம்ப காலத்தில் நடிகர் ரஜினிகாந்துடனான சம்பவம் ஒன்றை நெகிழ்ந்துபோய் பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியின் சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி'யின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில், நடுவராக இருக்கும் செஃப் வெங்கடேஷ் பட் பேசும் சில விஷயங்கள் பார்வையாளர்கள் மத்தியில் பேசு பொருளாகி வருகிறது. அந்த வகையில் தற்போதைய எபிசோட்டில் கோமாளிகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் வேடமாக கொடுக்கப்பட்டது. இதையடுத்து, ரஜினி குறித்து செஃப் வெங்கடேஷ் பட் ஒரு சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், 'நான் கடந்த 1993-ம் ஆண்டு சமையல் பயிற்சிபெறும் பயிற்சியாளனாக இருந்தேன். பயிற்சியாளனாக இருக்கும் போது, சாப்பிட்ட தட்டை எடுப்பது, சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்ய வேண்டும்.

அப்படி நான் பயிற்சியில் இருந்த சமயத்தில் ஒருநாள் நடிகர் ரஜினிகாந்த் சார் அங்கு வந்தார். அவர் சாப்பிட்டு முடித்ததும் அவரது மேஜையை நான் தான் சுத்தம் செய்தேன். அப்போது பரஸ்பரம் நாங்கள் ஹலோ சொல்லி கொண்டோம். அப்போது என்னைப் பற்றி அவர் கேட்டார். நானும் என்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் சொன்னேன். கடைசியில், ‘நீங்கள் நன்றாக வருவீர்கள்’ என்று வாழ்த்திவிட்டுச் சென்றார்.

அதற்கு பின்பு 2002-ம் ஆண்டு வரை அடிக்கடி அவர் அங்கே வருவார். அப்போதெல்லாம் அவருக்குப் பிடித்த உணவை நான் தான் தனிப்பட்ட முறையில் சமைத்துக் கொடுப்பேன். அப்படி ஒருமுறை இரவு உணவு முடிந்து, ரஜினிகாந்த் சார் குடும்பமும், மற்றொரு குடும்பமும் மட்டும் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். பக்கத்து மேஜையில் உள்ளவர்கள் தங்களது 50-வது திருமண நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ரஜினிகாந்த் சாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள விருப்பப்பட்டனர்.

இதற்காக அங்கிருந்தவர்களிடம் கேட்க, அவர்கள் ‘ரஜினியை அப்படியெல்லாம் தொந்தரவு செய்ய முடியாது’ என பதில் சொன்னார்கள். இதைப் பார்த்து கொண்டிருந்த ரஜினிகாந்த் சார், அவர்கள் கேக் வெட்டும் போது சர்ப்ரைஸாகப் போய் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

இப்படி ஒவ்வொரு முறையும் கேமராவுக்குப் பின்னால் எளிய மனிதனாக அவர் வலம் வருவதால் தான் அவரை அனைவரும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கின்றனர்’ என்று கூறியிருக்கிறார் வெங்கடேஷ் பட்.

பட் பகிர்ந்துள்ள இந்தச் செய்தியானது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in