பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலைவிட்டு நிச்சயம் விலகமாட்டேன்!

நாயகி லாவண்யா திட்டவட்டம்
நடிகை லாவண்யா
நடிகை லாவண்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் பிரபலமானவர் லாவண்யா. மாடலிங் துறையில் வலம் வந்தவர் இதற்கு முன்பு ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் நடிகையாக அறிமுகமானார். இந்த நிலையில், தற்போது ‘ரேசர்’ படம் மூலம் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லையாக சீக்கிரம் மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டார்களே?

நடிகை லாவண்யா
நடிகை லாவண்யா

ஆமாம்! அந்த விஷயத்தில் நான் ரொம்பவே லக்கி. சமீபத்தில் வடபழனி கோயிலுக்குச் சென்றிருந்தபோது கூட அங்கு ஒரு அம்மா என்னிடம் வந்து, “உனக்காகவே இந்த சீரியல் இப்போது அதிகம் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனார். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நான் எதிர்பாராதது. இவ்வளவு சீக்கிரமாக என்னை இந்த கதாபாத்திரத்தில் ஏற்றுக்கொண்ட மக்களுக்கு நன்றி. இந்த கதாபாத்திரத்தை எந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முடியுமோ அந்த அளவுக்கு சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

அதேபோல, முல்லை கதாபாத்திரத்தில் முதலில் நடித்த சித்துவுக்கு வாய்ஸ் கொடுத்த காயத்ரிதான் எனக்கும் டப்பிங் செய்கிறார். பள்ளி - கல்லூரி காலங்களிலேயே எனது குரல் ஆண்குரல் போல இருக்கிறது என பலரும் கேலி செய்திருக்கிறார்கள். அதனால், நான் பெரும்பாலும் அமைதியாகவே இருப்பேன். இப்போது, அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன். என் குரல் எனக்கே பிடித்திருக்கிறது. ஒரு நேர்காணலில் என்னுடைய குரலைக் கேட்டுவிட்டு ‘பீஸ்ட்’ படத்தில் பூஜாஹெக்டேவுக்கு டப்பிங் கொடுக்கச் சொல்லி டெஸ்ட் எடுத்தார்கள். அதில் நான் பேசி இருக்கிறேனா இல்லையா என்பது அடுத்து, ஆனால், இப்படி என் குரலுக்கு அங்கீகாரமும் வந்திருக்கிறது.

மீடியாவுக்குள் நுழைய உங்கள் வீட்டில் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று கேள்விப்பட்டோமே..?

நடிகை லாவண்யா
நடிகை லாவண்யா

எல்லா வீடுகளையும் போலத்தான் எங்கள் வீட்டிலும் முதலில் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆனால், அதை எல்லாம் தாண்டி என் விருப்பம் காரணமாக முதலில் ஷார்ட் ஃபிலிம்ஸ், ஆல்பம் சாங்க்ஸ் என ஆரம்பித்தேன். முதலில் என்னுடைய அம்மா, பாட்டி என யாரிடமும் எனக்கு ஆதரவு இல்லை. உறவினர்கள் வட்டத்திலேயே ’நான் மீடியாவுக்குள் வந்ததும் மாறி விட்டேன்’ என்ற பேச்சு வந்தது.

பிறகு, நான் காட்டிய ஆர்வத்தை பார்த்து என் வீட்டில் மெல்ல மெல்லப் புரிந்துகொண்டார்கள். ஒருமுறை அம்மா ‘சூப்பர் குயின்’ நிகழ்ச்சியில் என்னுடன் வந்து ஷூட்டில் கலந்து கொண்டார்கள். அப்போதுதான் ஷூட்டிங்கில் பங்கெடுப்பது எவ்வளவு கடினம் எனவும் எப்படி அதற்காக நாங்கள் வேலை செய்கிறோம் எனவும் புரிந்துகொண்டார்கள்.

சினிமாவைப் போலவே சீரியல்களிலும் சமீப காலங்களில் அதிகமான Intimacy காட்சிகள் வருவது பேசுபொருளாகி இருக்கிறதே?

நடிகை லாவண்யா
நடிகை லாவண்யா

சீரியல், சினிமா அதன் கதைப்போக்கு என்பது முன்புபோல கிடையாது. இப்போதிருக்கும் பார்வையாளர்களும் புதுவிதமான கதைப்போக்கையும் எதிர்பார்க்கிறார்கள். மேலும், டி.ஆர்.பி. என்ற விஷயமும் பெரும் அழுத்தமாக தற்போது மாறி இருக்கிறது. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றில்லை. தரப்பட்ட எல்லைக்குள் சுவாரஸ்யமாக கொண்டு சென்றால் நல்லதுதான்.

’சிப்பிக்குள் முத்து’ சீரியலில் நான் நடிக்கும்போது கூட, அதில் ஒரு முத்தக்காட்சி இருந்தது. “இதுபோன்ற ரொமான்ஸ் காட்சிகளில் எப்படி நடிக்கிறாய்?” என்றெல்லாம் ரசிகர்கள் கேட்கிறார்கள். அதுவும் எங்களது வேலையின் ஒரு பகுதிதானே தவிர, இதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள எதுவும் இல்லை.

சீரியல் டிஆர்பி-க்காக கதையில் மாற்றம் செய்வது இயல்பு எனும்போது, அதைக் காரணம் காட்டி சாய்காயத்ரி விலகியது சரியா?

டிஆர்பி-க்காக கதையில் மாற்றம் செய்வது என்பது சரிதான். ஆனால், அதை ஏற்றுக்கொண்டு நடிப்பதும் மறுப்பதும் நடிகர்களின் விருப்பம். இது சரியான முடிவு, தவறான முடிவு என நான் உட்பட யாரும் கருத்துச் சொல்வதற்கில்லை.

சாய்காயத்ரியின் சூழ்நிலையில், நான் இருந்து பார்த்தால்தான் நான் எப்படி ரியாக்ட் செய்கிறேன் எனத் தெரியும். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஷ்வர்யா கதாபாத்திரம் கொஞ்சம் நெகட்டிவாகத்தான் பார்வையாளர்களுத் தெரியும். அதனால், இது சாய்காயத்ரியின் தனிப்பட்ட முடிவு. தீபிகாவும் இந்த கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்துக் கொண்டிருக்கிறார்.

மாடலிங், சீரியல் இப்போது சினிமாவிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறீர்கள்?

சரியான வாய்ப்புகள் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்வேன். அதற்காக இப்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு விலகிவிடுவேனா என்றால் நிச்சயம் இல்லை. முன்பே சொன்னதுபோல, நல்ல வாய்ப்புகள் என்றால் எல்லா பக்கமும் என்னைப் பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in