'என் தோழி நட்சத்திராவின் வாழ்க்கை விஜே சித்ரா வாழ்க்கை மாதிரி ஆகிவிடக்கூடாது!'- கலங்கும் நடிகை ஸ்ரீநிதி

'என் தோழி நட்சத்திராவின் வாழ்க்கை விஜே சித்ரா வாழ்க்கை மாதிரி ஆகிவிடக்கூடாது!'- கலங்கும் நடிகை ஸ்ரீநிதி

சின்னதிரை நடிகை ஸ்ரீநிதி தனது தோழியும் நடிகையுமான நட்சத்திரா பற்றியும் அவரது குடும்ப வாழ்வு பற்றியும் தனது சமூக வலைதள பக்கத்தில் மனம் திறந்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீநிதியும், நட்சத்திராவும். இருவரும் நெருங்கிய தோழிகள். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ்-வில் வந்த நடிகை ஸ்ரீநிதி தனது தோழியான நட்சத்திரா குறித்து, அவரது வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார். நட்சத்திரா தற்போது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'வள்ளி திருமணம்' என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீநிதி அவரைப் பற்றி லைவ்-வில் பேசி இருப்பதாவது: ``நட்சத்திரா என்னுடைய நெருங்கிய தோழி. நானும் அவளும் ஒரே வீட்டில்தான் வசித்துக் கொண்டிருந்தோம். அவ நிறைய தப்பு பண்ணி இருக்கா. அதுக்காக தப்பான பொண்ணு கிடையாது. அவளுக்குப் பெரிய நடிகை ஆக எல்லாம் ஆசை கிடையாது. எல்லா பொண்ணுங்க போலவும் கல்யாணம் ஆகி குடும்பம், குழந்தை என்று செட்டில் ஆக ஆசைப்பட்டா. அப்படி இருக்கும் போதுதான் ஒருத்தரை சந்திச்சா. ரொம்ப நல்லவரா இருக்காரு அப்படின்னு சொல்லி நான்தான் அவளுக்கு அறிமுகம் கொடுத்தேன். ஒரே மாசத்துல அவங்க பேசி கல்யாணம் வரைக்கும் வந்துட்டாங்க. திடீர்னு கடந்த நவம்பர் மாதம் அவளுக்கு நிச்சயதார்த்தம் வச்சுட்டாங்க. அவளுடைய தங்கச்சியை கூட கூப்பிடல. இதைப்பத்தி மாப்பிள்ளை வீட்டில் விசாரித்தபோது மாப்பிள்ளை அம்மா என்னை அடிக்க வந்துட்டாங்க. அன்னைக்கு தான் என் வாழ்க்கையிலேயே ரொம்ப அழுத நாள்.

ஆனால் நான் நட்சத்திரா மேல ரொம்ப பொறாமையா இருக்கிறதாகவும், அவளுக்கு நிறையக் கெட்ட விஷயங்கள் பண்றதாகவும் தப்பு தப்பா அந்த மாப்பிள்ளை வீடு என்ன பத்தி பேசினாங்க. எனக்கு ரொம்ப மனசு காயப்பட்டு இருந்தது. நட்சத்திரா யார் மேலயும் அதிகம் கோபப்படமாட்டா. அவ பசி வந்தா கூட யார் கிட்டயும் சீக்கிரம் வாய் திறந்து கேட்க மாட்டா. அந்த மாதிரி கேரக்டர் இருக்கக்கூடிய பொண்ணை அந்த பையனோட ஃபேமிலி பயங்கரமாக இப்போ லாக் பண்ணிட்டாங்க. 'சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க. நீ கல்யாணத்துக்கு வருவியா?' என கேட்டாள். சீரியல் நடிகையான அவளுக்கு இப்போ 2 லட்சம் சம்பளம் வந்துட்டு இருக்கு. ஆனா அக்கவுன்ட்ல இப்ப பத்தாயிரம் கூட இல்லாத நிலைமைல தான் இந்த பையனோட ஃபேமிலி அவளை வச்சிருக்கு. நட்சத்திரா பத்தி அவ அம்மாகிட்டயே தப்பா பேசி இருக்காங்க. இப்படியே போனால் நிலைமை என்ன ஆகும் தெரியல.

என்னோட மொபைல் நம்பரையும் லாக் பண்ணிட்டாங்க. நான் உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல இருந்தபோது கூட அவ என்னை பார்க்கவில்லை. நிலைமை இப்படியே போச்சுனா எங்க போய் முடியும்ன்னு தெரியல. இது எங்க கூட இருக்குற எல்லாருக்குமே தெரியும். நட்சத்திரா அம்மாவும் அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்னு நம்பி பொறுமையா போயிட்டு இருக்காங்க. இந்த விஷயங்கள் எல்லாம் இப்ப நான் ஏன் சொல்லிட்டு இருக்கேன்னா, விஜே சித்ராவுக்கு இப்படி தான் சரியான வாழ்க்கை அமையாமல் அவளுடைய வாழ்க்கையே முடிஞ்சு போச்சு. சித்ரா ஹஸ்பண்ட் பற்றி அவங்க நண்பர்கள் பலருக்கும் முன்னாடியே தெரிஞ்சிருந்தும் அவங்க ஸ்ட்ராங்கா எடுத்து செல்லாததால் தான் அந்த மாதிரி ஆச்சு. அந்த மாதிரி என்னுடைய தோழிக்கும் நடக்கணும்னு நான் விரும்பல. அதனாலதான், இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன். சீக்கிரமா, நட்சத்திராவை விடல அப்படினா நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்பேன்' என அந்த லைவ்-வில் ஸ்ரீநிதி பேசியிருப்பது சின்னதிரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரைவில் நட்சத்திரா பதிலளிப்பார் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in