சினிமாவில் நுழைந்த சின்னத்திரை நடிகைகளின் அப்டேட்!

சினிமாவில் நுழைந்த சின்னத்திரை நடிகைகளின் அப்டேட்!

மேடை நாடக நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள், சினிமா கலைஞர்கள் என நடிகர்களை பிரித்துப் பார்த்து வந்த காலம் எல்லாம் முற்றிலும் மாறிவிட்டது. மேடைக் கலைஞர், யூடியூப் முகம், சமூகவலைதள பிரபலம், சின்னத்திரை, சினிமா என எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் நடிகர்கள் என்ற ஒற்றை வட்டத்திற்குள் அனைவரும் வந்து விட்ட காலம் இது. மேடை நாடகக் கலைஞராக இருந்து சினிமாவுக்குள் நுழைந்து கோலோச்சிய சிவாஜியில் இருந்து சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்த சிவகார்த்திகேயன் வரை இதற்கு பல உதாரணங்கள் உண்டு.

குறிப்பாக, சமீப காலங்களில் வாணி போஜன், ப்ரியா பவானி ஷங்கர் என பல சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைந்து வெற்றிகரமாக வலம் வருகின்றனர். அதுபோல சின்னத்திரையில் பிரபல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகைகள் சினிமாவுக்குள் நுழைந்திருக்கின்றனர். அவர்களின் பட அப்டேட் என்னென்ன என்பது குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்’ காவ்யா:

மாடலிங் மூலம் மீடியாவுக்குள் நுழைந்தவர் காவ்யா. விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடிப்புத் துறைக்குள் அறிமுகமானவருக்கு மேலும் பிரபல்யத்தைக் கொடுத்தது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை கதாபாத்திரம். முல்லையாக சின்னத்திரை சித்ராவை பார்த்த ரசிகர்களுக்கு காவ்யா பழக சிறிது காலம் எடுத்தது. போகப் போக இந்த முல்லையையும் ஏற்றுக் கொண்டனர் ரசிகர்கள். பின்பு திடீரென “சினிமாவுக்காக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு விலகப் போகிறேன்” என அறிவித்தார் காவ்யா. ’மிரள்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிய அவரிடம் பேசினோம்.

“சீரியல் டூ சினிமா என்ற வாய்ப்பு கடந்த வருடம் எனக்கு அமைந்தது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் சிறுவயது கனவு. மாடலிங், சீரியல் என எல்லாம் அதை நோக்கியே நகர்ந்தது. ’மிரள்’ படம் மூலம் அது சாத்தியமானதில் மகிழ்ச்சி. தற்போது ஓடிடி, இரண்டு படங்களில் கதாநாயகி என அடுத்தடுத்து நான் போய்க் கொண்டிருக்கிறேன். அது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு விலகியது கடினமான ஒன்றுதான். ரசிகர்கள் பலரும் இப்போதும் மீண்டும் அந்த சீரியலுக்குள் வருவீர்களா எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த செட்டை நானும் மிஸ் செய்கிறேன். ஆனால், விரைவில் படங்கள் மூலம் ரசிகர்களைச் சந்திப்பேன். இந்த வருடம் பர்சனல் வாழ்க்கையிலும் லைஃப் பார்ட்னர் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றார் சிரித்துக் கொண்டே.

ராஜா ராணி2’ விஜே அர்ச்சனா:

விஜேவாக மீடியாவுக்குள் வந்த அர்ச்சனாவுக்கு ‘ராஜா ராணி 2’ சீரியலில் கிடைத்த கதாபாத்திரம் பலரையும் இவரை கவனிக்க வைத்தது. காமெடி-வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பில் மிளிர்ந்த இவர் திடீரென சீரியலில் இருந்து விலகினார். சினிமாவை காரணம் காட்டியே இவரும் சீரியலில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. ” ’ராஜா ராணி 2’ சீரியல் நடிகையாக எனக்கு ஒரு நல்ல அடையாளம் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால், இப்போது அந்த சீரியலை விட்டு நான் விலகியது சினிமாவில் நடிக்கத்தான்.

அந்த வகையில், தற்போது ‘டிமாண்டி காலனி 2’ படத்தில் ஹீரோ அருள்நிதியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். என்னுடைய கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. ஒரு நல்ல அணியின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறேன் என்பது மகிழ்ச்சி. இதற்காக, நான் ‘ராஜா ராணி 2’ சீரியலை விட்டு விலகியது பலருக்கும் வருத்தம்தான். ஆனால், சினிமாவில் இன்னும் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்கிறார் மகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார் அர்ச்சனா.

பாரதி கண்ணம்மா’ ரோஷினி ஹரிப்பிரியன்:

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் நடிப்புத் துறையில் அறிமுகமானவர் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன். கண்ணம்மா கதாபாத்திரத்திரம் மூலம் பிரபலமானார். சினிமாவுக்கான வாய்ப்புகள் தேடிக் கொண்டிருந்த சமயத்தில்தான் இவருடைய கதாபாத்திரம் சீரியலில் எட்டு வயது குழந்தைகள் இருவருக்கு அம்மா என்று கதை மாறியது. அது, வரும்காலத்தில் சினிமாவுக்கான வாய்ப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்று நினைத்து சீரியல் டிஆர்பி-யில் முன்னணியில் இருந்த போதே விலகினார்.

பிறகு ‘குக் வித் கோமாளி’ மூன்றாவது சீசனில் போட்டியாளராக வந்தார். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு தற்போது ரோஷினி தன் முழு கவனத்தையும் சினிமா பக்கம் திருப்பி இருக்கிறார். ஓடிடி சீரிஸ், படங்கள் என வாய்ப்புகள் வந்திருப்பதாகவும் விரைவில் அது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறுகிறார் ரோஷினி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in