அய்யோ நான் வடசென்னை பொண்ணு...

- ‘வைதேகி காத்திருந்தாள்’ சரண்யா தூராடி
சரண்யா தூராடி
சரண்யா தூராடி

விஜய் டிவியின் ஆஸ்தான சீரியல் முகங்களின் பட்டியலில் ஒருவர் சரண்யா தூராடி. ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் வழியே இப்போது அசத்திக் கொண்டிருக்கிறார். பயணம், இலக்கியம், சமூகப் பணிகள், நடிப்பு என தன்னை எப்போதும் பிசியாக வைத்திருக்கும் சரண்யா தூராடி ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் சின்னத்திரை ரசிகர்களுக்கு நெருக்கமாகி இருக்கிறார். காமதேனு ம் மின்னிதழுக்காக அவருடன் பேசியதிலிருந்து…

‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் சரண்யாவை வடசென்னை பின்னணிக்கு அழைத்து சென்றிருக்கிறதே..?

“தூராடின்னு உங்க பேருல வருதே... நீங்க வட இந்திய பெண்ணா?”ன்னு என்கிட்டே நிறையப் பேர் கேட்டிருக்காங்க. நான் சுத்தமான தமிழ்ப் பெண். அதிலும் வட சென்னையின் பிரதான ஸ்தலமான ராயபுரத்தில்தான் நான் பிறந்தேன். அதன்பிறகு கொஞ்ச நாள்ல மயிலாப்பூர் பக்கம் குடியேறினோம். அப்படிப்பட்ட பின்னணி கொண்ட ஒரு பெண்ணுக்கு, வட சென்னை பின்னணியில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் சும்மா விட முடியுமா?

இதுவும், சினிமாவில் காட்டப்படும் வட சென்னை மாதிரியான களம்தானா?

வட சென்னை கதைக்களம் என்றதும் ஒரு பெரிய டான் அல்லது கேங்க் லீடரோட பொண்ணுன்னு நீங்க கற்பனை பண்ணினா அதுதான் இல்லை. அதேபோல கழுத்துல டாலர் போட்டுக்கிட்டு, டார்க் பெர்சனா ரவுடித்தனம் செய்ற பேர்வழியும் இல்லை. ஒரு பாட்டிக்கும், பேத்திக்கும் இடையேயான அன்பை வெளிப்படுத்தும் வித்தியாசமான கதை. இதுக்கு முன் நான் விஜய் டிவிக்காக நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடர் மாதிரியே இதுவும் வேறொரு கோணத்துல ரொம்பவே கலகலப்பாக நகரும் சீரியல். இந்தத் தொடர்ல ப்ரஜன், நான், லதா அம்மா, பவித்ரா இருக்காங்க. இவங்க இல்லாம இன்னும் பல நட்சத்திரங்களும் இருக்காங்க. நல்ல குடும்பப் பொழுதுபோக்கு சீரியலா இது இருக்கும்.

சின்ன வயதிலேயே வட சென்னையைவிட்டு ஷிஃப்ட் ஆகிட்டதால, இப்ப அந்த பாஷை பேசி நடிப்பது சிரமமா இருக்குமே?

அதுதான் இல்லை. என்னோட தமிழ் பேச்சு எப்படி அழுத்தமா, தெளிவா இருக்கோ அந்தமாதிரிதான் வட சென்னை பாஷையும் தெளிவா இருக்கும். நானும் அவ்வளவு சரளமாப் பேசுவேன். இந்த தொடருக்காக நான் என்னோட சொந்தக் குரலில் டப்பிங் பேசலன்னாலும், நிறைய வட சென்னையில் பயன்பாட்டுல உள்ள வார்த்தைகளை குட்டி குட்டியா அங்கங்கே காட்சிகளுக்கு நடுவுல பேசிச் சேர்ப்பேன். அதெல்லாம் டப்பிங் கலைஞர், அப்படியே டப்பிங் ஸ்டுடியோவில் சேர்க்கும்போது இன்னும் காட்சி உயிரோட்டமாயிடுது.

இடையே ஓராண்டு காலம் நடிப்புக்கு இடைவெளி ஏன்?

கரோனா ஒரு முக்கிய காரணம். வீட்ல அம்மா இருக்காங்க; அவங்க பெரியவங்க. எனக்காகவே இயங்கும் அவங்களால அங்கும் இங்கும் ஓடியாடி வரமுடியாது. அவங்க எனக்கு ரொம்பவும் முக்கியம். அதனால வீட்ல எல்லோரும் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்தான், படப்பிடிப்பு மாதிரியான பொதுவெளிக்கு வரவே ஆரம்பித்தேன். பிரேக் காலமும் எனக்கு நிறைய நல்ல விஷயங்கள் செய்ய பயனுள்ளதா இருந்தது.

சமீப காலமா சில சீரியல்களில் நடிக்கத் தொடர்ந்து அழைப்புகள் வந்தன. நான்தான் நல்ல கதைக்களம், கதாபாத்திரத்துக்காக காத்திருந்தேன். விஜய் டிவின்னா எனக்கு எப்பவுமே ஸ்பெஷல்தான். இங்கே இது என்னோட மூணாவது சீரியல். என்னோட ஒரிஜினல் சுபாவம் எப்படியோ, அந்த மாதிரி அமைந்ததுதான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடர். பெரிய சக்சஸும்கூட.

அதேபோல, ’ஆயுத எழுத்து’ தொடரில் கலெக்டரா நடித்தேன். அது கொஞ்சம் சீரியஸான பாத்திரம். இதெல்லாம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன. அதே அளவுக்கு நல்ல பேர் சம்பாதிச்சுக் குடுக்கிற கேரக்டர் அமையணும்னு கொஞ்சம் வெயிட் பண்ணேன். அதே மாதிரி ஏற்கெனவே நடிச்ச ரெண்டு கதைகள்ல இருந்தும் வித்தியாசம் இருக்கணும்னு நினைச்சேன். அப்படி அமைஞ்சதுதான் ‘வைதேகி காத்திருந்தாள்’ தொடர். பிடிச்சது அமைஞ்சதால, இப்போ பழையபடி பரபரப்பா ஓடத் தொடங்கியாச்சு.

இந்தி, பெங்காலி என நிறைய டப்பிங் சீரியல்கள் தென்னிந்திய மொழிகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தொடர் எப்படி?

இது ஒரிஜினல் கதை. தமிழுக்காக எழுதப்பட்ட நேரடித் தொடர். ரைட்டர் பத்மாவதிதான் எழுதுறாங்க. இதுக்கு முன் என்னோட ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடர்லயும் அவங்களோட பங்களிப்பு இருந்தது. பெண்கள் அதிகமா ஃபாலோயர்ஸ் உள்ள ப்ளாட்பார்ம் சீரியல் தளம். இதில் கிரியேடிவ் பக்கம் இருப்பவர்களும் பெண்களாக இருந்தால், இன்னும் சிறப்பா இருக்கும் என்பது என் கருத்து. அந்த அடிப்படையில் இந்தக் கதையும் பெண் பங்களிப்பாளர்களோடு நகர்கிறது. எனக்கு இது காஃபியை டபுள் ஸ்ட்ராங்காக குடிப்பது போல, இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. கதையில் நான் ‘வைதேகி’. எனக்காக காத்திருப்பவர் லதா அம்மா. சீரியலில் எனக்கு அவர் பாட்டி. எங்கள் இருவரைச் சுற்றி நடக்கும் சுவாரஸ்மான சம்பவங்கள்தான் கதை.

புத்தகம் வாசிப்பது, வாசித்த புத்தகங்களை யூடியூப் தளத்தில் விமர்சிப்பது என இலக்கியத்திலும் கலந்து கட்டி அடிக்கிறீங்களே?

மண் எப்படி பதப்படுகிறதோ அந்தமாதிரிதான் நமக்கு படிப்பும். நல்ல அறிவார்ந்து யோசிக்க வாசிப்பு முக்கியம்னு நினைக்கிறேன். என் அருகே நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும் பார்க்கும்போது, அதுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என யோசிக்காமல் என்னால் இருக்க முடியாது. அதுக்கு வாசிப்பு பெரும் பயனாக இருக்கிறது.

திரும்பவும் கரோனா பரவல் வீரியம் எடுக்கிறதே?

கடந்த காலத்தில் கரோனா பாதிப்பின்போது பல குடும்பங்கள் உணவுக்காக கஷ்டப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். என்னால் முடிந்த அளவுக்கு உதவிகளையும் செய்தேன். கரோனா தொற்று பாதிப்பைவிடவும், அதன் தொடர் விளைவாக பல குடும்பங்கள் பொருளாதாரச் சூழல் பாதிக்கப்பட்டு நலிந்ததே அதிகம். சிலரை தற்கொலை வரைக்கும்கூட தள்ளியது கரோனா. அப்படியான சாமானியர்கள் எல்லோரும் திரும்பவும் பாதிக்கப்படுவார்களோ என வலி படர்கிறது. திரும்பவும் அப்படி ஆகிடக்கூடாதுன்னு ஆத்மார்த்தமா வேண்டிக்கிறேன். இந்த மாதிரியான சூழலில் நாம் செய்யும் சின்னச் சின்ன உதவிகள்கூட, ஒரு குடும்பத்தையேகூட காப்பாற்றும் என்பதால், அனைவரும் நம்மால் ஆன உதவிகளை இயலாதவர்களுக்காகச் செய்து கரோனா பேரிடரிலிருந்து சீக்கிரமே மீண்டு வருவோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in