திரைக்குப் பின்னால் நானும் குஷ்புவும் நல்ல நண்பர்கள்!

’மீரா’ பூஜாவுடன் ஓர் நேர்காணல்
திரைக்குப் பின்னால் நானும் குஷ்புவும் நல்ல நண்பர்கள்!
பூஜா

“ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். பெங்களூருவில் செட்டில் ஆகி விட்டேன். மீண்டும் ‘மீரா’ மூலமாக திரைக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி” உற்சாகமாக ஆரம்பிக்கிறார் பூஜா.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழில் ப்ரைம் டைமில் இருந்த பல ஹிட் சீரியல்களில் வில்லியாக நடித்து அசத்தியவர் பூஜா. இப்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் ‘மீரா’ மூலமாக கம்பேக் கொடுத்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.

உங்களை மீண்டும் திரையில் பார்ப்பவர்களுக்கு இருக்கும் ஒரே கேள்வி, “இவ்வளவு நாள் எங்கம்மா போன?” என்பதாகத்தான் இருக்கும். ஆமாம், என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

கண்டிப்பாக! என்னுடைய சகோதரர் கனடாவில் ஒரு தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அதில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன். அங்கு பல பிரபலங்களுக்கு ஸ்டைலிஷ்ட்டாக இருக்கிறேன். ஸ்டைலிஷ்ட்டாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பப் பட்டியலில் இருக்கும் ஒன்று. சென்னையில் நடித்துக்கொண்டிருக்கும் போதே நண்பர்கள், மற்ற மீடியா பிரபலங்களுக்கு ஸ்டைல் செய்து கொண்டிருந்தேன்.

கனடாவில் சேனல் ஒன்றில் நிகழ்ச்சிகளுக்கு முழு நேரமாக ஸ்டைலிஷ்ட்டாக இருந்தேன். நாங்களும் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்தோம். இப்படி பிஸியாக போய் கொண்டிருக்கிறது. குஷ்பு எனக்கு நெருங்கிய நண்பர். இதற்கு முன்பே அவர் ஒரு புராஜெக்ட்டில் வேலை செய்யக்கூப்பிட்டார். நடிப்பு எனக்கு பிடிக்கும் என்றாலும், அப்போது அதற்கான நேரம் ஒதுக்கமுடியவில்லை. ஆனால், இந்த முறை கூப்பிட்டபோது வாய்ப்பை தவற விட விரும்பவில்லை. நானும் குஷ்புவும் திரையில் தான் எலியும் பூனையுமாக இருப்போம். திரைக்குப் பின்னால் நாங்கள் நல்ல நண்பர்கள்.

நடிப்பு உங்களுக்கு மிக விருப்பமான ஒன்று என்கிறீர்கள். அப்படி இருக்கும்போது இத்தனை வருடங்கள் எவ்வளவு மிஸ் செய்தீர்கள்?

நிறையவே மிஸ் செய்தேன். நிகழ்ச்சிகளுக்கு ஸ்டைலிஷ்ட்டாக இருந்தபோது அங்கு நடனம், காமெடி, இன்டர்வியூ என கலகலப்பாக இருக்கும். அதை எல்லாம் பார்த்துவிட்டு, “இப்படிச் செய்யலாமே, அப்படிச் செய்யலாமே” என எனக்குள் இருக்கும் நடிகை வெளியே வந்து எட்டிப் பார்ப்பாள். சில பேர், நடனம் ஆட மாட்டேன் என்று சொல்லும்போது, “என்ன எப்படி இப்படிச் சொல்கிறார்கள்... நானாக இருந்தால் இந்நேரம் அதகளம் செய்திருப்பேன்” என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பேன். எதாவது ஒரு பாட்டு போட்டால் என்னுடைய டீம் மொத்தமும் என்னைத் திரும்பிப் பார்ப்பார்கள்.

ஒரே துறையில் இருந்தாலும் திரைக்கு முன்னால் இருப்பதும், திரைக்குப் பின்னால் இருந்து வேலை செய்வதும் வெவ்வேறு விதமான ஒன்று. அந்த விதத்தில், திரைக்கு முன்னால் தோன்றுவதை நிறைய மிஸ் செய்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.

குஷ்புவுடன் மீண்டும் இணைந்திருக்கும் நீங்கள், ‘மீரா’ பற்றியும் இதில் உங்கள் கதாப்பாத்திரம் குறித்தும் சொல்லுங்கள்?

குஷ்பு பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவர் மிகவும் அர்ப்பணிப்புடன் கூடிய ஒருவர். நாம் தான் சீனியர் ஆயிற்றே, எதாவது செய்துவிடுவோம் என்றெல்லாம் அலட்சியமாக நினைக்க மாட்டார். அவர் சீரியலில் அனைவரது கதாபாத்திரமும் சரிசமமான முக்கியத்துவம் இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்வார். அப்படித்தான் என்னுடைய அஞ்சலி கதாபாத்திரமும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வந்திருக்கும்போது மீண்டும் வில்லி கதாபாத்திரம்தானா என அலுப்பு ஏற்பட்டதா அல்லது மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டீர்களா?

அப்படி இல்லை. வில்லியாக எல்லோராலும் நடிக்க முடியாது. அது மிக சவாலான ஒரு விஷயம். நீங்கள் நேர்மறையான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு அந்த கதாபாத்திரத்திற்கு என்று குறிப்பிட்ட எல்லை இருக்கும். அதற்குள் தான் நீங்கள் நடித்தாக வேண்டும். இப்படித்தான் இதற்குள் தான் இருக்க வேண்டும் என்ற அந்த எல்லையை நேர்மறை கதாபாத்திரம் கடக்க முடியாது. ஆனால், வில்லி கதாபாத்திரம் அப்படிக் கிடையாது. உங்களுக்கு என்ன கொடுத்தாலும் அதை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லக்கூடிய சுதந்திரம் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதால் கிடைக்கும்.

உங்கள் நடிப்பை நீங்கள் விரும்பினால் நிச்சயம் பார்வையாளர்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள். இந்த விஷயத்தில் எனது ரசிகர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏழு வருடங்களுக்கு முன்பும் சரி, இப்போதும் சரி எனக்கு ஒரே மாதிரியான அன்பைக்கொடுத்து வருகிறார்கள். அதற்கேற்ப உழைப்பை இன்னும் கொடுக்க வேண்டும்.

முன்பு நீங்கள் தொடர்ச்சியாக வில்லியாக நடித்தபோது ரசிகர்களிடம் திட்டெல்லாம் வாங்கிய அனுபவம் உண்டா?

அதெல்லாம் நிறைய வாங்கி இருக்கிறேன். ’குங்குமம்’ சீரியல் குஷ்புவுடன் நடித்து கொண்டிருந்த சமயம் அது. அப்போது தி.நகரில் இருந்த பெருமாள் கோயிக்குச் சென்றிருந்தேன். கண்ணை மூடி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென்று பின்னாலிருந்து யாரோ ஒருவர் என் முதுகில் அடித்துவிட்டார்.

திடுக்கிட்டுப் பயந்து போய் திரும்பி பார்த்தேன். எனக்குப் பின்னால் சுமார் எழுபது வயதுடைய பாட்டி நின்று கொண்டிருந்தார். “நல்லாருப்பியா நீ... ஏன் இப்படி அந்த பொண்ணைப் பண்ணற?” என கேட்டார். அவர் 'குங்குமம்' சீரியலைப் பார்த்துவிட்டு என்னைத் தினமும் திட்டி கொண்டிருந்திருக்கிறார். நான் சீரியலில் ஒருநாள் வரவில்லை என்றாலும், ஏன் வரவில்லை என விசாரிப்பாராம். வந்தாலும் திட்டிக்கொண்டிருப்பாராம். இதை பாட்டியுடன் வந்த குடும்பம் சொன்னது. பின்னர் அந்தப் பாட்டியே சமாதானமாகி, திருஷ்டி கழித்து என்னை வாழ்த்தி விட்டுச் சென்றார். இது மறக்க முடியாத சம்பவம்.

’மீரா’வுக்குப் பிறகு தொடர்ந்தும் நடிப்பீர்களா?

எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் நடிக்க வேண்டும் என்ற ஆசை எப்போதுமே உண்டு. சீரியல்களை விட ஓடிடி உலகத்துக்குள் நுழைய வேண்டும் என்ற ஆசை இப்போது அதிகம் உள்ளது. கதாபாத்திரம் நன்றாக இருந்தால் திரைப்படம், ஓடிடி என எதிலும் நடிக்க எனக்குத் தடையில்லை.

குடும்பம் பற்றி சொல்லுங்கள்?

”பெங்களூருவில் அம்மா, அண்ணன், அண்ணி, அவரது குழந்தைகள் என அவர்களுடன் வசித்து வருகிறேன். ‘மீரா’வுக்காக இப்போது சென்னையில் 15 நாளும், பெங்களூருவில் 15 நாளுமாய் மாறி மாறி பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

Related Stories

No stories found.