இப்படி முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை!

‘வேலைக்காரன்’ கோமதிப்பிரியா ஆதங்கம்
கோமதிப்பிரியா
கோமதிப்பிரியா

விஜய் டிவியில் மதியம் ஒளிபரப்பான சீரியல் 'வேலைக்காரன்'. இதில் கதாநாயகி வள்ளியாக நடித்திருந்தார் கோமதிப்பிரியா ரஜினியின் நடிப்பில் உருவான 'முத்து' படத்தின் ஒருவரி தான் இந்த சீரியலின் மையக்கரு.

கடந்த 2020-ல் ஆரம்பித்த இந்த சீரியல் கடந்த இரண்டு வருடங்களாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று தற்போது நிறைவுக்கு வந்திருக்கிறது இந்த மே மாதத்துடன் ‘வேலைக்காரன்’ சீரியல் முடிவுக்கு வந்திருக்கிறது. இதில் நடித்த அனுபவம், எதிர்கால திட்டம் என்பதெல்லாம் குறித்து அறியும் ஆவலுடன், ஜிம்மில் பரபரப்பாக வொர்க்கவுட்டில் இருந்த கோமதிப்பிரியாவிடம் பேசினோம்.

'வேலைக்காரன்' சீரியல் அனுபவம் எப்படி இருந்தது?

டெக்னிக்கலாக பேச வேண்டும் என்றால் சீரியல் எப்போதோ முடிந்திருக்க வேண்டியது. ஆனால், அந்தக் கதையை அடுத்தடுத்து நகர்த்தி இவ்வளவு நாட்கள் எடுத்து வந்தோம். எங்களுடைய கல்யாண கதைக்குப் பிறகு காமெடி, ரொமான்ஸ் என சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அந்த மாதிரியான ஒரு நேரத்தில் தான் முடித்துவிட்டார்கள். இதை நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், இது தயாரிப்பு தரப்பு முடிவு எனும்போது நாம் எதுவும் தலையிட முடியாது இல்லையா?

திடீரென சீரியல் முடிந்து விட்டதே என ரசிகர்கள் உங்களிடம் சமூக வலைதளத்திலோ அல்லது நேரிலோ ஆதங்கப்பட்டார்களா?

ஆமாம்! அதெல்லாம் நிறைய பேர் எனக்கு மெசேஜ் செய்திருந்தார்கள். ஏனெனில், முன்பே சொன்னது மாதிரி கல்யாண சீக்குவன்ஸ்க்கு பிறகு காமெடி, கலகலப்பு என சீரியல் நன்றாகவே போய் கொண்டிருந்தது. “அப்படி இருக்கும்போது ஏன் இவ்வளவு சீக்கிரம் முடித்துவிட்டீர்கள்?” என நிறையப் பேர் கேட்டார்கள். சீரியலை மிஸ் செய்வதாகச் சொன்னார்கள். இன்ஸ்டாவில் இதுபோன்ற நிறைய மெசேஜ்கள் வந்து கொண்டே இருக்கிறது.

தெலுங்கிலும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தீர்கள். இப்போது தமிழ் சீரியல் முடிந்து விட்டது. அடுத்த புராஜெக்ட் எதுவும் பேச்சு வார்த்தையில் இருக்கிறதா?

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேலாக சீரியலிலேயே முழுதாக இருந்தேன். எனக்கான நேரம் என்பதே குறைவாகத் தான் இருந்தது. இப்போதுதான் எனக்கான அடுத்தகட்ட எதிர்காலம் குறித்து யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

இரண்டு வருடங்கள் எடை கூடி, சாப்பாடு சரியாக இல்லாமல், தண்ணீர் அதிகம் குடிக்காமல் என உடல்ரீதியான இயக்கம் இல்லாமல் இருந்தது. இன்னும் எனக்குச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. அதை எல்லாம் இப்போது சரி செய்து கொண்டிருக் கிறேன். உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க தினமும் ஜிம் போய் உடற்பயிற்சி செய்வது, நானே சமைத்துச் சாப்பிடுவது என கவனம் செலுத்தி வருகிறேன்.

அடுத்த புராஜெக்ட் விஜய் டிவியில் செய்வதற்கு தான் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அவர்கள் இன்னும் ஓரிரு மாதங்கள் என்னைக் காத்திருக்கச் சொல்லி இருக்கிறார்கள். “நம்ம ஊர் பொண்ணு, நல்லா தமிழ் பேச தெரிந்த திறமையான பொண்ணு. அதனால் நிச்சயம் வெளிய விடமாட்டோம்மா. அடுத்த புராஜெக்ட் தருகிறோம்” என நம்பிக்கையாய்ச் சொல்லி இருக்கிறார்கள்.

விஜய் டிவியில் இப்போது புதிதாக வந்திருக்கும் சில சீரியல்களில் நடிக்க என்னிடம் ஏற்கெனவே கேட்டிருந்தார்கள். ஆனால், கால்ஷீட் பிரச்சினையால் அப்போது நடிக்க முடியாமல் போயிற்று. அடுத்து எனக்கான வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.

தெலுங்கிலும் சீரியல்கள் நடித்துக் கொண்டிருந்தீர்கள் இல்லையா?

ஆமாம்! தெலுங்கிலும் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள். தமிழில் வள்ளி, ஓவியா என வேலைக்காரி கதாப்பாத்திரங்கள் தான் எனக்கு இதுவரை அமைந்திருக்கிறது. ஆனால், தெலுங்கில் அப்படி இல்லை. பப்ளியாக, ஜாலியாக இருக்கும்படியான கதாபாத்திரங்கள் அங்கே அமைந்தன.

தமிழிலும் அப்படி ஒரு ஜாலியான துறுதுறு கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும். இல்லை எனில், பாவாடை சட்டை, தாவணி என்றில்லாமல் புடவை, மாடர்ன் டிரஸ்சில் நடிக்க ஆசை இருக்கிறது. எப்படியான கதாபாத்திரம் அமையப் போகிறது எனத் தெரியவில்லை; காத்திருப்போம்.

அப்படியான கதாபாத்திரங்கள் வேண்டும் என்றால் சினிமாவிலும் முயற்சி செய்திருக்கலாமே?

சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? 'அசுரன்' படத்தில் அம்மு அபிராமி நடித்திருந்த கதாபாத்திரம் எனக்கு தான் முதலில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அதுவும் சீரியல் தேதிகள் காரணமாகத் தட்டிப்போய் விட்டது. அதில் எனக்கு மிகப் பெரிய வருத்தம். சினிமாவில் சரியான வாய்ப்புகள் அமைந்தால் பயன்படுத்திக்கொள்ள தயாராகவே இருக்கிறேன்.

ரியாலிட்டி ஷோக்களில் உங்களை அதிகம் பார்க்க முடிவதில்லையே?

இதுவரை தமிழில் அதிகம் பங்கேற்கவில்லை. ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளில் மட்டும் தான் வந்திருக்கிறேன். தெலுங்கில் தான் அதிகம் பங்கேற்று இருக்கிறேன். இங்கு நிகழ்ச்சிக்கான தேதிகள் ஒதுக்க முடியாமல் இருந்ததால், நிகழ்ச்சி தயாரிப்பு தரப்பில் இருந்து ஒரு கட்டத்தில் சலித்துப்போய், என்னைக் கூப்பிடுவதையே விட்டுவிட்டார்கள்.

ஆனால், 'பிக்பாஸ்', 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பேன். 'பிக்பாஸ்' நிகழ்ச்சி நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது பார்த்திருக்கிறேன். விளையாட்டு என்பதையும் தாண்டி அதில் நிறைய அரசியல், சண்டை எல்லாம் சமாளிக்க வேண்டி வரும். அது என்னுடைய கேரக்டருக்கு ஒத்துவராது என்பதால் கூப்பிட்டால் கூட கலந்து கொள்ளமாட்டேன்.

ஆனால், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி ரொம்பப் பிடிக்கும். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் ஜாலியான ஒரு விஷயம். இப்போது தான் சமையல் கற்றுக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் குக்கோ, கோமாளியோ எதுவாகவோ என்னைக் கூப்பிட்டாலும் கலந்துகொள்ள நான் இப்போதே ரெடி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in