கர்ப்பமான பிறகு கண்ணம்மா என்னை திட்டுவதில்லை!

கர்ப்பகால அனுபவம் பகிரும் ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா
கர்ப்பமான பிறகு கண்ணம்மா என்னை திட்டுவதில்லை!
ஃபரினா

தமிழ் சீரியல் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் பாரதி கண்ணம்மா தொடரின் எதிர்நாயகி ஃபரினாவுக்கு, அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. தன் கர்ப்பகால அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டிருந்தது, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதுகுறித்து அவரிடம் தொடர்புகொண்டு பேசினோம்.

கர்ப்பகால அனுபவம், தன்னைப் பற்றி நிலவும் எதிர்மறை கருத்துகள், சக நடிகர்களின் அக்கறை என பல்வேறு விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ஃபரினா.

“என் கர்ப்பகாலம் முழுவதும் ஷூட்டிங், போட்டோ ஷூட், ஜிம் என மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தேன். அதற்குக் காரணம், நான் பின்பற்றும் ஆரோக்கியமான உணவு முறையும் உடற்பயிற்சியும்தான். ‘எப்படி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும் கூட பிரேக் எடுக்காமல் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்துக் கொடுத்தீர்கள்?’ என்று பலர் ஆச்சரியமாகக் கேட்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம், பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குநர் பிரவீன் பெனட். அவர் ரொம்பத் தங்கமானவர்.

முதல் 5 மாதங்கள் சகஜமாக ஷூட்டிங்கிற்குச் சென்றேன், அதன் பிறகு குழந்தை வளர வளர வயிறு தெரியத் தொடங்கியது. ‘சீரியலில் இருந்து விலகிக் கொள்கிறேன், ஆன்ஸ்கிரீனில் நான் கர்ப்பமாக இருப்பது பார்க்க வித்தியாசமாகத் தெரியும்’ என்று பிரவீன் சாரிடம் சொன்னேன். ‘அதனால் என்ன... லாங் ஷாட் வைத்து நான் சமாளித்துக் கொள்கிறேன்; தொடர்ந்து நடிங்க’ என்று அவர் சொன்ன பதில் என்னை வியக்க வைத்தது.

இயக்குநர் மட்டுமின்றி செட்டில் இருந்த அனைவருமே என்னிடம் அக்கறையாக நடந்து கொண்டனர். நாயகியாக நடிக்கும் ரோஷினி ஷூட்டிங்கிற்கு எனக்காகப் பழங்கள் வாங்கி வந்து கொடுப்பார். கர்ப்பகாலத்துக்கே உரிய உடல் சோர்வு ஏற்படும் போதெல்லாம், சற்றும் தயங்காமல், ஸ்வீட்டி (கண்மணி மனோகரன்) என் கை கால்களை அழுத்தி விட்டார். புரொடக்‌ஷன் ஊழியர்களும் தன்மையாக நடந்து கொண்டனர்.

ஒவ்வொரு நாளும், நான் நடிக்க வேண்டிய காட்சிகளை முதலில் ஷூட் செய்துவிடுவார்கள். பாரதி கண்ணம்மா கதைப்படி சீரியலின் நாயகி கண்ணம்மா என்னை அடிக்கும்படி, திட்டும்படியான காட்சிகள் அதிகம் வரும். நான் கர்ப்பமானதிலிருந்து அதுபோன்ற காட்சிகளை இயக்குநர் குறைத்துவிட்டார். நானாக முன்வந்து, நடிக்கிறேன் என்று சொன்னாலும், திட்டு வாங்குவது மாதிரியான காட்சிகளை வைக்கமாட்டார். இவ்வாறு ஒட்டுமொத்த சீரியல் குழுவும் என்னிடம் அன்பாக நடந்து கொண்டனர்.

சீரியல் ஷூட்டிங் நேரம் போக, போட்டோ ஷூட்ஸிலும் கவனம் செலுத்தினேன். எனது கர்ப்பகால ஃபோட்டோ ஷூட்கள் வைரலானதுடன் பல எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது. வயிற்றில் மெகந்தி வரைந்தும், தண்ணீரில் மூழ்கியபடியும் செய்த ஃபோட்டோ ஷுட்களுக்கு நெகடிவ் கமென்ட்டுகள் குவிந்தன.

நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. கர்ப்பம் என்பது நம் வாழ்வின் அங்கம், நோய் கிடையாது. இதுகுறித்து தெளிவு இல்லாதவர்கள், என்னைக் குறித்து தவறான கருத்துகளைப் பரப்புகிறார்கள். என் ஒவ்வொரு இன்ஸ்டா பதிவிலும் என்னை திட்டித் தீர்க்கிறார்கள். அவர்களின் கருத்துகள் என் மனவலிமையை ஒருபோதும் அசைக்காது.

கர்ப்பகாலத்தில் நான் உடற்பயிற்சி செய்த வீடியோக்களில் கூட பலர் நெகடிவ் கமென்ட்டுகள் பதிவிட்டனர். இப்படிக் கடுமையான உடற்பயிற்சி செய்தால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்தனர்.

கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். ஆனால், கர்ப்பமான பிறகு உடற்பயிற்சி செய்யத் தொடங்கக்கூடாது. ஒவ்வொரு பெண்ணும் பூப்படைந்ததிலிருந்தே உடற்பயிற்சி, யோகா போன்ற மனவளக் கலை உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 20 நிமிடமாவது உடற்பயிற்சிக்காக ஒதுக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகள் உட்கொள்ள வேண்டும். இவற்றைப் பின்பற்றினாலே கண்டிப்பாக சுகப்பிரசவம் தான் நடக்கும். போட்டோஷூட் செய்ததற்காகவும், உடற்பயிற்சி வீடியோக்கள் பதிவிட்டதற்கும் என்னை விமர்சித்தவர்கள், சுகப்பிரசவம் ஆனதும் வாழ்த்துக் கூறி மன்னிப்பும் கேட்டார்கள்.

குழந்தை பிறந்து 10 நாட்கள் ஆகிறது. வேலை, ஆரோக்கியம், குழந்தை என அனைத்தையும் பேலன்ஸ் செய்து மனநிறைவுடன் வாழ்வதற்கு என் கணவரின் ஊக்கமும் அன்பும் தான் முக்கிய காரணம். இதே சுறுசுறுப்புடன் சீக்கிரமே பாரதி கண்ணம்மா சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்பேன்... வெண்பாவாக!’’

உற்சாகமாக விடைகொடுத்தார் ஃபரினா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in