சினிமாவைவிட இந்த சீரியல் எனக்கு நல்ல ரீச்!

’பாரதி கண்ணம்மா’ அறந்தாங்கி நிஷா ஆனந்தம்
சினிமாவைவிட இந்த சீரியல் எனக்கு நல்ல ரீச்!
அறந்தாங்கி நிஷா

”உனக்கு ஆஸ்கர் அவார்ட் தான் பாப்பா கொடுக்கணும். இவ்வளவு நாள் உனக்கு பேட்டி தராம லேட் பண்ணதுக்கு ஸாரி பாப்பா. என் வீட்டுக்காரரே என்னை திட்டிட்டார்” என எனர்ஜி குறையாமல் கலகலப்பாக ஆரம்பித்தார் அறந்தாங்கி நிஷா.

சினிமா, சீரியல், சேனல் நிகழ்ச்சிகள் என ஆல் ஏரியாவிலும் பிஸியாக சுழன்று கொண்டிருக்கிறார் நிஷா. அவரிடம் பேசியதிலிருந்து...

‘ஹாஸ்டல்’ படத்திற்குப் பிறகு சினிமாவில் இன்னும் பிஸி என கேள்விப்பட்டோமே..?

அர்ஜூன் தாஸ், துஷாரா ஆகியோரை வைத்து இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ள ‘அநீதி’ படத்தில் சின்னதா ஒரு கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன். மிகவும் கனமான கதை போல. வசந்தபாலனிடம் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டேன். “படம் பார்ப்பவர்கள் இந்தக் கதைக்கு பெரும்பாலும் சிரிக்கமாட்டார்கள். ஆனால், எனக்கு கதையில் ஒரு 20 நிமிடங்களுக்கு மட்டும் சிரிக்க வைக்க வேண்டும்” என்று சொன்னார். அவரது ‘அங்காடித்தெரு’ படம் என் வாழ்வில் மறக்க முடியாதது. அப்படிப்பட்ட இயக்குநர் என்னிடம் இப்படி கேட்டபோது ரொம்ப மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்துச்சு. சிறப்பாவே செய்து கொடுத்திருக்கிறேன்.

’கூர்கா’ பட இயக்குநர் அந்தோணிதாசன் அடுத்து அதர்வாவுடன் இணைந்திருக்கும் ஒரு படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷுடன் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்கள் இப்போதைக்கு கைவசம் இருக்கிறது. திருச்சிற்றம்பலத்தில் தனுஷ் தான் என்னைக் கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தார். எப்பொழுதும் வளர்ந்து வரும் திறமையாளர்களைக் கவனித்து வாய்ப்புப் கொடுப்பதில் அவர் சிறந்தவர். ஒரு சிறிய காட்சியில் தான் வந்து போகிறேன். டப்பிங் பேசும் போதுகூட, “இதை நான் வாட்ஸ் - அப்பிலேயே அனுப்பிவிடவா” என்று நான் கேட்டதும் அனைவரும் சிரித்துவிட்டார்கள்.

‘மாரி’ பட சமயத்தில் தான் தனுஷ் எனக்கு அறிமுகம். அவர் டிவி பார்க்கமாட்டார் என நினைத்திருந்தேன். ஆனால், அவர் தொலைக்காட்சியில் காமெடி எபிசோட்களை விரும்பிப் பார்க்கக்கூடிய ஒருவர் என அப்புறம் தான் தெரிந்தது. என்னுடைய ஒவ்வொரு எபிசோட்டையும் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார். ’மாரி’ படத்தில் எனக்கு ‘டான் டான்’ அறிமுக பாடல் எல்லாம் கொடுத்து எப்படி என் கதாபாத்திரத்தினை நகைச்சுவையாக சிறப்பாக செய்தாரோ, அதே மரியாதையை ‘திருச்சிற்றம்பலம்’ படத்திலும் செய்திருக்கிறார்.

சின்னதாய் ஒரு கதாபாத்திரம் கிடைத்தாலும் நான் பயன்படுத்திக் கொள்வேன். ஏனென்றால், அந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பவர்கள் நிறையப் பேர் உண்டு. ஆனாலும் தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு வருத்தம் உண்டு. ஆண்களுக்கு கதையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தருவது போல, பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை; குறைவாகவே தருகிறார்கள்.

காமெடி கதாபாத்திரங்களில் கலக்கும் உங்களுக்கு ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் சீரியஸான கதாபாத்திரம். அந்த வாய்ப்பு எப்படி வந்தது?

சீரியஸான கதாபாத்திரம் எப்போதுமே எனக்கு கஷ்டம் தான். கலாய்ப்பது, படபடவென பேசுவது என ஜாலியாக இருக்கக்கூடிய நபர் நான். ‘பாரதி கண்ணம்மா’வில் அழுவது, முகத்தைப் பாவமாக வைத்துக்கொள்வது என கொஞ்சம் சிரமப்பட்டேன். ஆனால், இதில் நடந்த நல்ல விஷயம் என்னவென்றால், காமெடி ஷோ, சினிமாவைவிட எனக்கு இந்த சீரியல் நல்ல ரீச் கொடுத்திருக்கு.

ஏனெனில், கிராமங்களில் சீரியல் பார்ப்பவர்கள் அதிகம். அவர்களிடம் என்னைக் கொண்டு போய் சேர்க்க ’பாரதி கண்ணம்மா’ உதவியது. இது எனக்கு முதல் சீரியல். இதன் இயக்குநர் பிரவீன் என்னிடம் கேட்கும்போது, 2-3 மாதங்கள் நடிக்கக்கூடிய சிறு கதாபாத்திரம் என்று தான் சொன்னார். ஆனால், இப்போது நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. சீரியலிலும் எல்லாருமே எனக்கு ஜாலியாக செட் ஆகிவிட்டார்கள். இதுவும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.

சினிமா, சீரியல், சேனல் நிகழ்ச்சிகள், குடும்பம் என எப்படி அனைத்தையும் சமாளிக்க முடிகிறது?

படப்பிடிப்பு இடைவெளியில் தான் என் குடும்பத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். என்னோட பாப்பாவை அம்மா பார்த்துக் கொள்கிறார். என் பையன் ஆறாம் வகுப்பு என்பதால் அவனை இரண்டு வருடங்களுக்கு ஹாஸ்டலில் சேர்த்து இருக்கிறோம். சில சமயங்களில் இதை எல்லாம் நினைத்தால் வேலையை விட்டுவிடலாம் என்று தான் தோன்றும். ஆனால், என் கணவருடைய சம்பளத்தை மட்டுமே வைத்துக்கொண்டு குடும்பத்தைச் சமாளிப்பது கஷ்டம் என்பதால் இதை எல்லாம் சமாளித்து ஓட வேண்டி இருக்கிறது. என் கணவர் எனக்கு எமோஷனலாக பயங்கர சப்போர்ட்.

எட்டு வருடங்கள் கழித்து, சொந்த ஊரான அறந்தாங்கியில் ரம்ஜான் கொண்டாட்டம் என வீடியோ போட்டு இருந்தீர்களே..?

ஆமாம்! ஒவ்வொரு வருடமும் ரம்ஜானுக்கு எப்படியும் நிகழ்ச்சி அமைந்து விடும். அதனால் பெரும்பாலும் அதிலேயே பிஸியாக இருந்து விடுவேன். மேலும், என் அம்மாவும் ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளை புகுந்த வீட்டில் இருந்து தான் கொண்டாட வேண்டும் என சொல்லிக்கொண்டே இருப்பார். அதுவும் எனக்குப் பழகிவிட்டது.

ஆனால், இந்த வருடம் என் பையன் ஹர்ஷித் ஹாஸ்டலில் இருந்து நேரடியாக இங்கே வராமல் என் அம்மா வீட்டிற்குச் சென்று விட்டான். என்னை விட என் அம்மா, அப்பா, தம்பியுடன் ஹர்ஷித் செட் ஆகிவிட்டான். பாப்பாவும் அம்மாவிடம் தான் இருக்கிறாள். நான் காலையில் சீக்கிரம் எழக்கூடிய ஆள் கிடையாது. ஆனால், பாப்பாவிற்கு காலை உணவு கொடுக்க வேண்டும். அதெல்லாம் நான் சரியாகச் செய்யமாட்டேன் என்பதால் அம்மா பாப்பாவை என்னிடம் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அதனால், குழந்தைகள் இருக்கும் எனது சொந்த ஊரில் இந்த வருடம் ரம்ஜானைக் கொண்டாடினேன்.

இப்பெல்லாம் நகைச்சுவை என்ற பெயரில் உருவ கேலிகளை அதிகம் பார்க்க முடிகிறது. இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பிறரைப் புண்படுத்தும் விதமாக செய்வது நகைச்சுவை அல்ல. அதைவிட, தன்னைத் தாழ்த்தி நகைச்சுவை செய்வது எவ்வளவோ மேல். பிறரைத் தாழ்த்துவதில் எனக்கு விருப்பமும் இல்லை. இதனைப் பிறரும் பின்பற்றினால் எவ்வளவோ நல்லது.

Related Stories

No stories found.