சீரியலைப் பார்த்த பிறகுதான் அவங்களோட ரியாக்‌ஷன் தெரியும்!

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ அம்மு ராமச்சந்திரன் பேட்டி
அம்மு ராமச்சந்திரன்
அம்மு ராமச்சந்திரன்

நடிகை, விஜே, வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் என பன்முகம் கொண்டவர் அம்மு ராமச்சந்திரன். சினிமா, சீரியல் என பிஸியாக இருந்தவரை ஒரு மாலை வேளையில் பிடித்தேன். ஏப்ரல் 11 முதல் ஜீ தமிழில் வலம்வர இருக்கும் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ சீரியலில் நடித்து வரும் அவருடன் ஒரு பேட்டி.

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ எது மாதிரியான சீரியல்? உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க.

இது தெலுங்கு மற்றும் இந்தியில் ஹிட்டடித்த ஒரு சீரியலின் ரீமேக். நான் நடிக்கும் முக்கிய கதாபாத்திரம் சீரியலின் ஆரம்பத்திலேயே இறந்துவிடும். பிறகு எப்படி என்ன நடந்தது என்பதற்கான ஃப்ளாஷ்பேக்காக கதை அடுத்தடுத்து நடக்கும். இந்த கதையைக் கேட்டதுமே எனக்குப் பிடித்துவிட்டது.

“சீரியலின் ஆரம்பத்திலேயே இறந்து விடுகிறீர்கள்... எப்படி ஒத்துக் கொண்டீர்கள்?” என சிலர் கேட்டார்கள். சீரியலில் சும்மா வந்து போவதை விட இதுபோன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பது பிடிக்கும். ஒருத்தர் நிஜமாக இறந்தால் என்னவெல்லாம் செய்வார்களோ, இந்த கதாபாத்திரத்தில் நடித்த எனக்கு அதைச் செய்தார்கள். என் குடும்பம், நண்பர்கள், யாருக்கும் இது தெரியாது. சீரியலை அவர்கள் பார்த்த பிறகுதான் ரியாக்‌ஷன் தெரியும்.

பல வருடங்களாக இந்த இண்டஸ்ட்ரில இருக்கும் நீங்கள், இங்கே கற்றுக்கொண்ட விஷயங்கள் என்ன?

இந்தத் துறைக்கு வந்து இது எனக்கு 25-வது வருடம். திரும்பிப் பார்த்தால் இந்த பயணம் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. மற்றபடி, இந்த துறையே எனக்கு குடும்பம் போல ஆகிவிட்டது. நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன். நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் முதலில் இந்த துறைக்குள் வந்தேன். அப்போதெல்லாம் சமூக வலைதளங்கள் கிடையாது. தெரிந்தவர்கள் மூலமாக தான் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தது. சன் டிவிக்குள் வந்தபோது எனக்கு நல்ல வெளிச்சம் கிடைத்தது. அந்த வெளிச்சத்தில் தமிழ், மலையாளம் என சுமார் 25 படங்களில் நடித்துவிட்டேன்.

வெங்கட்பிரபுவின் ‘சரோஜா’ படத்தில் உங்க கதாபாத்திரம் பேசப்பட்டது. அண்மையில் ரிலீஸான அவருடைய ‘மன்மதலீலை’ படம் பார்த்தீர்களா?

தியேட்டருக்குப் போக டைம் இல்லாததால் ‘மன்மதலீலை’ இன்னும் பார்க்கவில்லை. ’சரோஜா’ என்னுடைய 15-வது படம். முதல் படம் ‘மஜ்னு’. ஆனால், அதில் என்னுடைய போர்ஷனை எடிட் செய்துவிட்டார்கள். வெங்கட்பிரபு சார் ‘சென்னை-28’ படம் இயக்குவதற்கு முன்பிருந்தே அவரை எனக்குத் தெரியும். நிறையச் சேனலுக்கு அவர் இயக்கிய பேட்டியில் நான் ஆங்கரிங் செய்திருக்கிறேன். அவர் எனக்கு நல்ல நண்பர். ‘சென்னை-28’ படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு முதலில் என்னைத் தான் கேட்டார்கள். ஆனால், நான் சின்னவளாக இருந்ததால் செலக்ட் ஆகவில்லை. பிறகு ‘சரோஜா’ படத்தில் என்னிடம் வெங்கட் பிரபு சார் கேட்டார்; உடனே ஒத்துக் கொண்டேன்.

சீரியஸாகவும், காமெடியாகவும் நடிக்கிறீர்கள். இரண்டில் எது உங்களுக்கு மிகவும் பிடிக்கும்?

நான் நிஜத்தில் சீரியசும் இல்லை. காமெடியும் இல்லை. இரண்டுக்கும் நடுவில். ஆனால், காமெடி ரோல் செய்வது அவ்வளவு எளிது இல்லை. இதில் என்ன ஒரு அட்வாண்டேஜ் என்றால் இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும்போது நம்முடைய மனநிலையும் ஜாலியாக இருக்கும். சீரியசான ரோலுக்கெல்லாம் ஒரு பாக்ஸ் கிளிசரின் எல்லாம் உபயோகித்து இருக்கிறேன். நடித்து முடித்து வீட்டுக்குப் போனாலும் அதே மனநிலைதான் இருக்கும். அதனால், அவ்வப்போது சீரியஸ் கதாபாத்திரங்களுக்கு சின்னதாய் ஒரு பிரேக் விட்டுவிட்டு கிரேஸி மோகன் சார் நாடகம், ‘மீண்டும் மீண்டும் சிரிப்பு’ போன்றவற்றை எடுத்து நடித்தேன்.

விஜே, நடிப்பு, இப்போ ஸ்டோரி டெல்லிங்ன்னு பல துறையில இயங்கிட்டு இருக்கீங்க. இந்த துறைக்குள் வந்தாலே பல வேலைகள் கையாள்வது என்பது நிர்பந்தம் ஆகிவிடுகிறதா?

என்னை நானே நிர்பந்தித்து எதையும் செய்ய மாட்டேன். ஆனால், இந்த துறையைப் பொறுத்தவரை மாதச்சம்பளம் என்ற நிரந்தர வருமானம் என்பது கிடையாது. நாளை யாருக்கு என்ன நடக்கும் என்பதும் இந்த துறையில் நிரந்தரமில்லை. நாளை வருவது என்பது போனஸ். இன்றும் மட்டும் தான் இங்கு நிரந்தரம்.

ஒரு சீரியல் முடித்துவிட்டால் அடுத்து நம் கையில் என்ன என்பது குறித்து எந்த நிச்சயமும் இல்லை. இப்போதாவது சோஷியல் மீடியா போன்ற விஷயங்கள் உங்களை புரோமோட் செய்து சம்பாதிக்க நிறைய வழிகளைத் திறந்து விடுகிறது. நான் வந்த சமயத்தில் அதுவும் கிடையாதே. அதனால், டப்பிங்க் பண்ற புதுவிஷயங்களை முயற்சி செய்து பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். 1999-ல் டப்பிங் யூனியன் கார்ட் வாங்கி விளம்பரம், சீரியல் போன்றவற்றிற்கு டப்பிங் கொடுக்க ஆரம்பித்தேன்.

அதேபோல், பரதநாட்டியம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் நிறைய புதிதாக முயற்சி செய்தேன். ஒரே விஷயத்தை மட்டுமே கவனம் செலுத்தி இங்கு காணாமல் போவதை நான் விரும்பவில்லை. எதாவது ஒரு ரூபத்தில் இந்தத் துறையில் இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். அதைத் தான் செய்து கொண்டிருக்கிறேன்.

என்றும் இளமையின் ரகசியம் என்ன?

ரகசியம் என்றால் நிச்சயம் என் அம்மாவுடைய ஜீன் தான். என் அம்மாவுக்கு 60 வயதாகிறது. இப்போது பார்த்தாலும் அப்போது பார்த்தது போலவே இருக்கிறார்களே என்று தோன்றும். அது தான் எனக்கும். மற்றபடி நான் பொதுவாகவே ஒரு பாசிட்டிவான நபர். கோபமோ, அழுகையோ, சந்தோஷமோ எது வந்தாலும் அதை சரியான முறையில் வெளிப்படுத்தத் தெரியவேண்டும். அதேபோல், வீட்டில் இருந்தாலும் ஆக்ட்டிவாக எதையாவது செய்து கொண்டிருப்பேன். எதுவுமே நம் மனநிலை பொறுத்தது தான்.

அடுத்தடுத்த படங்கள்..?

’ரஜினி’ என்ற ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது. ’ஸ்டோரி டெல்லிங் ஆப்’பில் கதை படித்துக்கொண்டிருக்கிறேன். இவை தவிர, நிறைய வெப் சீரிஸ்களுக்கு வாய்ஸ் ஓவரும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு மலையாளப் படத்தில் செகண்ட் லீடாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். இதுதான் இப்போதைக்கு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in