தெலுங்கு பிக் பாஸ்: அடுத்த சீஸனைத் தொகுத்து வழங்குகிறாரா சமந்தா?

தெலுங்கு பிக் பாஸ்: அடுத்த சீஸனைத் தொகுத்து வழங்குகிறாரா சமந்தா?

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீஸன்களை முடித்து தற்போது ஆறாவது சீஸனை எதிர்நோக்கியுள்ளது. இது போலவே தெலுங்கிலும் ஐந்து சீஸன்கள் நிறைவடைந்து ஆறாவது சீஸன் விரைவில் தொடங்க உள்ளது. தமிழைப் போலவே தெலுங்கிலும் பிக் பாஸ் ஓடிடி சமீபத்தில்தான் முடிவடைந்தது. இதில் நடிகை பிந்து மாதவி வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் நடிகர் கமல்ஹாசன், இந்தியில் சல்மான் கான், மலையாளத்தில் மோகன்லால் பிக் பாஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது போல தெலுங்கில் முன்னணி நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் தெலுங்கில் இதற்கு முந்தைய சீஸன் ஒன்றில் படப்பிடிப்பு காரணமாக ஒரு எபிசோடில் நாகார்ஜுனா கலந்துகொள்ள முடியாமல் போனது.

அந்தச் சமயத்தில் நாகார்ஜுனாவின் மருமகளாக இருந்த நடிகை சமந்தா ஒரு எபிசோட் மட்டும் சிறப்புத் தொகுப்பாளராகத் தொகுத்து வழங்கினார். தொகுப்பாளராக பிக் பாஸ் நிகழ்ச்சி அனுபவத்தை அப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சமந்தா பகிர்ந்திருந்தார்.

அதில், 'எந்த ஒரு வேலையை எடுத்துக்கொண்டாலும் அதில் புதிதான விஷயங்களைக் கற்றுக்கொண்டு முழுமையான மனதோடு சிறப்பாகப் பங்களிக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படித்தான் இந்தப் பணியையும் எடுத்துக்கொண்டேன். இதுவரை தொகுப்பாளர் வேலையை நான் செய்ததில்லை. ஆனால் செய்த வரையில் நான் என்னுடைய சிறப்பான ஒரு பக்கத்தைக் கொடுத்துள்ளேன் என்று நம்புகிறேன். அந்த வகையில் பிக் பாஸ் தொகுப்பாளராக இது எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்தமான ஒரு விஷயமாக அமைந்தது' என்று சமந்தா பகிர்ந்திருந்தார். இப்பொழுது பிக் பாஸ் ஆறாவது சீஸன் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் நாகார்ஜுனா படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் இந்த சீஸனை அவர் தொகுத்து வழங்க வாய்ப்புகள் குறைவு என்று சொல்லப்படுகிறது.

அவருக்குப் பதிலாக நடிகை சமந்தா இந்த சீஸனைத் தொகுத்து வழங்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது பிக் பாஸ் குழு. ஏற்கெனவே இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அனுபவம் இருப்பதால் இதற்குச் சம்மதம் தெரிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in