நான் சண்டை போட்டுக்கொண்டு ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலைவிட்டு விலகவில்லை!

சின்னத்திரை நடிகை சாய் காயத்ரி பேட்டி
சாய் காயத்ரி
சாய் காயத்ரி’பாண்டியன் ஸ்டோர்ஸ்’

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சின்னத்திரை பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்ற ஒன்று. சீரியலுக்கு மட்டுமில்லாமல், அதில் நடித்து வரக்கூடிய ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்குமே ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, கதையில் வீட்டின் கடைக்குட்டியான கண்ணனுக்கும் அவன் மனைவி ஐஸ்வர்யா கதாபாத்திரத்திற்குமே நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

இதில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்து வந்தார். பின்பு, அவருக்குப் பதிலாக சாய் காயத்ரி நடிக்க வந்தார். இப்போது இவரும் சீரியலை விட்டு விலக இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில், விலகலுக்கான காரணம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து நம்மிடம் பேசினார் சாய் காயத்ரி.

திடீரென சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்து இருக்கிறீர்களே..?

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’

யோசித்து எடுத்த முடிவுதான் இது. இப்போதில்லை என்றாலும் என்றாவது சீரியலை விட்டு விலகித்தான் இருப்பேன். முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு நான் வரும்போது என்னுடைய டிராக் வேறு மாதிரி சொன்னார்கள். இந்த கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் தைரியமாக நடிக்க வேண்டும், சலூன் போன்ற விஷயங்கள் நடக்கும், குடும்பத்தின் மீது அக்கறை போன்ற விஷயங்களைச் சொன்னார்கள். ஆனால், இதுபோன்ற விஷயங்கள் இப்போது வரை சீரியலில் அதிகம் வரவில்லை. சலூன் போன்ற விஷயங்கள் கூட காட்சியாக வைத்திருந்தார்களே தவிர பிறகு பெரிதாக எதுவும் இல்லை.

மேலும், இனிமேல் ஐஸ்வர்யாவின் கதாபாத்திரமும் கதைப்படி எதிர்மறையாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆரம்பத்தில் எனக்குச் சொன்னதுபடி, எப்போது கதை வரும் என எதிர்பார்த்து இருந்தேன். ப்ரைம் டைம் சீரியல் எனும்போது நாம் உள்ளே வந்த உடனேயே நமக்கு ஏற்றபடி கதையை மாற்றுவார்கள் என எதிர்பார்க்கக் கூடாது. நானும் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் பொறுமையாக இருந்தேன். அப்போதும் அது நடக்காத நிலையில் தனிப்பட்ட முறையில் யோசித்துப் பார்த்தேன். சீரியலில் இருந்து விலகுவதுதான் சரி என்று தோன்றியது.

எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்க உங்களுக்கு விருப்பம் இல்லையா?

அப்படி கிடையாது. சினிமாவில் ரம்யா கிருஷ்ணன் மேம் செய்யாத எதிர்மறை கதாபாத்திரமா? ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே ஐஸ்வர்யா கதாபாத்திரம் அப்படி என்றால் பிரச்சினை இல்லை. ஆனால், திடீரென்று மாறுவது என்பது பார்வையாளர்கள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அதில் எனக்குமே விருப்பம் இல்லாமல்தான் இருந்தது. கதை ஏன் இப்படி மாறுகிறது, எனக்கேற்றபடி மாற்றுங்களேன் என ஒரு ஆர்ட்டிஸ்ட்டாக எனக்கு கேள்வி கேட்க உரிமையில்லை. அதனால், சீரியலில் இருந்து வெளியேறும் முடிவை நான் தெரிவித்தேன்.

அதில் அவர்களுக்கும் வருத்தம் இருந்தது. “ஒரு வாரம் யோசித்து முடிவெடுங்கள்” என எனகு அவகாசம் தந்தார்கள். ஆனால், வெளியேறுவதுதான் சரி எனத் தோன்றியது. அவர்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள். சீரியல் தயாரிப்புத் தரப்பிலும் சரி, தொலைக்காட்சித் தரப்பிலும் சரி என் முடிவை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. அதேபோல, நான் இருந்தவரையிலும் தயாரிப்புத் தரப்பிலும், உடன் நடித்தவர்களும் என்னை நன்றாகவே பார்த்துக் கொண்டார்கள்.

உங்களுக்குப் பதிலாக மீண்டும் விஜே தீபிகாவே நடிக்க இருக்கிறார் என்கிறார்களே..?

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’சாய் காயத்ரி, விஜே தீபிகா

அதுபற்றி நான் வெளிப்படையாக சொல்ல முடியாதே. எனக்கான காட்சிகள் முடிந்து விட்டது. அது எப்போது வரை ஒளிபரப்புவார்கள் எனத் தெரியாது. அது முடிந்த பிறகு புதிதாக வரும் ஐஸ்வர்யா யார் என்பது தெரிய வரும். யாராக இருந்தாலும் பார்வையாளர்கள் நிச்சயம் வரவேற்புக் கொடுப்பார்கள். இத்தனை நாட்கள் என்னை ஐஸ்வர்யாவாக ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி.

அடுத்து என்ன மாதிரியான கதாபாத்திரங்கள், சீரியல்களில் உங்களை எதிர்பார்க்கலாம்?

இதுவரை எந்த ஐடியாவும் இல்லை. ஒரு விஷயத்தை மீண்டும் இங்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் சண்டைப் போட்டுக் கொண்டோ அல்லது சேனல் தரப்பில் பிடிக்காமலோ சீரியலைவிட்டு வெளியேறவில்லை. இது என் தனிப்பட்ட முடிவு. ஆரம்ப காலத்தில் இருந்து என்னை வளர்த்து விட்ட பலர் அங்கு இருக்கின்றனர். அதனால், வேறு சீரியல்களில் நடிக்க வேண்டும் என்று அவர்கள் கூப்பிட்டால் மீண்டும் வருவேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in