பெண்களை காலில் விழவைப்பது மாதிரியான காட்சிகளை தவிர்க்கலாம்!

- ’பேரன்பு’ வைஷ்ணவி பேசுகிறார்
வைஷ்ணவி
வைஷ்ணவி

விஜய் டிவியின் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் மூலமாக நம் அனைவருக்கும் பரிச்சயமானவர் வைஷ்ணவி. இப்போது ஜீ தமிழ் சேனலில் ‘பேரன்பு’ சீரியல் வழியே அனைவருக்கும் பிடித்தமானவர் ஆகி இருக்கிறார். அவரிடம் காமதேனு இணையதளத்திற்காக பேசினோம்.

உங்களுடைய பரபரப்பான பிஸி ஷெட்யூலில் பேசிக் கொண்டிருக்கிறோம். எப்படி போய்க் கொண்டிருக்கிறது எல்லாம்?

கொஞ்சம் பிஸியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது சீரியலில் என்னுடைய கணவருடைய தங்கையாக இருப்பவரின் திருமணம் நடந்து கொண்டிருப்பதால் நாத்தனாருக்கு எல்லாப் பொறுப்புகளையும் எடுத்துச் செய்து கொண்டிருக்கிறேன். ஜீ தமிழில் ‘பேரன்பு’ சீரியல் ஆரம்பித்து ஒரு வருடம் ஆனதே தெரியவில்லை. இப்போதுதான் ஆரம்பித்தது போல இருக்கிறது. ஒரு வருடம் என்பதால், நாங்கள் எல்லோருமே கிட்டத்தட்ட ஒரு குடும்பமாக மாறிவிட்டோம்.

வானதி, வைஷ்ணவி இருவரைப் பற்றியும் சொல்லுங்கள்?

வானதி பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் அவள் பாசத்திற்காக எதையும் செய்யக் கூடியவள். வைஷ்ணவி நிச்சயம் அப்படிக் கிடையாது. தப்பு என்றால் தப்புதான். அப்படி நகரக்கூடியவள்தான் வைஷ்ணவி.

பொதுவாக சீரியல் என்றாலே மாமியார்- மருமகளுக்கு இடையில் ஒரு பனிப்போர் இருக்கும்படியாகத் தான் காட்டுவார்கள். ‘பேரன்பு’ சீரியலில் முற்றிலும் இதற்கு நேர் எதிர்! உங்கள், மாமியார் - மருமகள் பாசம் பற்றிச் சொல்லுங்கள்?

இந்தக் கதையைப் பற்றிச் சொல்லும்போதே மாமியார்- மருமகள் கதை என்றுதான் சொன்னார்கள். மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் இருக்கக்கூடிய லவ் கனெக்ட் அவர்கள் எங்கிருந்தாலும் உணர்ந்து கொள்ள முடியும். இதுவரைக்கும் எந்தவொரு சீரியலிலும் இது வராதது என்று நினைக்கிறேன். அப்படியே வந்திருந்தாலும் இது எனக்கு ஸ்பெஷல் என்றுதான் சொல்வேன். என் கணவர் என்னை விரும்புவதை விட என் மாமியார்தான் என்னை அதிகம் விரும்பக்கூடிய ஒருவர்.

நான் வேறு ஊரில் இருந்தால்கூட அவர் எனக்குப் பசிக்கிறதா என்பதையும் கேட்டு தெரிந்துகொள்வார். அந்த அளவுக்கு எனக்கும் என் மாமியாருக்கும் கெமிஸ்ட்ரி அதிகம். இப்படி எல்லாமே இந்த சீரியலில் வித்தியாசமாகவே இருக்கும். பொதுவாகவே, பெரும்பாலான சீரியல்களில் மாமியார்தான் மகனை தூண்டிவிட்டு பிரச்சினைக்குக் காரணமாக அமைவார். ஆனால், இதில் அப்படியே எல்லாமே வித்தியாசமாக இருக்கும்.

சீரியலில் உங்களுக்கு சூப்பர் மாமியார். நிஜத்தில் எப்படியான மாமியார் மற்றும் கணவரை எதிர்ப்பார்க்கிறீர்கள்?

சீரியலில் ராஜராஜேஷ்வரி மிகவும் அன்பானவர். நிஜத்திலும் ஷமிதாக்கா அப்படிதான். சீரியலில் இருப்பது போல, எனக்கு நிஜத்திலும் இப்படித்தான் வேண்டும் அப்படித்தான் வேண்டும் என்று எந்த எண்ணமும் இல்லை. நான் இருப்பது போல அப்படியே என்னை ஏற்றுக்கொள்ளக்கூடிய மாமியார் வந்தால் போதும்.

கணவர் என்று கேட்டால், சீரியலில் என்னை அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. நிஜ வாழ்க்கையில் கார்த்திக் போல எனக்கும் யாரும் வேண்டாம். காதல் இருந்தால் கூட வெளிப்படையாகச் சொல்லத் தெரியாதவர். வானதி மீது அவருக்கு பாசம் வந்துவிட்டது என எங்களைச் சுற்றியிருப்பவர்களுக்குத் தெரியும். ஆனால், அவருக்குத் தெரியாது. இது போன்ற மாப்பிளை நிச்சயமாக எனக்கு வேண்டாம். அதனால், நிஜத்தில் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டு புரிந்து கொள்ளும் மாப்பிள்ளை என்றால் ஓகேதான்.

சீரியல், சினிமா என்று இரண்டிலுமே வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். வரும் காலத்தில் எதில் கவனம் செலுத்த விருப்பம்?

சீரியல், சினிமா இரண்டையும் நான் பிரித்துப் பார்க்கவில்லை. இரண்டில் எதில் வாய்ப்புக் கிடைத்தாலும் முழு மனதாகச் செய்து விடுவேன். இரண்டிலும் ஒரே மாதிரிதான் நான் வேலை செய்வேன். நல்ல படங்கள் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்.

என்னுடைய முதல் படம் சந்தானம் சாருடன் ‘சபாபதி’ நடித்திருந்தேன். அதில் எனக்கு மறக்க முடியாத ஒரு விஷயம் என்னவென்றால் படம் 19-ம் தேதி வெளியானது. நான் முதல் சீரியல் கமிட் ஆனதும் அந்தத் தேதிதான் என்பது என்னுடைய ஸ்பெஷல்.

சமீபகாலமாக சின்னத்திரையில் அதிகரிக்கும் தற்கொலைகள், நிறைய பிரச்சினைகளான விஷயங்கள் எல்லாம் வருகிறதே. சின்னத்திரை அந்த அளவுக்கு அழுத்தம் தரக்கூடிய விஷயமாக இருக்கிறதா?

மீடியா மூலமாக நாங்கள் எளிதில் வெளியில் தெரியக்கூடியவர்களாக இருக்கிறோம். எங்களுக்கு நடக்கக்கூடிய பிரச்சினைகள் வெளியில் இருப்பவர்களுக்கும் நடக்கிறது. அது பெரிய அளவில் வெளியில் தெரிவதில்லையே தவிர அவர்களுக்கு எங்களுக்கு நடப்பதை விட அதிகமாகவே நடக்கிறது.

அதிலும் குறிப்பாக, இந்த டிஜிட்டல் யுகத்தில் வாய்ப்பு இருக்கும் வரைதான் எதுவும் நிரந்தரம். ஏனெனில், நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் நாங்களும் போட்டி போட்டுத்தான் இங்கு நிலைத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. அதனால், அந்த அழுத்தம் நடிகர்களான எங்களுக்கு இருக்கிறது என்பது உண்மைதான். நிரந்தரம் என்பது இந்தத் துறையில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலுமே இல்லை என்பதுதான் உண்மை.

சீரியலில் இருக்கும் எந்தவொரு வழக்கமான பழமைவாதமான விஷயத்தைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வீர்கள்?

எனக்கு ‘சத்யா’, ‘வித்யா நம்பர் 1’ ஆகிய சீரியல்கள் மிகவும் பிடிக்கும். அதில் என் கதாபாத்திரம் மிகவும் தைரியமானது. பெண்கள் என்றாலே சீரியலில் அழுது கொண்டுதான் இருப்பார்கள் என்பது போன்ற வழக்கமான விஷயத்தை உடைத்துவிட்டு, அந்தக் கதாபாத்திரத்தை வைத்திருப்பார்கள். இதுபோன்று அதிகம் தொடரலாம்.

அதே போன்று, பெண்களை காலில் விழ வைப்பது, கெஞ்சுவது போன்றக் காட்சிகளைத் தவிர்க்கலாம். பெண்கள் குணாதிசியங்களைக் குறைவாகக் காட்டுவது, அவர்களால் முடியாது என்பது போன்று வைக்கும் காட்சிகளைத் தவிர்க்கலாம். நிஜமாகவே, சீரியல் பார்த்து நல்ல விஷயங்களால் பெண்கள் ஈர்க்கப்படுகிறார்கள் என்பது போன்றக் காட்சிகளை வைப்பதை வரவேற்கிறேன்.

உங்கள் தோழி ரக்‌ஷிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போயிருக்கிறார். அவர் எப்படி விளையாடுவதாக நினைக்கிறீர்கள்?

ரக்‌ஷிதா மிக எளிதாக அனைவருடனும் நட்பாகப் பழகக்கூடியவர். அவருடைய திறமை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக இன்னும் பெரிய அளவில் எல்லாப் பக்கமும் தெரிய வருகிறது. நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரைக்கும் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ரக்‌ஷிதா மட்டுமல்ல, ஆயிஷாவும் என்னுடைய தோழிதான். ரக்‌ஷிதா, ஆயிஷா இருவருமே இறுதி வரைக்கும் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in