அசீம் சொல்வது சரிதான்; அதைச் சொல்லும் விதம்தான் சரியில்லை!

பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தி சுளீர்
சுரேஷ் சக்கரவர்த்தி
சுரேஷ் சக்கரவர்த்தி

பிக் பாஸ் ஆறாவது சீசனில் தனக்குப் பிடித்த போட்டியாளர், போட்டியாளர்களின் தற்போதைய நடவடிக்கை ஆகியவை குறித்து அந்த நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் சுரேஷ் சக்ரவர்த்தி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதன் இறுதி போட்டிக்குள் முதல் போட்டியாளராக அமுதவாணன் தேர்வாகி இருக்கிறார். இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் குறித்தும் அதன் முந்தைய சீசன் போட்டியாளர்கள் சூசகமான விமர்சனங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், நேற்று நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சமூக வலைதள பிரபலம் அஹமது ஆகியோர் உள்ளே வந்து போட்டியாளர்களின் விளையாட்டு பற்றிய நிறை குறைகளை எடுத்துரைத்து நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தைக் கூட்டினர்.

இது குறித்து காமதேனுவுக்காக சுரேஷ் சக்ரவர்த்தியிடம் பேசினோம். “பிக் பாஸ் ஆறாவது சீசனுக்குள் இப்போதுதான் போய் வந்திருக்கிறேன். பொதுவாக நான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகன். கடந்த சில சீசன்கள் சுவாரஸ்யம் குறைவு என்ற கமென்ட் வந்திருந்தாலும், இந்த சீசனைப் பொறுத்தவரையிலும் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் கன்டெண்ட் கொடுத்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த சீசனில் கிடைத்த இந்த மாபெரும் மேடையை யார் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என மக்கள் நினைக்கிறார்களோ அவர்களே போட்டியில் வெற்றி பெறுவார்கள்.

பிக் பாஸ் வெற்றிவாய்ப்பு என்பது மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் கிடைக்கக்கூடிய ஒன்று. அந்த விதத்தில் பார்த்தால், இப்போதிருக்கும் அசீம், விக்ரமன், அமுதவாணன், ஷிவின், ஏடிகே, மைனா, கதிரவன் என ஏழு பேருக்குமே வெற்றி வாய்ப்புகள் உண்டு. இன்னும் சில நாட்களில் போட்டிகள் கடுமையாகும்” என்ற அவரிடம், இந்த சீசனில் பார்வையாளர்களிடம் இருந்து அதிகம் எதிர்மறை கமென்ட்களை பெற்ற அசீம் பற்றி கேட்டோம்.

“ஆரம்பத்தில் இருந்தே பிறரைத் தாழ்த்தி பேசுவதும், தன்னைப் பற்றி தற்புகழ்ச்சி செய்வதுமாக அசீம் இருந்திருக்கிறார். எல்லோருக்கும் நிறை குறை என்பது இருக்கும். எல்லோருமே சரியாக இருக்க வேண்டும் என்றுதான் முயற்சி செய்வார்கள். அதைத்தான் அவரிடமும் நேற்றைய நிகழ்ச்சியில் சொன்னேன். அவர் சொல்லும் சில விஷயங்கள் சரியாக இருக்கிறது. ஆனால், அதை அவர் சொல்லும் விதம்தான் சரியில்லை. அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இதைதான் நான் வலியுறுத்திச் சொல்லி வந்தேன். நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் பெரிதாக என்ன மாறிவிடப் போகிறார்கள் எனக் கேட்கலாம். ஆனால், முன்பிருந்ததற்கு அசீம் எவ்வளவோ மாறிவிட்டார். இதை எல்லாம் தாண்டி அவரை பிடிக்கும் ரசிகர்கள் போடக்கூடிய ஓட்டில்தான் அவர் வெற்றி இருக்கிறது” என்றவர், “இந்த சீசனில் எனக்குப் பிடித்த போட்டியாளர் யார் என்று கேட்டீர்களானால் நான் பிக் பாஸைத்தான் சொல்வேன்” என்று கலகலப்பாய் முடித்தார்.

“இந்த சீசன் மட்டுமல்ல, எந்த சீசனிலும் எனக்குப் பிடித்தப் போட்டியாளர் பிக்பாஸ்தான். எல்லா சீசன்களிலும் அவரும் ஒரு போட்டியாளர்தான். இந்த சீசனில் ‘தக் லைஃப் தலைவா’ என அசீம் சொல்வதைப் போல பல இடங்களில் பிக்பாஸ் ரசிக்கும்படியும் நடந்திருக்கிறார். இன்னும் சில நாட்களில் மக்களின் முடிவு என்ன என்பது விரைவில் தெரிய வரும்” என்று முடித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in