காதல் குறித்து நேரலையில் பேசிய கண்மணி!

காதல் குறித்து நேரலையில் பேசிய கண்மணி!

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருப்பவர் கண்மணி. இவருக்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'இதயத்தை திருடாதே' சீரியல் நடிகர் நவீனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனை இருவருமே தங்களது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.

இருவருக்கும் குடும்பத்தால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இது என்றும் ஜூன் மாதத்தில் திருமணம் இருக்கலாம் எனவும் சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருவரும் குடும்ப நண்பர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நவீனுடனான திருமணம் குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று மாலை கண்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் வந்தார்.

அதில், “என் வாழ்க்கையில் நடந்த எதுவுமே நான் எதிர்ப்பார்க்காததுதான். உங்களுடைய ஆதரவிற்கு நன்றி. உங்களுடைய அன்பும் ஆதரவும்தான் எந்தப் பிரச்சினை வந்தாலும் எதிர்கொள்ள நம்பிக்கை கொடுத்திருக்கு. என் வாழ்க்கை இப்போ நல்லா போயிட்டு இருக்கு. அது தொடர்பான விளக்கம் சீக்கிரமாவே சொல்றேன்.

ஒருத்தரை நம்ம வாழ்க்கையில கொண்டாடறதும் வெறுக்கறதும் அவரவருடைய விருப்பம். அப்படி என்னைப் பிடிச்சு கொண்டாடறவங்களுக்கு ரொம்ப நன்றி! பிடிக்காதவங்களை அப்படியே கடந்துவிடுவேன். என்னைப் பிடிச்சவங்களுக்கு நன்றி சொல்ல தான் வந்தேன்” என்று நேரலையில் உருக்கமாகப் பேசினார் கண்மணி.

’இதயத்தை திருடாதே’ சீரியலில் நடிகர் நவீனும் அவருக்கு ஜோடியாக பிந்துவும் நடித்து வருகின்றனர். ரீல் ஜோடியான இருவரும் நிஜத்திலும் காதலிக்கிறார்கள் என செய்திகள் வந்த நிலையில், இப்பொழுது நவீன் – கண்மணி காதலால் ரசிகர்கள் நவீன் பிந்துவை ஏமாற்றிவிட்டார் என செய்தி பரப்பிவருகின்றனர்.

ஆனால், ஆரம்பத்தில் இருந்தே நண்பர்களாவே பழகி வருகிறோம் என நவீன் மற்றும் பிந்து இருவரும் தெரிவித்துள்ளனர். இது குறித்தும் தங்களது காதல் மற்றும் கல்யாணம் குறித்தும் விரைவில் கண்மணி மற்றும் நவீன் இருவரும் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in