‘குக் வித் கோமாளி’யில் இருந்து மணிமேகலை விலகியது வருத்தம்தான்!

ரோஷினி ஹரிப்பிரியன் பேட்டி!
ரோஷினி ஹரிப்பிரியன்
ரோஷினி ஹரிப்பிரியன்

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் ஒவ்வொரு வீட்டின் ‘கண்ணம்மா’வாக மாறிப்போனவர் ரோஷினி ஹரிப்பிரியன். சின்னத்திரையில் பலருக்கும் பிடித்தமானவராக இருந்தவர் தற்போது, சினிமா, வெப்சீரிஸ், தனி ஆல்பம் என பலவற்றிலும் தடம் பதித்து பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘நீ மட்டும்’ தனியிசை ஆல்பத்தில் நடிகர் அர்ஜூன் சிதம்பரத்துடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்தப் பாடலை இயக்குநர் மணிர த்னத்தின் உதவி இயக்குநரான கிருத்திகா நெல்சன் இயக்கி இருக்கிறார். இளைஞர்கள் மத்தியில் வைரலாகிவரும் இந்தப் பாடல் குறித்தும், சீரியல், சினிமா பயணம் குறித்தும் ரோஷினியிடம் பேசினோம்.

முதல் முறையாக ஒரு ரொமான்ஸ் தனியிசை ஆல்பத்தில் நடித்திருப்பது பற்றி..?

’நீ மட்டும்’
’நீ மட்டும்’தனியிசை ஆல்பத்தில்...

இதற்கு முன்பும் சில தனியிசை பாடல்களில் நடித்திருக்கிறேன். அதில், ஒருதலைக்காதல் அல்லது நடனம் போன்ற விஷயங்கள்தான் வரும். இதிலும் கிட்டத்தட்ட அதுபோன்ற விஷயம்தான் என்றாலும் ரொமான்ஸும் எங்களுடைய இணையும் தங்களுக்குப் பிடித்திருந்ததாக பலரும் பாராட்டினார்கள். கிருத்திகா முதலில் இந்தப் பாடல், தீம் பற்றி சொன்னதும் ‘ஹை! ரொமான்ஸ் பண்ணி நடிக்கப் போகிறோம்’ என்ற எண்ணத்தில்தான் வந்தேன். ஏனெனில், அதற்கு முன்பு நான் நடித்த சீரியலிலும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, ஒரே மாதிரியான புடவை என்ற கதாபாத்திரம்.

அதனால், இந்தப் பாடலில் என்னைப் பார்ப்பது நிச்சயம் பார்வையாளர்களுக்கும் புதுவிதமான அனுபவமாக இருக்கும் என்று நினைத்தேன். இந்தப் பாடலைப் பொறுத்தவரை பிடித்தே நடிக்க ஒப்புக் கொண்டேன்.

பல படங்களில் சீரியஸாகவே பார்த்துப் பழகிய அர்ஜூன் சிதம்பரம் நேரில் எப்படி பழகினார்?

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்தே இந்தப் பாடலுக்கு அர்ஜூன்தான் நாயகன் என்பதை கிருத்திகா முடிவு செய்து விட்டார். ’பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களில் பெரிய நடிகர்களுடன் நடித்ததால் கொஞ்சம் சீரியஸான நபராகத்தான் இருப்பார் என நினைத்தேன். ஆரம்பத்தில் அதிகம் பேசாமலும் தவிர்த்தேன். ஆனால், பழகுவதற்கு மிகவும் எளிமையான நபராக அர்ஜூன் இருந்தார்.

பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகியபோது அவசரப்பட்டு விட்டோம் என்று நினைத்தீர்களா?

நிச்சயம் இல்லை! அது நிதானமாக யோசித்து எடுத்த முடிவுதான். ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் எப்போதுமே எனக்கு ஸ்பெஷல்தான். நிறம் காரணமாக பலரும் என்னை ஒதுக்கியபோது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் என் திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மீடியாத் துறைக்கு வந்துவிட்டால் அடுத்தடுத்த நிலைக்கு போக வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருப்பது இயல்புதானே. அப்படித்தான், நானும் நினைத்தேன். அதற்காகதான் அந்த சமயத்தில் வெளியேறினேன். அடுத்து, ‘குக் வித் கோமாளி’, தனியிசை ஆல்பம் என கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டேன். இப்போது சில படங்களிலும் இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறேன். விரைவில் அது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அடுத்த சீசன் வந்துவிட்டது. கவனித்தீர்களா?

ரோஷினி ஹரிப்பிரியன்
ரோஷினி ஹரிப்பிரியன்

முதல் சீசனுக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. ரசிகர்களைப் போலவே, எனக்கும் அந்த சீரியல் முடிந்ததில் வருத்தம்தான். இப்போது இரண்டாவது சீசனுக்கும் நல்ல எதிர்பார்ப்பும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. நேரம் கிடைக்கும்போது நானும் பார்க்கிறேன்.

குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இந்த சீசனில் இருந்து மணிமேகலை திடீரென்று விலகிவிட்டாரே?

ரோஷினி ஹரிப்பிரியன் & மணிமேகலை
ரோஷினி ஹரிப்பிரியன் & மணிமேகலை

அவரது பதிவைப் பார்த்தேன். நானும் அந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட போட்டியாளர் என்பதையும் தாண்டி அந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்ததற்குக் காரணம் மணிமேகலையும் தான். கோமாளியாக அவர் அந்த நிகழ்ச்சியில் பண்ணிய பல சேட்டைகள் எல்லாம் வேற லெவல். நிகழ்ச்சியின் பார்வையாளராக அவர் போனது எனக்கு வருத்தம்தான்.

என்ன காரணத்திற்காக அவர் விலகினார் என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், இந்த சீசன் இல்லை என்றாலும் அடுத்த சீசனிலாவது அவர் வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இப்போது எந்த காரணத்திற்காக அவர் விலகி இருந்தாலும் அது நல்லபடியாக நடக்க அவருக்கு என் வாழ்த்துகள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in