நான் நடிகையாக மாறுவேன் என்று நினைக்கவே இல்லை!

ஸ்வேதா சுப்ரமணியன் பேட்டி
ஸ்வேதா சுப்ரமணியன்
ஸ்வேதா சுப்ரமணியன்

சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் நடனப் போட்டியாளராக அறிமுகமாகி பிறகு குழந்தை நட்சத்திரம், டெலி சீரியல்கள் என பிஸியாக நடித்து வருகிறார் நடிகை ஸ்வேதா சுப்ரமணியன். அவரிடம் காமதேனு இணையதள செய்திகளுக்காகப் பேசியதிலிருந்து...

நடிகை என்ற பிரபலத்தன்மையால் என்றாவது வருத்தப்பட்டதுண்டா?

பிரபலம் என்ற சொல்லைக் கேட்டாலே பயமாக இருக்கிறது. பள்ளி - கல்லூரிக் காலங்களில் எல்லாம் என்னை ஒதுக்கியே வைப்பார்கள். நமக்குப் பிடித்த விஷயங்களை நாம் செய்கிறோம், மக்களை மகிழ்விக்கிறோம். ஆனால், அதை எல்லாம் அவர்கள் கருத்திலேயே கொள்ளமாட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் நம்முடைய வயதுதான். அதெல்லாம் கண்டு கொள்ளாமல், நினைத்ததைப் பேசுவார்கள். இதனால், நான் கல்லூரிக்கே போக மாட்டேன் என்று சொல்லி வீட்டில் வந்து அழுதிருக்கிறேன். இது போன்ற பல சம்பவங்கள் நடந்திருக்கிறது.

ஒரு கட்டத்தில் நானே உட்கார்ந்து யோசித்தேன். எதற்காக இதெல்லாம் நடக்கிறது? நாம் என்ன தப்பு செய்து விட்டோம்? நமக்குப் பிடித்ததைத்தானே செய்து கொண்டிருக்கிறோம் என நினைத்துப் பார்த்து என்னை நானே பக்குவப்படுத்திக் கொண்டுவிட்டேன்.

மீடியா வாழ்க்கையில் உங்களுக்கு மறக்க முடியாத தருணம் என்றால் எதைச் சொல்வீர்கள்?

நான் சினிமாவுக்குள் வரும்போது, என்னைப் பார்த்து நடிகை தேவயானி போல இருக்கிறேன், பேசுகிறேன் என்று சொல்வார்கள். எனக்கு அதனாலேயே நடிகை தேவயானியை மிகவும் பிடிக்கும். அப்படி இருக்கும்போது அவருடன் நடிப்பதற்கு எனக்கு ஒரு சீரியலில் வாய்ப்பு வந்தது. முதலில் அது நம்புபடியாகவே இல்லை. அந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்று கருதியே உடனே ஒத்துக்கொண்டேன்.

எனக்கு நடனமும் மிகவும் பிடிக்கும். ’உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?’ நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். பிரபுதேவா சாரும் நயன்தாரா மேமும் என்னுடைய நடனத்தைப் பார்த்துப் பாராட்டி இருக்கிறார்கள். அதேபோல, நான் 12-வது படிக்கும் போது ‘மானாடா மயிலாடா’ நடன நிகழ்ச்சியில் பங்குபெற அழைப்பு வந்தது. ஆனால் என்னுடைய அப்பா, படிப்புதான் முதலில் என்றார். ஆனாலும் இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்று கருதி, “படிப்பையும் நடனத்தையும் சேர்த்தே சமாளிப்பேன்” என்று சொல்லி அதை சாதித்துக் காட்டி, அந்த நடன நிகழ்ச்சியில் நான் டைட்டிலையும் வென்றேன்.

நடிகர், நடிகைகளுக்கு சருமப் பராமரிப்பு என்பது முக்கியமானது. நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள்?

முதல் விஷயம் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது. ஒரு நாளில் மூன்றரை லிட்டர் தண்ணீர் எப்படியேனும் குடித்துவிடுவேன். அதைத் தவிர்க்கவே மாட்டேன். இதுதவிர, அடிப்படையான விஷயம் என்றால், CTMS என்று சொல்லப்படும் க்ளென்சர், டோனர், மாஸ்ச்சுரைசர் மற்றும் சன்ஸ்கிரீன். இது தவறாமல் கடைப்பிடிப்பேன். படப்பிடிப்புக்காக மேக்கப் போட்டால் அதை முறையாக நீக்கிவிட்டுதான் தூங்கச் செல்வேன். இதனால்தான் என்னுடைய சருமம் ஆரோக்கியமாக உள்ளது.

மீடியாத் துறையில் நினைத்ததைச் சாதித்து விட்டீர்களா?

மீடியாத் துறை என்பது நான் முற்றிலும் எதிர்பாராத விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும். நான் நடிகையாக மாறுவேன் என்று நினைக்கவே இல்லை. ஏனென்றால், அடிப்படையில் நான் ஒரு டான்சர். நடனம் மூலமாகதான் எனக்கு நடிப்பு, நிகழ்ச்சி தொகுப்பு ஆகிய வாய்ப்புகள் எல்லாம் வந்தது. எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் என்னுடைய 100 சதவீதத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அதனால், எனக்குப் பிடித்த சினிமாவில் வாய்ப்பு வந்தாலும் அதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு தொடர்ச்சியாக நடிப்பேன்.

உங்களுக்குச் சொந்த ஊர் கோயம்புத்தூர். இப்போது இருப்பது சென்னையில். எந்த ஊர் பிடிக்கும்?

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கோயம்புத்தூரில்தான். 11-ம் வகுப்பு படிக்கும்போதே சென்னக்கு வந்துவிட்டேன். என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஊர் சென்னைதான். சென்னையில் எல்லாருமே ட்ராஃபிக்கைப் பார்த்துத்தான் பயப்படுவார்கள். ஆனால், உண்மையில் எனக்கு இந்த ஊர் ட்ராஃபிக்தான் மிகவும் பிடிக்கும். ட்ராஃபிக்கில் பாட்டுக் கேட்டுக்கொண்டு ட்ராவல் செய்வது என்றால் ஜாலிதான்.

உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் ஒரு விஷயம்?

கேட்பதற்கு இது அறிவுரை மாதிரிக் கூட இருக்கலாம். எந்த ஒரு வேலை செய்தாலும் அதில் 200 சதவீதம் உங்கள் உழைப்பை போட்டுத் தாருங்கள். ஏனெனில் இன்றைய தேதியில் அவரவருக்கு வாய்ப்பு கிடைப்பதே கடினமான விஷயமாக இருக்கிறது. நாம் செய்யும் வேலைக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும். இதுதான் எனது ரசிகர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in