திருமாவளவன் ஆதரவு கேட்டது விக்ரமனுக்கு எதிர்வினையாக முடிந்தது!

பிக் பாஸ் ரிசல்ட் குறித்து பாத்திமா பாபு பளிச்
பாத்திமா பாபு
பாத்திமா பாபு

பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது பிக் பாஸ் தமிழின் ஆறாவது சீசன். மக்கள் வாக்குகள் அடிப்படையில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவதாக சொல்லப்படும் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனுக்கான வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிறன்று நடந்த இறுதி நிகழ்ச்சியில் விக்ரமன், ஷிவின், அசீம் ஆகியோர் இறுதிப் போட்டியாளர்களாக இருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே குறிப்பாக, சமூக வலைதளங்களில் விக்ரமன், ஷிவின் ஆகியோருக்கே அதிக ஆதரவு இருந்தது. சமூக கருத்துகள், பாலின சமத்துவத்தை முன்வைத்தது என பல முற்போக்கான கருத்துகளை முன்வைத்து நிகழ்ச்சியில் தன் இருப்பை பதிவு செய்திருந்தார் விக்ரமன்.

அதேபோல, மூன்றாம் பாலினத்தவரான ஷிவினும் மிக முதிர்ச்சியாக போட்டியாளர்களை எதிர்கொண்டதில் இருந்து நிகழ்ச்சியில் தன் இருப்பை பதிவு செய்தது வரை இவரும் பெரும்பாலான பார்வையாளர்களின் நன்மதிப்பை பெற்றிருந்தார். ஆனால், இந்த சீசனில் அசீமின் பெரும்பாலான நடவடிக்கைகள் பார்வையாளர்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. மேலும், ‘AbuserAzeem, ClownAzeem’ போன்ற ஹேஷ்டேக்குகளும் இணையத்தில் ட்ரெண்டானது.

ஒரு பக்கம் அசீமுக்கு எதிர்ப்புகள் இருந்தாலும் இன்னொரு பக்கம் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குபவர்களில் அசீமும் ஒருவர் என்ற கருத்தும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் இந்த சீசனில் இறுதிப் போட்டியாளர்களாக இருந்த விக்ரமன், அசீம், ஷிவின் ஆகியோரது குணாதிசயமும் அவர்களது விளையாட்டுப் போக்கும் எப்படி இருந்தது என்பதைப் பற்றி செய்தி வாசிப்பாளரும் பிக் பாஸ் மூன்றாவது சீசனின் போட்டியாளருமான பாத்திமா பாபுவிடம் பேசினோம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியாளர்களின் விளையாட்டுப் போக்கை எப்படி பார்க்கறீர்கள்?

பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமானது என்றால் அங்கு நடக்கும் விவாதங்களும் சண்டைகளும்தான். எல்லாரும் அமைதியாக ஒரேபோல இருந்தால் இந்த நிகழ்ச்சியே வெற்றிபெற்றிருக்காது. அந்த வகையில் இந்த சீசன் வெற்றிப் பெற அசீமின் பங்களிப்பு முக்கியமானது. முகம்சுளிக்கும்படி அவர் நடந்து கொண்டார் என்பதால்தான் அதைப் பற்றியும் நாம் பேசுகிறோம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் விக்ரமனுடைய மிகப் பெரிய விசிறி.

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே அவருடைய பேச்சுகள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். ஆனால், யோசித்துப் பாருங்கள்... விக்ரமன் போல அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்திருந்தால் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என விக்ரமன் படம் போல மாறியிருக்கும். நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. அதிகரிக்க எதுவும் செய்யவில்லை எனவும் தொலைக்காட்சித் தரப்பு மீதும் விமர்சனங்கள் வந்திருக்கும்.

ஆனால், இதுபோன்று சண்டை போடுவது மட்டுமே ஒருவர் டைட்டில் வெல்லத் தகுதியாகி விடுமா?

இங்கு தகுதி பார்த்து டைட்டில் யாருக்கும் கொடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஓட்டுகள் அடிப்படையிலேயே வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் எனும்போது விஜய் டிவியை விசாரிக்க வேண்டும் என்று சொல்வது எல்லாம் அபத்தம். பல நாடுகளிலும் ஓட்டுகள் அடிப்படையில்தான் பரிசுகள் கொடுக்கப்படுகிறதா என்று இந்த நிகழ்ச்சிக்கு ஆடிட்டும் நடக்கும். விக்ரமன் நன்றாக விளையாடுகிறார், ஷிவின் ஒரு உத்தம புருஷி என்றுதான் நினைத்தேனே தவிர நான் யாருக்கும் இந்த சீசனில் வாக்களிக்கவில்லை. இந்த மாதிரி, விக்ரமனை நேசித்த பலரும் ஓட்டுப் போடாமல் இருந்ததும் அசீமின் வெற்றிக்கு ஒரு காரணம்.

அசீமின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் டிவியைப் புறக்கணிப்போம் என பலரும் சமூகவலைதளத்தில் எதிர்ப்புத் தெரிவித்தார்களே..?

விஜய் டிவி இதில் என்ன செய்ய முடியும்? ஓட்டுகள் அடிப்படையில்தான் அவர்கள் பரிசைக் கொடுப்பார்கள். அப்படிப் பார்த்தால் இப்படி மோசமான கதாபாத்திரத்தைப் பிரதிபலிக்கக் கூடியவருக்கு ஏன் ஓட்டுப்போட்டு வெற்றிப் பெற வைத்தீர்கள் என பார்வையாளர்களைப் புறக்கணிக்கிறோம் என விஜய் டிவிதான் சொல்ல வேண்டும். இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சி சூது கிடையாது. மேலும், விக்ரமன் ஜெயிக்க ஆதரவு தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்ட ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவர் தெரிவித்ததும் விக்ரமனுக்கு பின்னடைவாக அமைந்தது என்பதே உண்மை.

பிக் பாஸ் வீட்டில் ஒரு இடத்தில் கூட விக்ரமன் நான் இந்த கட்சியைச் சேர்ந்தவன் என்றோ கட்சிக் கொள்கைகளையோ பேசவில்லை. அவர் பேசியதெல்லாம் சமநிலை சமுதாயம், மாற்றம், அறம் போன்றவைதான். அப்படி இருக்கும்போது ஒரு கட்சியைச் சேர்ந்தவர் ஆதரவு கேட்டது விக்ரமனுக்கு எதிர்வினையாக முடிந்தது. திருமாவளவன் கேட்டதில் தவறில்லை ஆனால், அது இப்படி எதிராக அமையும் என்பதை அவர் உணராததுதான் பிரச்சினை.

பார்வையாளர்கள் மத்தியில் விக்ரமனுக்கும் ஷிவினுக்கும் ஆதரவு இருக்கிறது என்றால் அவர்களில் ஒருவரையே விஜய் டிவி வெற்றிப் பெற வைத்திருக்கலாம். ஆனாலும், அசீம் ஏன் ஜெயித்தார் என்று யோசித்தால் இது முழுக்க முழுக்க மக்கள் ஓட்டுகள் அடிப்படையில்தான் நிர்ணயம் ஆகும்.

விக்ரமன் இறுதிப்போட்டியில் ஜெயிக்காதது குறித்து உங்களுக்கு ஏதும் வருத்தம் இருக்கிறதா?

பிக் பாஸ் பணம் என்பது வெறும் ஐம்பது லட்சம்தான். அதையும் தாண்டி தனது கருத்துகளால் விக்ரமன் இன்று பலரது இதயங்களையும் வென்றவராகி இருக்கிறார். அவர் எப்படியும் இனி மக்கள் பணியில்தான் இருப்பார். அவர் என்றாவது தேர்தலில் நிற்கும்போது அவரை அறுதிப் பெரும்பான்மையில் வெற்றிப் பெற வையுங்கள். நிச்சயம் கோடிக்கணக்கான மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவார். இந்த நம்பிக்கையை அவர் விதைத்திருக்கிறார் இல்லையா? அதுவே போதும். மக்கள் பிரதிநிதியாக அவரைக் கொண்டு வாருங்கள். கோப்பை வெற்றி பெற்றது அசீமாக இருக்கலாம். ஆனால், மொத்த வெளிச்சமும் விழுந்தது விக்ரமன் மீதுதான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in