என் கண்மணியின் இயக்கத்தில் நடிக்க ஆசை!

‘கண்ட நாள் முதலாய்’ நவீன் பேட்டி
என் கண்மணியின் இயக்கத்தில் நடிக்க ஆசை!

’இதயத்தை திருடாதே’ சீரியல் மூலமாக சிவாவாக பரவலாக அறியப்பட்டவர் நடிகர் நவீன். இப்போது கலர்ஸ் தமிழின் ‘கண்ட நாள் முதலாய்’ சீரியலில் வெகுளியான கான்ஸ்டபிளாக குமரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியல் வாழ்க்கை, செய்தி வாசிப்பாளர் கண்மணியுடன் திருமண வாழ்க்கை என அவருடன் காமதேனு மின்னிதழுக்காக பேசியதிலிருந்து...

’கண்ட நாள் முதலாய்’ சீரியலுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?

‘இதயத்தை திருடாதே’ சீரியல் முடித்து விட்டு உடனடியாக ஆரம்பித்த சீரியல் ‘கண்ட நாள் முதலாய்’. அந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்படி வரவேற்பு இருந்ததோ அதற்கும் சற்று குறையாமல் இதற்கும், எனது குமரன் கதாபாத்திரத்திற்கும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதில் மகிழ்ச்சி. ’இதயத்தை திருடாதே’ சீரியலின் சிவா கொஞ்சம் முரடன். குமரன் அதற்கு எதிரான ஒரு அப்பாவியான போலீஸ் கான்ஸ்டபிள். இப்படி இரண்டுமே வெவ்வேறான சாயல் கொண்டவை. இரண்டிலுமே மக்கள் என்னை ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. இதே புரொடக்‌ஷனில் முன்பு ஒரு போலீஸ் கேரக்டருக்கு வாய்ப்பு வந்து ரிஜெக்ட் ஆனேன். இப்போது அதே கம்பெனியில் அதே கதாபாத்திரம் என்னைத் தேடி வந்திருக்கிறது.

குமரன் கதாபாத்திரம் எந்த அளவிற்கு உங்களோடு ஒத்துப் போகிறது?

சினிமாவிலும் சீரியலிலும் இந்த கதாபாத்திரத்திற்கு இவர்கள் தான் பொருந்திப் போவார்கள் என ஒரு கணக்குப் போடுவார்கள் இல்லையா? அதை உடைக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். அதனால், நிறைய கதாபாத்திரங்கள் செய்ய வேண்டும் என காத்திருந்தேன். முரடனாக இருந்தாலும் சிவாவை பலருக்கும் பிடித்திருந்தது. சரி, அடுத்து என்ன யோசித்து கொண்டிருந்த போது தான் சிவாவுக்கு முற்றிலும் எதிரான ஒரு கதாபாத்திரமாக குமரன் இருந்தது.

ஜாலியான வெகுளியான, அக்காவுக்காக எதையும் விட்டுக் கொடுக்க வேண்டும் என நினைக்கக் கூடிய ஒரு அன்பான தம்பி. இந்த அப்பாவித்தனமும் நமக்கு வருகிறதா என பார்க்க வேண்டும் என நினைத்தேன். நன்றாகவே வொர்க் அவுட் ஆகியது.

ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

குமரன் மாதிரியான ஒரு வெகுளியான, அன்பான தம்பி வேண்டும் என்று தான் அனைவரும் நினைப்பார்கள். சென்டிமென்ட் காட்சிகளில் நான் அழுதபோது ரசிகர்களும் அழுததாகச் சொன்னார்கள். நிஜத்தில் எனக்கும் குடும்பத்தின் மீது அதிக பாசம் உண்டு. என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் ஐந்து அக்காக்கள். ’கடைக்குட்டி சிங்கம்’ கார்த்தி போலதான் நானும். அதனால், அந்த பாசம் இயல்பாகவே குமரன் கதாபாத்திரத்திலும் வந்துவிட்டது. ஆனால், நிஜத்தில் குமரன் அளவுக்கு நான் வெகுளி கிடையாது. குமரன் எது சீரியஸாக செய்தாலும் காமெடியாகவே தெரியும். நிஜத்தில் வீட்டில் எனக்கு விட்டுக்கொடுப்பார்கள். நானும் அவர்களுக்கு விட்டுக் கொடுப்பேன்.

ஒவ்வொரு சீரியலிலும் கதாநாயகிகள் உங்களுடன் சண்டை போடும்படியாகவே கதை அமைந்துவிடுகிறதே..?

டாம் அண்ட் ஜெர்ரி கான்செப்ட் தான். அது போகப் போகக் கதையில் மாறிவிடும். கதாநாயகன் கதாநாயகி என இரண்டு பேரையும் ஒரே மாதிரி காட்டிவிட்டால் ரசிகர்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்காதே.

நீங்களும் கண்மணியும் இணைந்து எப்போது நடிப்பீர்கள் என்பது தான் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு. உங்கள் பதில் என்ன?

நானும் கண்மணியும் சேர்ந்து நடிக்க இரண்டு, மூன்று புராஜெக்ட்டுகள் வந்தது. ஆனால் கண்மணி, நடிப்பதில் ஆர்வம் இல்லை என்று மறுத்துவிட்டார். கண்மணிக்கு இயக்கத்தில் தான் ஆர்வம் அதிகம். அதில் கவனம் செலுத்துவதாகச் சொல்லி இருக்கிறார். நாங்கள் இருவரும் பேசும்போது கூட அதிகம் படங்கள், கதைகள் குறித்து தான் பேசுவோம்.

வரும் நாட்களில் அவர் இயக்கத்தில் நான் நடிப்பேனா என்பது தெரியாது. அது நடந்தால் சந்தோஷம். நானும் அதை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறேன். சமீபத்தில் ‘விக்ரம்’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘சுழல்’ ஆகிய படங்களைப் பார்த்து நானும் அவரும் நிறைய விவாதித்தோம். சைக்கோ த்ரில்லர், இன்வஸ்டிகேஷன் கதைகள் செய்ய இருவருமே அதிக ஆர்வத்தில் இருக்கிறோம்.

திருமணத்துக்கு முன், பின் என வாழ்வில் என்ன மாதிரியன மாற்றங்கள் வந்திருக்கிறது இருவருக்கும்?

நிஜமாக நான் அப்படி எதுவும் நினைக்கவில்லை. கல்யாணம் செய்தால் ’அவ்வளவு தான்டா; எல்லாம் முடிந்தது’ என்றெல்லாம் பயமுறுத்துவார்கள் இல்லையா அப்படி எல்லாம் எதுவும் மாறவில்லை. இரண்டு பேருமே எங்கள் வேலையைப் பற்றி எதுவும் தலையிடாமல் தேவையான சுதந்திரத்தை கொடுத்து வருகிறோம். முன்பு கண்மணி என்கூட இல்லாமல் இருந்தார். இப்போது என்கூடவே இருந்து தனது சப்போர்ட்டை எனக்குக் கொடுத்து வருகிறார்.

கண்மணி செய்தி வாசிப்பாளராக பிரபலம். அவரை திருமணத்திற்கு முன்பு சந்தித்து இருக்கிறீர்களா?

இல்லை! ஆனால், கண்மணி என்பவர் இருக்கிறார் என்ற விஷயம் தெரியும். இப்போது வரை கூட அவர் டிவியில் செய்தி வாசித்ததை நான் பார்த்தது கிடையாது. மொபைலில் தான் அவர் செய்தி வாசிப்பதைப் பார்த்திருக்கிறேன். அந்தளவுக்கு நேரம் கிடைக்காமல் இருவருமே ஓடிக்கொண்டிருக்கிறோம்.

முன்பு சில படங்களிலும் நடித்திருக்கிறீர்கள். இனி சீரியலில் மட்டும் நடிக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டீர்களா?

சினிமாவில் சில வாய்ப்புகள் வந்தது. ஆனால், சீரியல் கமிட்மென்ட்ஸ் காரணமாக அது முன்பு சரியாக அமையவில்லை. இப்போது அதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறது. படங்கள் செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணம். அதற்காக தான் இங்கு வந்திருக்கிறேன். நிச்சயம் அது நடக்கும். சினிமாவில் எல்லாவிதமான கதாபாத்திரங்களும் நடிக்க வேண்டும் என்பதும் என் விருப்பம். சினிமாவில் நான் நடிக்க வரும் முன்பு, பெரிய ஹீரோ ஒருவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in