அந்த ஒரு விஷயம் தான் இந்த சீரியலை என்னை ஒத்துக்கொள்ள வைத்தது!

- ’ஜமீலா’ நாயகி தன்வி ராவ் பேட்டி!
தன்வி ராவ்
தன்வி ராவ்

டெலி சீரியல்கள் என்றாலே மாமியார்- மருமள் சண்டை, குடும்ப பிரச்சினைகள், காதல் கதைகள் என்ற வழக்கமான சீரியல் டெம்ப்ளேட்களைக் கடந்து புது கான்செப்ட்களோடு வரும் சீரியல்கள் பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெறும். அந்த வரிசையில், கலர்ஸ் தமிழின் ’ஜமீலா’ சீரியலும் இடம் பிடித்திருக்கிறது. இந்த சீரியலின் நாயகி தன்வி ராவுடன் ஷூட் இடைவெளியில் காமதேனு இணையதளத்துக்காகப் பேசினோம்.

ஜமீலா’ சீரியல் வரவேற்பு எப்படி இருக்கிறது?

முதல் நாளில் இருந்தே எல்லாரும் ஆர்வமாக பாராட்டி வருகிறார்கள். எனக்கும் சீரியல் போல அல்லாமல் ஏதோ படத்தில் வேலைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது. தமிழ் சீரியலுக்குள் நுழைந்த போது தமிழ் தெரியாதே எனப் பயந்து கொண்டேதான் வந்தேன். புதுவிதமான அனுபவமாகத்தான் இது இருக்கிறது.

செட்டில் சக நடிகர்களில் இருந்து இயக்குநர் வரை எல்லோருமே எனக்கு, மொழி தெரியாததால் நேரம் ஒதுக்கி காட்சிகளை விளக்குவார்கள். அவர்கள் அனைவரும்தான் எனக்கு தமிழ் ஆசிரியர்கள். நீங்கள் புதிதாக வருகிறீர்கள் என்றால் தமிழ் சினிமாவோ, சீரியலோ உங்களை வேறு ஒருவராக நடத்தாமல் அன்போடு பார்த்துக்கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

வழக்கமான சீரியல் டெம்ப்ளேட் போல அல்லாமல், இஸ்லாம் மதத்தை முன் வைத்து ‘ஜமீலா’ வந்திருக்கிறது போன்ற பாராட்டுகளையும் பார்க்க முடிந்தது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

நீங்கள் கேட்ட இந்த ஒரு விஷயம்தான் இந்த சீரியலை என்னை ஒத்துக்கொள்ள வைத்தது. இந்தக் கதைக்கு வருவதற்கு முன்னால் எனக்கு நிறைய காதல் கதைகள் வந்தது. நம் எல்லோருக்கும் காதல் கதைகள் பிடிக்கும்தான். ஆனால், இந்தக் கதையில் என் கதாபாத்திரம் குறித்து கேட்டதும் உடனே பிடித்து விட்டது.

தன்னுடைய கனவுகளுக்காக போராடும் பெண்கள் குறித்தான கதைதான் இது. தன்னுடைய கனவுகளுக்காக மட்டுமல்லாது, குடும்பத்தில் எல்லோரையும் பார்த்துக் கொள்ளும் பெண் என்பதால் மிகவும் கவனமாக எல்லாவற்றையும் மனதில் வைத்து எழுதப்பட்டிருக்கிறது.

உங்களைப் பற்றி சொல்லுங்கள்?

நடிகை என்பதற்கு முன்னால் நான் ஒரு பரதநாட்டிய கலைஞர். நடிகை மாதுரி தீட்ஷித்துடன் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அந்த வாய்ப்பும் எனக்குக் கிடைத்து அப்படியே நான் நடிப்புத் துறைக்குள் வந்தேன். தியேட்டர் ஆர்டிஸ்ட்டாகவும் இருந்திருக்கிறேன். கன்னடம் தற்போது தமிழில் ‘ஜமீலா’ என நடித்துக் கொண்டிருக்கிறேன். சினிமா சீரியல் என்றில்லாமல் கதை, கதாபாத்திரம் என்ற ரீதியில் தற்போது கவனம் செலுத்தி வருகிறேன்.

மீடியா என்றாலே நல்ல விஷயங்கள் போல சர்ச்சைகளும் இருக்கும். இதை எப்படிப் பார்க்கறீர்கள்?

எனக்கே சமூக வலைதளங்களில் என் உருவம் பற்றி கேலி செய்து நிறைய விமர்சனங்கள் வந்திருக்கிறது. உண்மையில் என் வளர்ச்சிக்கு உதவக்கூடிய வகையிலான விமர்சனம் என்றால் எடுத்துக் கொள்வேன். இல்லை என்றால் அதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது எனக்கு மட்டுமல்ல, எந்தத் துறையில் நாம் இருந்தாலும் அங்கு வரும் தேவையில்லாத சர்ச்சைகளை நாம் இப்படித்தான் கையாள வேண்டும்.

சீரியல் இல்லாத நேரங்களில் என்ன செய்வீர்கள்?

கன்னடம், தமிழ் என மாறி மாறி நடித்துக் கொண்டிருப்பதால் நேரம் கிடைக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறேன். அப்படி நேரம் கிடைத்தால் நடனத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன். மேலும், நான் சைக்காலஜி மாணவி என்பதால் என்னுடைய மாஸ்டர்ஸ் முடிக்க வேண்டும்.

இப்போதுள்ள தலைமுறை உடனே அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் எனும் கருத்து இருக்கும்போது, சைக்காலஜி மாணவியாக என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள்?

எந்தவொரு சிறு விஷயத்திற்கும் மன அழுத்தத்திற்கு செல்வது தவறு. நீங்கள் யாருக்கேனும் நேரம் கொடுக்க முடிந்தால் அவர்களுக்கு ஆதரவாக பேசி மனதை மாற்ற முடியும் என்றால் தயவு செய்து செய்யுங்கள். அதேபோல, உங்களுக்கும் இந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர உதவி தேவைப்பட்டால், தயங்காமல் கேளுங்கள்.

தமிழ் சினிமா எல்லாம் பார்ப்பீர்களா... சமீபத்தில் பார்த்த படம் எது?

நிச்சயம் பார்ப்பேன்! சமீபத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் பார்த்தேன். த்ரிஷா மற்றும் ஐஷ்வர்யா ராய் இருவரது கதாபாத்திரங்களுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் நடிப்பு, உடை, நின்ற விதம், சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்ஸ் என எல்லாமே பிடித்திருந்தது. அதைப்போல நானும் வீட்டில் பயிற்சி செய்துபார்த்தேன். நான் மணி ரத்னம் படங்களுக்கு மிகப் பெரிய ரசிகை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in