‘நான் கொடுத்துவைத்தவள்’ - குழந்தைப் பராமரிப்பில் குடும்பத்தின் ஆதரவால் நெகிழும் ஆல்யா!

‘நான் கொடுத்துவைத்தவள்’ - குழந்தைப் பராமரிப்பில் குடும்பத்தின் ஆதரவால் நெகிழும் ஆல்யா!

பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பிறகு குழந்தையைப் பார்த்துக்கொள்வது, சரியான தூக்கமின்மை, தன்னுடைய உடல் நலன், மனநலன் எனப் பல விஷயங்கள் குறித்தான மன அழுத்தம் உருவாகும். அப்படியான மன அழுத்தத்தை எப்படி சமாளித்தீர்கள் எனும் கேள்விக்கு நடிகை ஆல்யா மானசா அளித்திருக்கும் பதில் நெட்டிசன்களை நெகிழச் செய்திருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘ராஜா ராணி’ சீரியல் மூலமாகப் பரவலாக அறியப்பட்டவர் ஆல்யா மானசா. இதில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அய்லா என்ற பெண் குழந்தை உள்ளது. முதல் குழந்தை பிறப்புக்குப் பிறகு உடல் எடை குறைத்து ‘ராஜா ராணி’ சீரியலின் இரண்டாம் பாகத்தில் ஆல்யா நடித்து வந்தார். சீரியலில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே இரண்டாவது குழந்தைக்கும் தாயானார்.

இப்பொழுது நடிப்பில் இருந்து பிரேக் எடுத்து இருப்பவர் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி இருக்கிறார். அதில் ஒருவர், ‘இரண்டு குழந்தைகளின் பிறப்பு பிறகான மன அழுத்தத்தை எப்படிக் கடந்து வந்தீர்கள்?’ எனக் கேட்டுள்ளார்.

அதற்கு ஆல்யா, ‘நீங்கள் சொல்வது போல பிரசவத்துக்குப் பிறகு எந்தவிதமான மன அழுத்தத்தையும் நான் சந்திக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் என்னுடைய கணவரும் அவருடைய வீட்டைச் சேர்ந்தவர்களும்தான். என்னையும் என் குழந்தைகளையும் நன்றாகக் கவனம் எடுத்து பார்த்துக்கொண்டார்கள். அதனால், எந்த விதமான மன அழுத்தமும் எனக்கு இல்லை. இது போன்ற ஒரு குடும்பம் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். புதிய அம்மாக்களுக்கும், குழந்தைகளுக்கும் இது போன்ற மன அழுத்தம் உருவாகாமல் இருக்க, நிச்சயம் குடும்பத்தின் ஆதரவு அனைவருக்கும் தேவை. அது கிடைக்கும் என நம்புகிறேன்’ என பதிலளித்திருக்கிறார்.

இன்னொருவர், ‘நீங்கள் நடிக்க வரவில்லை என்றால் என்ன ஆகியிருப்பீர்கள்?’ எனக் கேட்டதற்கு, ‘நான் பிசினஸ் செய்திருப்பேன் என நினைக்கிறேன். ஏனெனில் நான் சிறுபிள்ளையாக இருந்தபோது என் குடும்பத்தில் அனைவருமே ஜவுளித் தொழில் செய்துகொண்டிருந்தார்கள்’ எனக் கூறியுள்ளார் ஆல்யா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in