
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முக்கியமானது 'இதயத்தை திருடாதே'. இதன் கதாநாயகனாக நவீனும் கதாநாயகியாக ஹீமாவும் நடித்துவந்தனர்.
இருவருக்கும் இதுதான் முதல் சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியல் இவர்கள் இருவரையும் பல ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இதன் முதல் பாகம் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது பாகம் கலர்ஸ் தமிழில் இரவு ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 2018-ல் தொடங்கி இப்போது வரை 1,000 எபிசோடுகளைக் கடந்துள்ளது.
சீரியலில் மட்டுமல்லாது நிஜத்திலும் நவீன்- ஹீமாவுக்கும் இடையில் காதல் என்று கிசுகிசு வந்த நிலையில் இருவரும் அதை மறுத்தனர். ‘எங்களுக்குள் அது போன்ற தவறான விஷயம் எதுவுமில்லை, நாங்கள் நல்ல நண்பர்கள்’ என்று பேட்டிகளில் தெரிவித்திருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் நவீனுக்கு, செய்தி வாசிப்பாளரான கண்மணியுடன் நிச்சயதார்த்தம் நிகழ்ந்தது. இந்த நிலையில் தற்போது ‘இதயத்தை திருடாதே' சீரியலிலிருந்து ஹீமா பிந்து விலகியிருப்பது ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து ஹீமா பிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘உங்கள் அனைவரின் இதயத்திலும் 'இதயத்தை திருடாதே' சஹானாவாக இடமளித்த அனைவருக்கும் நன்றி. விரைவில் அடுத்த தொடரில் சந்திப்போம்' எனக் கூறியுள்ளார்.
இது குறித்து ஹீமா பேசியபோது, "நிச்சயம் நான் சஹானா கதாபாத்திரத்தை மிஸ் செய்வேன். சஹானா கதாபாத்திரம் சரியான விஷயத்திற்காக மிகவும் தைரியமாக நேர்மையாக சண்டை போடக்கூடிய பெண். என்னுடைய உண்மையான கதாபாத்திரத்தின் இன்னொரு வடிவம்தான் சஹானா. அதன் தாக்கம் என்னுள் நிறைய இருக்கிறது. கடைசிவரை அதை நான் மறக்க மாட்டேன். எப்படி இருந்தாலும் அந்த சீரியல் ஒருநாள் முடிவடையத்தான் போகிறது. அதை நான் இப்போதே செய்துள்ளேன். நிறைய ரசிகர்கள் நான் அந்த சீரியலைவிட்டு விலகுவது குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார்கள் விரைவில் அடுத்த சீரியல் மூலம் அவர்களது அன்புக்கு நியாயம் செய்வேன்" என கூறினார்.
ஒரு நடிகர் சீரியலைவிட்டு விலக பல்வேறு காரணங்கள் இருக்கும். அவருக்கு அதைவிட நல்ல வாய்ப்புகள் கிடைத்திருக்கும் அல்லது சீரியல் டீமுக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கும் அல்லது தனிப்பட்ட காரணங்கள்கூட இருக்கலாம். இதில் எந்தக் காரணத்தின் அடிப்படையில் ஹீமா விலகியுள்ளார் என்பது குறித்து அவர் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
சீரியல் முடியப்போகிறது, கதையில் மாற்றம் என்றெல்லாம் வதந்திகள் வரும் நிலையில் இது குறித்து தொலைக்காட்சி தரப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.