திறமையான கதாநாயகர்கள், இயக்குநர்களுடன் வேலை செய்ய வேண்டும்!

‘குற்றமே குற்றம்’ திவ்யா பேட்டி
திவ்யா
திவ்யா

சின்னத்திரை டு சினிமா நட்சத்திரங்கள் பட்டியலில் திவ்யா துரைசாமியும் இணைந்திருக்கிறார். செய்தி வாசிப்பாளராக வலம் வந்தவர் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அடுத்ததாக இவர் நாயகியாக நடித்த சுசீந்திரனின் 'குற்றமே குற்றம்' தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேரடியாக சேனலில் வெளியானது. இந்த நிலையில், சின்னத்திரை அனுபவம், சினிமா பயணம் உள்ளிட்டவை குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார் திவ்யா.

சினிமாவில் பெரும்பாலும் கதாநாயகிகள் இறக்கும்படியான காட்சிகள் என்றால் சென்டிமென்ட் பார்ப்பார்கள். நீங்கள் எப்படி ‘குற்றமே குற்றம்’ படத்தில் இறக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தீர்கள்?

நான் அப்படியெல்லாம் நினைக்கவே இல்லை. அதற்கு முதல் காரணம், நான் மீடியாவில் இருந்து சினிமாவுக்குள் வந்தவள். 'எதற்கும் துணிந்தவன்' படத்திற்கு முன்பாகவே இந்தப் படத்தில் கமிட் ஆகிவிட்டேன், இதில் நடித்ததைப் பார்த்துவிட்டுத் தான் இயக்குநர் பாண்டிராஜ் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் எனக்கு வாய்ப்பே கொடுத்தார். அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம். ஆனால், இதில் கதாநாயகியே நான் தான்.

இயக்குநர் பாண்டிராஜுடன்...
இயக்குநர் பாண்டிராஜுடன்...

முதல் பட வாய்ப்புக்காக நாம் எதிர்ப்பார்த்து இருக்கும்போது, கதாநாயகி வாய்ப்பு வந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். இயக்குநர் சுசீந்திரன் படத்தில் நாயகி என்றதும் நான் கதையே கேட்கவில்லை. சுசீந்திரன் நம்மை நம்பி இந்த கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். அதை நாம் நன்றாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்குள் இருந்தது. சினிமாவில் இன்னொரு சென்டிமென்டும் உண்டு. முதல் படத்திலேயே இறப்பது போல கேரக்டர் அமைந்தால் அது அதிர்ஷ்டம். இது எனக்கு முதலில் தெரியாது. செட்டில் சொல்லி கேள்விப்பட்டேன். அந்த விதத்தில் இதை நான் பாஸிட்டிவாகவே எடுத்துக்கொள்கிறேன்.

மாதச்சம்பளம் வந்த வேலையை விட்டு விட்டு சினிமாவுக்குள் நுழைய எது உந்துதலாக அமைந்தது?

கதாநாயகி ஆக வேண்டும் என்ற விருப்பம் தான். மாதச் சம்பளம் வாங்கும்போது அதற்கேற்றாற் போல நம் வாழ்க்கையை மாற்றி வைத்திருப்போம். திடீரென அந்த பழக்கப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு இன்னொரு ஸ்டைலுக்கு மாறுவது கடினம் தான். அதற்காக, நான் அப்படி கஷ்டப்பட்டேன், இப்படி கஷ்டப்பட்டேன் என சொல்லிக்காட்ட விரும்பவில்லை.

எந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆசை உண்டு?

எந்தக் கதை சரியாக இருக்கும் என கணிக்கும் இடத்திற்கு இன்னும் வந்துவிட்டேனா எனத் தெரியவில்லை. ஆனால், திறமையான கதாநாயகர்கள், இயக்குநர்களுடன் வேலை செய்ய வேண்டும் என நினைக்கிறேன். முதலில் நமக்கான இடத்தைக் கண்டறிந்துவிட்டு அதற்கு பிறகு அடுத்த கட்டம் பற்றி யோசிப்போமே.

உங்கள் முதல் ஹீரோ ஜெய் பற்றி சொல்லுங்கள்?

படப்பிடிப்பு முழுவதுமே திண்டுக்கல்லில் சுசீந்திரன் சாருடைய வீட்டில் தான் நடந்தது. இயல்பான கிராமத்துப் பெண் என்பதால் படத்தில் எனக்கு மேக்கப் கிடையாது. யாருக்குமே கேரவன் கிடையாது என்பதால் எல்லாரும் குடும்பம் போல தான் அந்த வீட்டில் இருந்தோம். ஜெய் சூப்பரா சமைப்பார். அதே போல, அவர் ஒரு சிறந்த நடிகர். பல காட்சிகளை சிங்கிள் டேக்கிலேயே ஓகே செய்துவிடுவார். சந்தேகமே இல்லாமல் என்னுடைய முதல் ஹீரோ எப்போதுமே ஸ்பெஷல் தான். மொத்தமாகவே இந்த படம் எனக்கு ஒரு வொர்க்‌ஷாப் அனுபவம் தான்.

மீடியா, சினிமா துறை என்றாலே பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது போன்ற பொது பிம்பம் இருக்கிறது. உங்கள் அபிப்பிராயம்?

அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நானும் ஒரு இயல்பான குடும்ப பின்னணியில் இருந்து தான் வந்திருக்கிறேன். என் வீட்டில் எந்த எதிர்ப்பும் இல்லை. அதேசமயம், நீங்கள் கேட்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இதற்கு காரணம், மக்களின் புரிதல் தான். ஐடி துறை, அரசு ஊழியர்கள் என்றால் ஒரு ஊரில் பல பேர் இருப்பார்கள். அதனால் அது ஊருக்கு ஒரு பழக்கப்பட்ட வேலை. ஆனால், மீடியாவில் வேலை செய்பவர்கள் தெருவுக்கு ஒருத்தர்கூட இருக்கமாட்டார்கள். அதனால், இந்த வேலையை பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். அப்படி புரிதல் இல்லாத நபர்களால் தான் நீங்கள் கேட்ட கேள்வியே எழுகிறது என்பது என் கருத்து.

உங்களின் அடுத்த வரவுகள்..?

நான் நடித்த 'ஃபிங்கர்டிப் சீசன்2' ஓடிடியில் மே மாதம் வெளியாகிறது. அடுத்ததாக இன்னொரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறேன். இன்னொரு புராஜெக்ட் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. இப்போதைக்கு இதுதான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in