‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியும் குழந்தைப் பேறும்! - வெங்கடேஷ் பட் கருத்தால் வெடித்த சர்ச்சை

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியும் குழந்தைப் பேறும்! - வெங்கடேஷ் பட் கருத்தால் வெடித்த சர்ச்சை

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் புகழ்பெற்றது நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. சமையல் தெரிந்த போட்டியாளர்களுக்கு சமையல் தெரியாத நகைச்சுவைக் கலைஞர்கள் உதவுவது போன்று இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் வடிவமைப்பு.

இப்படியான இயல்பான நகைச்சுவையே இந்த நிகழ்ச்சியின் வெற்றி. கரோனா பொதுமுடக்க காலத்தில் இது பலராலும் பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்ற நிகழ்ச்சி. அந்த சமயத்தில் பலருக்கும் தங்களது மன அழுத்தத்தில் இருந்து மீட்டுக் கொண்டுவந்ததாக இணையதளத்தில் கருத்து தெரிவித்திருந்தனர்.

இப்பொழுது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸன் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் நேற்றைய எபிசோடில், நடுவர்களில் ஒருவரான செஃப் வெங்கடேஷ் பட், 8 வருடம் குழந்தை இல்லாமல் சிகிச்சை பெற்று வந்த தம்பதிகள் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து மன அழுத்தம் குறைந்து அதற்குப் பிறகு குழந்தைப் பேறு பெற்றதாகவும் இது இந்த நிகழ்ச்சிக்குக் கிடைத்த வெற்றி எனவும் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கருத்துதான் இப்பொழுது சமூகவலைதளத்தில் விமர்சனத்திற்கும் ட்ரோல்களுக்கும் சிக்கியுள்ளது. அதில் சிலர் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பார்த்தாலே கர்ப்பம் ஆகிவிடலாம், திருமணம் கூட தேவையில்லை’ என்ற ரீதியில் ட்ரோல்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அதே நேரத்தில், ‘குழந்தையில்லாமல் இருக்கும் தம்பதிகளுக்கு சமூகம் மற்றும் அவர்களது தனிப்பட்ட விருப்பம் காரணமாக நிச்சயம் மன அழுத்தம் இருக்கும். அப்படி இருப்பவர்கள் சிகிச்சையின்போது கண்டிப்பாக இது போன்ற நெருக்கடிகளைச் சந்திப்பார்கள். இந்த நிகழ்ச்சி அவர்களுக்குச் சிறிதளவேனும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவி இருக்கும். அந்த ரீதியிலே வெங்கடேஷ் பட் தெரிவித்திருப்பார். இதுபோன்ற காரணங்களை புரிந்துகொள்ளாமல் மேலோட்டமாக கேலி செய்வது முட்டாள்தனமானது’ எனவும் இன்னொரு தரப்பினர் தங்களது ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in