`எனக்காக அல்ல, உயிரை சுமக்கும் பெண்ணுக்காக கேட்கிறேன்'- விமர்சனத்துக்கு வெங்கடேஷ் பட் நெத்தியடி

`எனக்காக அல்ல, உயிரை சுமக்கும் பெண்ணுக்காக கேட்கிறேன்'- விமர்சனத்துக்கு வெங்கடேஷ் பட் நெத்தியடி

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவர் செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்த கருத்து ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பல கலவையான கருத்துகளை பெற்று வருகிறது. இதற்கு வெங்கடேஷ் பட் விளக்கம் கூறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் புகழ்பெற்றது நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியின் நகைச்சுவை வடிவமைப்பிற்காகவே பலரது பாராட்டுகளையும் பெற்று வந்தது. இப்பொழுது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதில், இந்த வாரத்திற்கான சனிக்கிழமை எபிசோடில், நடுவர்களில் ஒருவரான செஃப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, எட்டு வருடங்கள் குழந்தை இல்லாமல் சிகிச்சை பெற்று வந்த தம்பதிகள் மன அழுத்தம் குறைந்து அதற்கு பிறகு கருவுற்று இருந்ததாகவும் இது இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி எனவும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்துதான் இப்பொழுது சமூக வலைதளத்தில் விமர்சனத்திற்கும் ட்ரோல்களுக்கும் சிக்கியுள்ளது. அதில் சிலர் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பார்த்தாலே கர்ப்பம் ஆகிவிடலாம். திருமணம் கூட தேவையில்லை என்ற ரீதியில் ட்ரோல்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் இன்னொரு பக்கம் குழந்தையில்லாமல் இருக்கும் தம்பதிகளுக்கு சமூகம் மற்றும் அவர்களது தனிப்பட்ட விருப்பம் காரணமாக நிச்சயம் மன அழுத்தம் இருக்கும். அப்படி இருப்பவர்கள் சிகிச்சையின் போது கண்டிப்பாக இது போன்ற நெருக்கடிகளை சந்திப்பார்கள். இந்த நிகழ்ச்சி அவர்களுக்கு சிறிதளவேனும் மன அழுத்தத்தை குறைக்க உதவி இருக்கும். அந்த ரீதியிலே வெங்கடேஷ் பட் தெரிவித்திருப்பார்.

இதுபோன்ற காரணங்களை புரிந்து மேலோட்டமாக கேலி செய்து வருவது என்பது முட்டாள்தனமானது எனவும் இன்னொரு சாரர் தங்களது ஆதரவுகளை வெங்கடேஷ் பட் கருத்திற்கு தெரிவித்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு தற்போது வெங்கடேஷ் பட் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். 'கடந்த இரண்டு நாட்களாக நான் மிகுந்த கவலையில் இருந்தேன். சமூக வலைதள ட்ரோல்களுக்காக இல்லை. இது ரீதியாக வந்த ட்ரோல்கள் மூலம் மனிதம் இறந்து விட்டதே என்றுதான் கவலைப்பட்டேன். ஆனால், கடவுள் இருக்காரு குமாரு.

சந்திரமுகி படம் போல இரண்டு நாட்கள் அவர்களது ஆட்டம் இருந்தது. நல்லவர்கள் இந்த உலகில் இன்னும் இருக்கிறார்கள்" என தன்னுடைய பதிவில் கூறியதோடு 'சென்னை அப்பாடக்கர்ஸ்' பக்கத்தில் இந்த ட்ரோல் தொடர்பாக விளக்கம் கொடுத்து போடப்பட்டுள்ள மீம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்த மீமில், 'செஃப் வெங்கடேஷ் பட் கூறியுள்ளதில் எந்த தவறும் இல்லை. பல நோய்களுக்கும் மன அழுத்தம்தான் காரணமாக உள்ளது. அவர் தெளிவாக கூறியுள்ளார். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி கர்ப்பமான அந்த பெண்ணின் மன அழுத்தத்தில் இருந்து வெளிவர உதவியது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மீம் தான் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. இதை புரிந்து கொண்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார் பட். மேலும் அவர், "குழந்தை செல்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே அது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று தெரியும். அப்படி என்றால் இல்லாதவர்களை யோசித்து பாருங்கள். மீம் கிரியேட்டர்களிடம் ஒன்று கேட்டு கொள்கிறேன். எனக்காக அல்ல உயிரை சுமக்கும் பெண்ணுக்காக கேட்கிறேன். தயவுசெய்து என்னை கிண்டல் செய்வதாக எண்ணி, உங்களை தரம் தாழ்த்தி கொள்ளாதீர்கள். எனக்கும் மணம் முடித்து ஏழு ஆண்டுகள் கழித்து கிடைத்த செல்வம் என் குழந்தை. ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய் மாறியதை உணர்ந்தவன் நான்' என தன் வலியையும் அந்த பதிவில் நெகிழ்ச்சியாக பகிர்ந்து இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பட்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in