பிக் பாஸ் அல்டிமேட்: அதிரடி காட்டிய வனிதா... விதிமீறிய பாலாஜி முருகதாஸ்!

முதல்நாளிலேயே தொடங்கிய கலாட்டா
பிக் பாஸ் அல்டிமேட்: அதிரடி காட்டிய வனிதா... விதிமீறிய பாலாஜி முருகதாஸ்!

பிக் பாஸ் தமிழின் 5-வது சீசன் முடிந்த சில வாரங்களிலேயே, 'பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சி அதிரடியாகத் தொடங்கியிருக்கிறது. முதல்நாளில் என்ன நடந்தது, யாரெல்லாம் போட்டியாளர்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.

பிக் பாஸ் ஓடிடி என்பது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகாமல் நேரடியாக ஓடிடி தளங்களில் ஒளிபரப்பாகும். தமிழில் வருவதற்கு முன்பே இந்தியில் பிக் பாஸ் ஓடிடி அறிமுகப்படுத்தப்பட்டு, அங்கு ஒரு சில சீசன்கள் கடந்துவிட்டன. ஆனால் தமிழுக்கு இதுவே முதல் முறை.

பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்நிகழ்ச்சி குறித்து பிக் பாஸ் 5-வது சீசனின் இறுதி மேடையிலேயே கமல்ஹாசன் அறிவித்திருந்தார். மேலும் முந்தைய சீசன்களின் போட்டியாளர்களே இதில் கலந்துகொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

போட்டியாளர்கள் யார் யார்?

முன்பே அறிவிக்கப்பட்டது போல பிக் பாஸின் 5 சீசன்களிலும் கவனம் ஈர்த்த, ‘கன்டென்ட்’ கொடுத்த, சர்ச்சைக்குள்ளான போட்டியாளர்களே இதில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். போட்டியாளர்கள் அறிமுகத்துக்கு முன்பு பிக் பாஸ் அல்டிமேட்டின் வீட்டை, இந்த முறை நேரடியாக அல்லாமல் ட்ரோன் மூலமாக விர்ச்சுவல் ரியாலிட்டியில் பார்வையாளர்களுக்குச் சுற்றிக் காண்பித்தார் கமல்ஹாசன்.

பிக் பாஸ் 5-வது சீசன் முடிந்த உடனேயே பிக் பாஸ் அல்டிமேட் ஆரம்பிக்கப்பட்டதால், அந்த வீட்டில் அதிக மாற்றங்கள் இல்லாமல் சிகப்பு மற்றும் தங்க நிறங்கள் அதிகம் ஆக்கிரமித்து இருக்கும்படியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நுழைவில் 5 என்ற எண்ணுக்கு பதிலாக அல்டிமேட் என்பதை குறிக்கும் விதமாக ஸ்டாரும் வைத்திருக்கிறார்கள். வனிதா, அனிதா, சிநேகன், தாடி பாலாஜி, சுஜா வருணி, பாலாஜி, நிரூப், சுருதி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷாரிக், தாமரை செல்வி, ஜூலி, அபிநய், அபிராமி ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளே நுழைந்தனர்.

இவர்கள் முந்தைய சீசனில் எப்படி இருந்தார்கள், நழுவவிட்ட வெற்றியை பிடிக்க இந்த முறை என்ன மாதிரியான திட்டங்கள் வைத்திருக்கிறார்கள், பிக் பாஸ் முடித்து வெளியே போனபோது எதிர்கொண்ட விமர்சனங்களை எப்படி சமாளித்தார்கள் எனும் கேள்விகளைப் போட்டியாளர்களிடம் முன்வைத்தார் கமல். மேலும் ஒவ்வொருவருக்கும் தேன், நெய், கீரை, சீரகம், உப்பு என ஒவ்வொரு வகையான பொருட்களைக் கொடுத்த கமல், அவற்றின் சிறப்புகளைப் போட்டியாளர்களோடு இணைத்துச் சொன்னார்.

ஆரம்பத்திலேயே சர்ச்சைகள்

24 மணி நேரமும் எந்தவிதமான எடிட்டிங்கும் இல்லாமல் ஒளிபரப்பு எனும்போது, பிக் பாஸ் அல்டிமேட்டில் சர்ச்சைக்குக் குறைவேது? முதல்நாளிலேயே சலசலப்பு தொடங்கிவிட்டது. முன்பெல்லாம் புகைபிடிக்கும் காட்சிகள், அநாகரிகமான வார்த்தைகள் பேசுவது போன்றவற்றை ஒளிபரப்பாமல் இருந்தார்கள். ஆனால், இப்போது அல்டிமேட்டில் அபிநய், அபிராமி, நிரூப் என இவர்கள் புகைபிடிக்கும் காட்சிகள் ஒளிபரப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

அதேபோல, வீட்டுக்குள் நுழைந்த போதே ‘தடை செய்யப்பட்ட ஏரியா’ என சொல்லப்பட்ட படுக்கை அறைக்குள் பாலாஜி உள்ளே நுழைந்தார். முதல்நாளே நாமினேஷன் தொடங்க அதில் வனிதா, அனிதா, ஜூலி பெயர்கள் அதிகம் வந்ததைப் பார்க்க முடிந்தது. முதல் வாரத்தின் தலைவராக ஷாரிக் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க, அவர் வனிதாவுடன் விவாதம் செய்வது போன்ற ப்ரொமோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் அல்டிமேட்டில் இனி என்னென்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in