‘ஒட்டுமொத்த நாடகக் கலைஞர்களுக்கும் கிடைக்க வேண்டிய மரியாதை இது’ - மனம் திறந்த தாமரை

‘ஒட்டுமொத்த நாடகக் கலைஞர்களுக்கும் கிடைக்க வேண்டிய மரியாதை  இது’ - மனம் திறந்த தாமரை

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் கிடைத்த புகழ், ஜேம்ஸ் வசந்தன் கட்டிக் கொடுத்த வீடு எனப் பல்வேறு மகிழ்ச்சி தருணங்கள் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார் தாமரை.

பிக் பாஸ் மூலம் பிரபலமாவதற்கு முன்பு தனது கலையுலக வாழ்க்கை எப்படி இருந்தது, அதில் தனது கணவர் எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்தார் என்பதைப் பற்றி அந்தப் பேட்டியில் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

“பிக் பாஸ் வாய்ப்பு முதலில் எனக்கு வந்தபோது அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கினேன். ஆனால் போய்த்தான் பார்க்கலாமே என்று என் கணவர் கொடுத்த ஊக்கத்தால்தான், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தேன். அதுவரை நான் நாடகங்களை அரங்கேற்றி நடித்துக்கொண்டிருக்கிறேன் என்பது என் கணவரைத் தவிர என் குடும்பத்தில் உள்ள வேறு யாருக்குமே தெரியாது. என் கணவருக்கு என் வேலை பற்றியும் என்னைப் பற்றியும் நன்றாகத் தெரியும். ஆனால் குடும்பத்தில் உள்ளவர்களும் அவரைப் போலவே என்னைப் புரிந்துகொள்வார்களா என்பது தெரியாது அல்லவா! எனவே, நான் கச்சேரி போன்றவற்றைச் செய்துவருவதாக மட்டுமே குடும்பத்தில் என் கணவர் சொல்லியிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போன பின்புதான், என்னுடைய வேலை என்ன என்பது குடும்பத்தாருக்குத் தெரியவந்தது. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எங்கள் அம்மாவிற்கு வீடு கட்டித் தருவதாகச் சொன்னது நாங்கள் முற்றிலும் எதிர்பாராதது. இதற்கு முன்னர் நிறைய ரசிகர்கள் எங்களுக்கு உதவி செய்ய முன்வந்தபோது வேண்டாம் என்று மறுத்துவிட்டோம். ஏனென்றால், சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டோம் இனி நாங்களே வீடு கட்டிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் இருந்தோம். ஆனால் ஜேம்ஸ் வசந்தன் எங்களிடம் வந்து, ‘உங்களுக்கு நாங்கள் எதுவும் செய்யப் போவதில்லை. அம்மாவின் நிலைமையைப் பார்த்து ரசிகர்கள் உதவ முன்வந்திருக்கிறார்கள். மறுக்க வேண்டாம்’ என்றார். அவருக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி!" என்று கூறியிருக்கிறார் தாமரை.

பிக் பாஸ் அல்டிமேட் வாய்ப்பு பற்றி கூறும்போது, “இந்த முறை வாய்ப்பைத் தவறவிட வேண்டாம் என்று நான் நினைத்தேன். என் மகன் என்னைப் பிரிந்திருக்க வேண்டுமே என என் கணவர் தயங்கினார். ஆனால் இன்னும் மூன்று மாதம்தானே என்று நான் அல்டிமேட்டில் கலந்துகொள்ள முடிவெடுத்தேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில், ப்ரியங்கா, ராஜு ஆகியோருடன் தாமரை நெருங்கிய நட்பில் இருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களுடன் பேசிவிட்டீர்களா எனும் கேள்விக்கு, "நிகழ்ச்சியில் நாங்கள் பேசினோம். பின்பு வெளியே வந்த பிறகு தனிப்பட்ட முறையில் எதுவும் பேசவில்லை. இப்பொழுது பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் பார்த்து பேசிக்கொள்வதோடு சரி" என்று தாமரை பதிலளித்தார்.

மேலும், “என் மகனிடம் தொலைபேசியிலும் வீடியோ காலிலும் பேசிவருகிறேன். சீக்கிரம் சென்று அவனைப் பார்க்க வேண்டும்” என்று கூறிய தாமரை, “பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் எனக்கு மரியாதை கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு நாடகம் போடும் இடங்களில் நாட்டியக்காரி... நாடகக்காரி என்றுதான் என்னை அழைப்பார்கள். ஆனால் இப்போது, மேடம்... அக்கா என மரியாதையாக அழைப்பது மகிழ்ச்சி தருகிறது. இது எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடகக் கலைஞர்களுக்கும் கிடைக்க வேண்டிய மரியாதையாகப் பார்க்கிறேன்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in