அன்னையர் தினத்தில் சொந்த வீடு: அனிதா நெகிழ்ச்சி!

அன்னையர் தினத்தில் சொந்த வீடு: அனிதா நெகிழ்ச்சி!

செய்தி வாசிப்பாளராகப் பிரபலமான அனிதா சம்பத், பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீஸனில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த தான் மீடியாவுக்குள் நுழைந்தது, தனது குடும்பம், அதன்பிறகு மீடியாவுக்குள் தனக்கான இடத்தைப் பிடித்தது என அந்த சீஸனில் பல நெகிழ்ச்சியான விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார். அந்த சீஸனில் கலந்துகொண்டபோதுதான் அவரது தந்தை சம்பத் எதிர்பாராத விதமாகக் காலமானார். அதிலிருந்து மீண்டு வந்து பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கலந்துகொண்டார் அனிதா.

செய்தி வாசிப்பாளர் பணியைச் சிறிது காலம் தொடரப்போவதில்லை என்று சொன்னவர் இப்போது தன்னுடைய யூடியூப் சேனல், விஜய் டிவி நிகழ்ச்சிகள் என பிஸியாக இருக்கிறார்.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த தனக்கு சொந்த வீடு எப்போதுமே கனவு என்றவர் இப்போது சொந்த வீடு வாங்கி இருக்கிறார். இது குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தனது கணவர் பிரபாவின் படத்துடன் ஒரு பதிவை எழுதியிருக்கிறார். ‘வீடு எப்போதுமே எங்க ரெண்டு பேருக்கும் மிகப்பெரிய கனவு. வாடகை வீட்டிலேயே நல்ல வீடு கிடைக்காதா, பெட்ரூம் வச்ச வீட்டுக்குப் போக மாட்டோமோ என ஏங்கிய காலம் இருக்கு. ஓட்டு வீட்டுல பிறந்து வளர்ந்த பிரபாவுக்கும் அதேதான். இன்னைக்கு எங்களுக்குப் பிடிச்ச மாதிரி எங்களுக்காக ஒரு வீடு. நிறைய வலிகளும் நிறைய உழைப்பும் நிறைய மெனக்கெடல்களும் கடந்து அன்னையர் தினம் அன்று எங்கள் அன்னையர்களுக்காக அவர்களின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிவிட்டோம். நம் எல்லாருடைய வாழ்க்கையும் ஒரு நாள் நமக்கு பிடித்த மாதிரி மாறும் இல்லையா? அதை நான் இன்னும் வலிமையாக நம்புகிறேன். இதைப் படிக்கற நீங்க எல்லாருமே சீக்கிரம் வீடு வாங்க எங்களது அன்பான வாழ்த்துகள்' என்று அந்தப் பதிவில் கூறியிருக்கிறார்.

அதே போல, வீடு வாங்குவதை சாத்தியமாக்க காரணமாக இருந்த தனது கணவர் பிரபாவையும் குறிப்பிட்டு, 'இதைச் சாத்தியமாக்கியதற்கு நன்றி பாப்பு. என்னுடைய கடினமான சூழலில் என்னுடன் இருப்பதற்கு நன்றி. நேர்மறையான எண்ணங்கள் மட்டுமே நமது புது வீட்டில் இருக்கிறது. நம்முடைய காதலை மீண்டும் புதிதாக இங்கிருந்து தொடங்குகிறோம். நாங்கள் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை மட்டுமே இங்கே அழைத்தோம். வந்து சிறப்பித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார் அனிதா.

பல பிரபலங்களும் ரசிகர்களும் அனிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.