‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி நியூ என்ட்ரி!- களை கட்டும் ‘குக் வித் கோமாளி’ சீசன்3

கலக்கும் புது கோமாளிகள் vs போட்டியாளர்கள்
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் புகழ் ரோஷினி
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் புகழ் ரோஷினிtwitter

சின்னத்திரை ரசிகர்களிடையே புகழ் பெற்ற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ தனது மூன்றாவது சீசனை தொடங்கி இருக்கிறது. கொஞ்சம் சமையல் நிறைய நகைச்சுவை என்பதே இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே வரவேற்பு பெற காரணம். சமையல் கலையில் கலக்கும் போட்டியாளர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்ய சமையலே தெரியாமல் தொல்லை கொடுக்கும் நகைச்சுவை கோமாளிகள் என நகரும் நிகழ்ச்சிக்கு நடுவர்களாக செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு இருவரும் கூடுதல் கலகலப்பு கொடுத்தனர்.

இரண்டு சீசன்கள் வெற்றி பெற்ற நிலையில், எட்டு மாதங்களுக்கு பிறகு மூன்றாவது சீசன் தற்போது தொடங்கி இருக்கிறது. இந்த மூன்றாவது சீசனின் முதல் எபிசோட் கடந்த சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30க்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. கடந்த இரண்டு சீசன்களில் வழக்கமாக எட்டு போட்டியாளர்கள், எட்டு கோமாளிகள் இருப்பார்கள். ஆனால் இந்த மூன்றாவது சீசனில் பத்து போட்டியாளர்கள், பத்து கோமாளிகள் களம் இறங்கியுள்ளனர். வழக்கம் போலவே இந்த சீசனையும் ரக்‌ஷன் தொகுத்து வழங்க முதல் இரண்டு கோமாளிகளாக ஷக்தி மற்றும் பாலாவை வரவேற்றார்.

மணிமேலை
மணிமேலை

அடுத்து அதிரடியாக மணிமேகலையும், சுனிதாவும் வர ‘செல்லம்மா செல்லம்மா…’ பாடலோடு கலக்கலான எண்ட்ரி கொடுத்தார் சிவாங்கி. ஷக்தி, பாலா, மணிமேகலை, சுனிதா, ஷிவாங்கி என பழைய சீசன்களின் கோமாளிகள் மூன்றாவது சீசனிலும் இருக்க ஷரத், புகழ், மதுரை முத்து மிஸ்ஸிங். சிறப்பு விருந்தினர்களாகவோ அல்லது இன்னும் சில எபிசோட்டுகள் போன பின்போ வருவார்கள் என சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சீசனில் இவர்களை மிஸ் செய்வதாக ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த மூன்றாவது சீசனில் புது கோமாளிகளாக சூப்பர் சிங்கர் புகழ் பரத், மூக்குத்தி முருகன், குரேஷி, அதிர்ச்சி அருண், டிக்டாக் பிரபலம் சீதாள் கிளாரின் ஆகியோர் வந்துள்ளனர். அடுத்ததாக போட்டியாளர்கள் அறிமுகம். வழக்கமாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இளைஞர்களிடையே பிரபலமாக இருக்கும் சீரியல் சினிமா பிரபலங்கள், காமெடியன், பின்னணி பாடகர்கள், விஜய் டிவி பிரபலங்கள் என போட்டியாளர்கள் தேர்வு கலவையாக இருக்கும். அதுவே இந்த சீசனிலும் தொடர்ந்திருக்கிறது.

சிவாங்கி
சிவாங்கி

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் புகழ் ரோஷினி, ‘சார்பட்டா’ படப்புகழ் சந்தோஷ், காமெடி நடிகை வித்யுலேகா, பின்னணி பாடகர் அந்தோணி தாசன், மறைந்த நகைச்சுவை நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தியும் நடிகையுமான ஸ்ருதிகா, நகைச்சுவை நடிகர் மனோபாலா, ராகுல் தாத்தா ஆகிய ஏழு பேர் இந்த முதல் இரண்டு எபிசோடுகளில் அறிமுகமானார்கள். ரோஷினி, சந்தோஷ், வித்யுலேகா, அந்தோணி தாசன், மனோபாலா என முதல் ஐந்து போட்டியாளர்கள் அறிமுகத்துக்கு பின் முதல் அறிமுக சுற்றுப்போட்டியை நடுவர்கள் தொடங்கி வைத்தனர்.

இனிப்பு வகைகளை எடுத்து கோமாளிகள் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடன் இணைந்து சமைக்க வேண்டும். இதில் ரோஷினிக்கு குரேஷி, சந்தோஷூக்கு மணிமேகலை, வித்யுலேகாவுக்கு அந்தோணி தாசன், மனோபாலாவுக்கு சிவாங்கி என முதல் சுற்றே கலகலப்பாக இருந்தது. கத்திரிக்காய் வைத்து அனைவரும் தங்களுக்கு பிடித்த வித்தியாசமான உணவை சமைக்க வேண்டும். வித்யுலேகா ஆல்பெர்ஜின் லசானியா, சந்தோஷ்- சிக்கன் செட்டிநாடு மசாலா, ரோஷினி- சிக்கன் மீட் பால் ஸ்பெகடி, ஆண்டனி தாசன் – கத்திரிக்காய் தொக்கு ஆகிய உணவுகளை சமைத்தனர். இதில் ஆண்டனி தாசன், சந்தோஷ் இருவரும் அருமையாக சமைத்ததாக நடுவர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

செஃப் தாமு, வெங்கடேஷ்
செஃப் தாமு, வெங்கடேஷ்

அடுத்த ஐந்து போட்டியாளர்கள் அறிமுகத்தில் இரண்டு பேர் மட்டும் இந்த வாரம் அறிமுகப்படுத்தினார்கள். அதன்படி, ஸ்ருதிகா மற்றும் ராகுல் தாத்தா இருவரையும் நிகழ்ச்சிக்கு வரவேற்றார்கள். மீதமுள்ள மூன்று போட்டியாளர்களான பின்னணி பாடகியான கிரேஸ் கருணாஸ், நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை அம்மு அபிராமி இவர்களது அறிமுகம் அடுத்த வாரம் எதிர்ப்பார்க்கலாம்.

சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியில் சர்ச்சைகள் இல்லாமல் எப்படி? நேற்று ஒளிபரப்பான எபிசோடில் நகைச்சுவைக்காக கோமாளி பரத்தை செஃப் வெங்கடேஷ் பட் குச்சியை எடுத்து அடிப்பதும் துரத்துவதுமாக இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அருண், சிவாங்கியிடம் நிஜமாகவே அடிக்கிறாரா என கேட்க, இல்லை இல்லை நிகழ்ச்சி நகைச்சுவைக்காக அப்படி பொய்யாக அடிப்பது என சிவாங்கி விளக்கம் கொடுத்து கொண்டிருந்தார். இதனை அடுத்து, வெங்கடேஷ் பட் நிஜமாகவே பரத்தை அடித்தாரா என தற்போது சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘இதெல்லாம் நிகழ்ச்சியின் நகைச்சுவைக்காக மட்டுமே, மற்றபடி நிஜமாக அடிப்பதோ மனம் புண்படியாக நடந்து கொள்வதோ இங்கு இருக்காது’ என இந்த சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ் பட் விளக்கம் கொடுத்துள்ளார். இதனையே நிகழ்ச்சி துவங்கும் போதும் குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in