நானும் ஷபானாவும் சேர்ந்து நடிக்கக் காத்திருக்கிறேன்!

’மீனாட்சி பொண்ணுங்க’ ஆர்யன் பேட்டி

நானும் ஷபானாவும் சேர்ந்து நடிக்கக் காத்திருக்கிறேன்!

’பாக்கியலட்சுமி’ சீரியலில் செழியன் கேரக்டர் மூலம் பரவலாக அறியப்பட்டவர் நடிகர் ஆர்யன். தற்போது ஜீ தமிழ் சேனலில் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலில் வெற்றி கேரக்டரில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

“ஒரு கமர்ஷியலான சினிமாவைப் போலவே ’மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலும் ஒரு கமர்ஷியலான, பார்வையாளர்களுக்கு பிடிக்கும் படியான ஒரு சீரியல்” என என்ஜியாகப் பேச ஆரம்பித்தார் ஆர்யன். காமதேனு மின்னிதழுக்காக அவரிடம் தொடர்ந்து பேசியதிலிருந்து...

செழியன் கேரக்டர் டூ வெற்றி கேரக்டர்... எப்படி கிடைத்தது இந்த வாய்ப்பு?

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து வெளியே வந்ததுமே மூன்று மாதங்கள் எந்த ஒரு சீரியலுமே நடிக்காமல் பிரேக்கில் தான் இருந்தேன். இடையில் ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் மட்டும் தான் நடித்து கொண்டிருந்தேன். அதிலுமே நான் முழுவதும் வர மாட்டேன். அந்தக் கதையில் பள்ளி மாணவர்கள் தான் கதாநாயகர்கள். அப்படி இருக்கும் போது ஜீ தமிழில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. இந்த கதை பற்றி என்னிடம் பேசினார்கள்.

’பாக்கியலட்சுமி’ முடித்ததும் வேறு ஒரு புராஜெக்ட் வாய்ப்பு கிடைத்தால் நடிக்கலாம் என்று தான் நினைத்திருந்தேன். அப்படி அமைந்த முதல் வாய்ப்பு ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல் தான். கதையும் அதன் களமும் எனக்கு பிடித்திருந்தது. ’வெற்றி’ போல எல்லா விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதும் என்னுடைய நீண்ட நாள் விருப்பம். அதற்கான வாய்ப்பு தற்போது அமைந்ததும் நான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன்.

வெற்றிக்கான ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது?

சீரியல் ஆரம்பித்து இரண்டு வாரங்கள் தான் ஆகிறது. முன்பு நான் நடித்து வந்த கதாபாத்திரங்களில் இருந்து இந்த வெற்றி கதாபாத்திரத்தின் தோற்றம் முற்றிலும் வேறானது. அது பற்றி நண்பர்கள் பாராட்டினார்கள். சமூக வலைதளங்களிலும் வெற்றி கதாபாத்திரம் பிடித்திருப்பதாக ரசிகர்களிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது.

‘மீனாட்சி பொண்ணுங்க’ கதை சீரியல் பெண்களை மையப்படுத்திய ஒன்று எனும் போது கதை குறித்தும் உடன் நடிப்பவர்கள் பற்றியும் கூறுங்கள்?

ஆமாம், நீங்கள் சொல்வது போல இது பெண்களை மையப்படுத்திய சீரியல் தான். இதில் நடிக்கும் அனைவருடனும் நான் முதல் முறையாக வேலை செய்கிறேன். இதில் சீனியர் என்றால் அர்ச்சனா மேம் தான். அவருடன் ஒரு காட்சி நடித்திருக்கிறேன். அவருடன் இணைந்து நடிக்கும்படியான காட்சிகள் அதிகம் இன்னும் வரவில்லை. அவருடன் நடிப்பது நிச்சயம் எனக்கு புதுவிதமான அனுபவமாக இருக்கும் என நினைக்கிறேன். நிறைய கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் எனக்குக் கிடைக்கும். அதற்காக நான் காத்திருக்கிறேன்.

மற்றவர்களும் எனக்கு நன்றாக செட் ஆகிவிட்டார்கள். எல்லோருமே எங்களின் முழு உழைப்பையும் நேரத்தையும் கொடுத்து நடித்து வருகிறோம். நிச்சயம் அது ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் சுயநலமான கதாபாத்திரம், வெற்றி கதாநாயகன், ’கனா காணும் காலங்க’ளில் வில்லன் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் உண்டு?

இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என்றில்லை. எது கிடைத்தாலும் அதை முயற்சி செய்து பார்த்து அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். இன்று எதாவது ஒன்று புதிதாக செய்திருக்கிறோம் என்ற திருப்தி இல்லை என்றால் நான் வருத்தப்படுவேன். அது எந்த கதாபாத்திரத்தில் எனக்கு கிடைத்தாலும் ஓகே தான். ‘கனா காணும் காலங்கள்’ சீரியலை எடுத்துக்கொள்ளுங்கள்... அதில் எனக்கு வில்லன் கதாபாத்திரம் தான். எதுவாக இருந்தாலும் சரி என்று தான் நினைப்பேன்.

சமீபத்தில் ‘செம்பருத்தி’ சீரியல் நிறைவடைந்துள்ளது. நீங்களும் ஷபானாவும் சேர்ந்து எப்போது நடிப்பீர்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறதே..?

தனிப்பட்ட முறையில் நானுமே அதைத் தான் எதிர்ப்பார்த்து இருக்கிறேன். இதை என்னுடைய சமூக வலைதள பக்கத்திலேயே தெரிவித்து இருக்கிறேன். ஆனால், அதை நேரமும் சூழ்நிலையும் தான் முடிவு செய்ய வேண்டும் இல்லையா? அதற்காகத்தான் காத்திருக்கிறேன்.

‘பாக்கியலட்சுமி’ சீரியல் இப்போதும் பார்க்கிறீர்களா?

கண்டிப்பாக! சமீபத்தில் கோபி கதாபாத்திரம் பற்றிய உண்மை வெளியே வந்தது. பாக்கியலட்சுமி மட்டுமல்லாது நான் நடித்த தொடர்களின் மகா சங்கமம் எபிசோடுகளையும் பார்த்து வருகிறேன். நாம் நடித்த சீரியல் என்பதால் எப்போதுமே அதை எல்லாம் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

சமூக வலைதளங்களில் சில சமயங்களில் ஆக்டிவாக இருக்கிறீர்கள். திடீரென காணாமல் போய் விடுகிறீர்கள். ஏன்?

எனக்கு தோன்றினால் மட்டுமே அதை உபயோகிப்பேன். தினமும் எதாவது போட வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லையே! எனக்கு ஆர்.ஜே. போன்ற விஷயங்கள் செய்து பார்க்க விருப்பம் உண்டு. லாக்டவுண் சமயத்தில் அது போல செய்து பார்த்தேன். இப்போது அதை சமூக வலைதளங்களிலும் பயன்படுத்தி பார்த்தேன். அதற்கான நேரமும் வாய்ப்பும் கிடைக்கும் போது நிச்சயம் அதிலும் ஈடுபடுவேன் என நினைக்கிறேன்.

’பாக்கியலட்சுமி’ சீரியல் தான் உங்களுக்கு பரவலான அறிமுகம் கொடுத்தது. எப்படி இந்த நடிப்புத் துறைக்குள் நுழைந்தீர்கள்?

கடந்த 2019-ல் மிஸ்டர் செளத் இந்தியா என்ற மாடலிங் நிகழ்ச்சி ஒன்றில் எதேச்சையாக, நண்பன் ஒருவனின் உந்துதலால் கலந்து கொண்டேன். அதில் நான் எதிர்பாராமல் வெற்றியும் பெற்று விட்டேன். என்னால் அதை நம்பவே முடியவில்லை. அந்த நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரத்திலேயே விஜய் டிவியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்த சமயத்தில் உண்மையிலேயே எனக்கு மிக பெரிய வாய்ப்பு அது. யாரிடமும் இது குறித்து கலந்து ஆலோசிக்க கூட இல்லை. உடனே, சரி என வாய்ப்பை ஒத்துக்கொண்டேன். அதற்கு முன்பு வரை ஃபிட்னஸில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நான் இப்படித்தான் அதிர்ஷ்டவசமாக மீடியாவுக்குள் நுழைந்தேன். இப்போது எல்லாம் நல்லபடியாகவே போய்க் கொண்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in