சினிமாவில் நடிக்கிறீர்களா?- ரசிகர்களின் கேள்விக்கு விஜே மணிமேகலை பளிச் பதில்!

சினிமாவில் நடிக்கிறீர்களா?- ரசிகர்களின் கேள்விக்கு விஜே மணிமேகலை பளிச் பதில்!

சினிமாவில் நடிக்க இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு விஜே மணிமேகலை ஓப்பனாக பதிலளித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் விஜேவாக புகழ் பெற்றவர் மணிமேகலை. இப்போது விஜய் தொலைக்காட்சியின் ‘குக் வித் கோமாளி’ சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பலருக்கும் பிடித்த கோமாளியாக இருக்கிறார். தனது யூடியூப் சேனலில் தொடர்ந்து வீடியோக்கள் பதிவிடுவது, சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள், ரீல்ஸ், கலந்துரையாடுவது என எப்போதும் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பவர் மணிமேகலை. அந்த வகையில் இப்போது சமீபத்தில் அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதில் அளித்து இருக்கிறார்.

அதில் ரசிகர் ஒருவர், ‘நீங்கள் விரைவில் சினிமாவில் நடிக்க இருக்கிறீர்களா?’ என்ற கேள்வியை எழுப்பி உள்ளார். இதற்கு பதிலளித்துள்ள மணிமேகலை, ‘நடிப்பதற்கு எனக்கு எப்போதும் ஆர்வமே இருந்தது இல்லை. அதுவும் இல்லாமல் நடிப்பும் எனக்கு வராது’ என பதிலளித்துள்ளார்.

இன்னொருவர், ‘நான் பார்த்த வரை எந்த ஒரு நெகட்டிவான விஷயத்தையும் நீங்கள் பாசிட்டிவாக அணுகுகிறீர்கள். எப்படி இவ்வளவு பாசிட்டிவாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்டுள்ளார்.

‘நாம் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை மற்றவர்களுடைய கமென்ட் மூலமாகவோ அல்லது அவர்களுடைய கருத்து மூலமாகவோ முடிவு செய்ய நாம் விடக்கூடாது. நம் மகிழ்ச்சியையும் மனநிலையையும் நாம் தான் முடிவு செய்ய வேண்டும். நான் எப்போதும் அதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பேன்’ என கூறியுள்ளார்.

அதே போல மணிமேகலையிடம், ‘நீங்கள் சுறுசுறுப்பான நபர். எப்படி அப்படி இருக்கிறீர்கள்?’ என ரசிகர் கேட்டிருக்கிறார். அதற்கு, ‘நான் இயல்பிலேயே அப்படியான ஒரு நபர் தான். நானும் பரபரப்பாக இருப்பேன். சுறுசுறுப்பாக இருப்பவர்களையும் எனக்கு பிடிக்கும்’ என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தான் மணிமேகலை தன்னுடைய பிறந்தநாளையும் தன் கணவர் ஹூசைன் பிறந்தநாளையும் தனது சொந்த கிராமத்தில் கொண்டாடினார். தன்னுடைய கணவர் பெயரை ‘க்ரஷ்’ என மொபைலில் சேவ் செய்து வைத்துள்ளதாகவும் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் மணிமேகலை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in